Published:Updated:

சென்னை: நடிகர் கௌதம் கார்த்திக்கிடம் செல்போன் பறித்தவர்கள் சிக்கியது எப்படி?

சென்னை ஆழ்வார்பேட்டையில் சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபட்ட நடிகர் கௌதம் கார்த்திக்கின் விலையுயர்ந்த செல்போனைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் பிடித்து விசாரித்துவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இவர், கடந்த டிசம்பர் 2-ம் தேதி ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் அதிகாலையில் சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த செல்போன் திருடர்கள், நடிகர் கௌதம் கார்த்திக்கின் செல்போனைப் பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து கௌதம் கார்த்திக் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் ஐஎம்இஐ நம்பர் மூலம் சைபர் க்ரைம் போலீஸார் செல்போனைத் தேடிவந்தனர்.

கௌதம் கார்த்திக்
கௌதம் கார்த்திக்

இந்தநிலையில் கௌதம் கார்த்திக்கிடம் செல்போன் பறித்துச்சென்றவர்கள் குறித்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்தபோது திருட்டில் ஈடுபட்டவர்கள், மயிலாப்பூர் குயில் தோட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சரத் இருவரும்தான் எனத் தெரியவந்தது. மேலும், திருட்டு செல்போனை விலைக்கு வாங்கியதாக ராயப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த பைரூஸ்கான் என்பவரிடமும் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``நடிகர் கௌதம் கார்த்திக்கின் செல்போன் ஐஎம்இஐ நம்பர் மூலம் நாங்கள் விசாரித்துக்கொண்டிருந்தோம். இந்தச் சமயத்தில் திருட்டுப்போன செல்போனில் புதிய சிம்கார்டு ஒன்று பயன்படுத்தப்பட்ட தகவல் சைபர் க்ரைம் போலீஸாருக்குக் கிடைத்தது. இதற்கிடையில் சிசிடிவி மூலம் செல்போனைத் திருடியவர்களைத் தேடிவந்தோம். ஐஎம்இஐ மூலம் கிடைத்த தகவலின்படி ராயப்பேட்டையைச் சேர்ந்த பைரூஸ்கானைப் பிடித்தோம். அவர் அளித்த தகவலின்படி குயில் தோட்டத்தைச் சேர்ந்த இருவரைப் பிடித்து விசாரித்துவருகிறோம்’’ என்றனர்.

Vikatan
கெளதம் கார்த்திக்
கெளதம் கார்த்திக்

விசாரணையின்போது ``நாங்கள் திருடிய செல்போன், நடிகர் கெளதம் கார்த்திக்குரியது எனத் தெரியாது. வழக்கம்போல செல்போனைத் திருடி விற்றோம்" எனக் காவல் நிலையத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாக போலீஸார் கூறினர். தொடர்ந்து அவர்களிடம் எவ்வளவு ரூபாய்க்கு செல்போனை விற்றார்கள், அவர்கள் மீது வேறு ஏதாவது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றனவா என மயிலாப்பூர் போலீஸார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். விசாரணைக்குப் பிறகு சிறுவனை சீர்திருத்தப்பள்ளியிலும், சரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர்.

நடிகர் கௌதம் கார்த்திக்கிடம் செல்போன் கிடைத்த தகவலை போலீஸார் கூறியிருக்கின்றனர். சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு செல்போனை கெளதம் கார்த்திக்கிடம் போலீஸார் ஒப்படைக்க முடிவு செய்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு