Published:Updated:

`ஃபீஸ் கட்டலன்னா படிக்க முடியாது!'‍- சினிமா ஆசைகாட்டி மாணவரிடம் லட்சத்தைச் சுருட்டிய நடிகர், தந்தை

சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி கல்லூரி மாணவரிடம் மோசடி செய்த நடிகரையும், அவரின் தந்தையான தி.மு.க பிரமுகரையும் அதிரடியாகக் கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை.

நடிகர் கவித்ரன்
நடிகர் கவித்ரன்

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த எஸ்.எஸ்.கண்ணன் என்பவர் தி.மு.க-வில் சேப்பாக்கம் பகுதியின் வட்டச் செயலாளராக பதவி வகித்துவருகிறார். இவர் தன் மகன் கவித்திரனை கதாநாயகனாக நடிக்க வைத்து `நம்ம கத’ என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார். அந்தத் திரைப்படம் சில திரையரங்குகளில் ஒன்றிரண்டு நாள்கள் மட்டுமே ஓடிய நிலையில், `ரூட்டு' என்ற திரைப்படத்தை தயாரிப்பதாக விளம்பரங்கள் வெளியானது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (21) என்ற இளைஞர் கொடுத்த மோசடி புகாரின் அடிப்படையில், எஸ்.எஸ். கண்ணன் மற்றும் கவித்திரனை கைது செய்த திருவல்லிக்கேணி காவல்துறையினர் அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர்.

எஸ்.எஸ்.கண்ணன்
எஸ்.எஸ்.கண்ணன்

அந்த விசாரணையில் வெளியான தகவல்கள் அப்படியே இங்கு. `சின்னசேலத்தைச் சேர்ந்த மாணவர் மூர்த்தி கடந்த 2017-ம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கும் விடுதி ஒன்றில் தங்கி விஷுவல் கம்யூனிகேஷன் படித்துக்கொண்டிருந்தார். அப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த எஸ்.எஸ்.கண்ணனின் மகன்களான கவித்ரன், நிகவித்ரன் என்ற இருவரும் மூர்த்திக்கு நண்பர்களாகியிருக்கின்றனர். அப்போது தங்களது தந்தையின் அறுவை சிகிச்சைக்குத் தேவையான ரூ.1,50,000 பணத்தைக் கொடுத்தால் ஒரே வாரத்தில் திருப்பித் தந்துவிடுவதுடன், தாங்கள் புதிதாக தயாரித்து வரும் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுப்பதாகவும் கூறி மூர்த்தியை அணுகியிருக்கிறார்கள் கவித்திரனும், நிவித்திரனும்.

ரூ.10-க்கு கிஃப்ட் வவுச்சர்... ரூ.1.6 லட்சம் மாயம்! - கே.ஒய்.சி மோசடி உஷார்!

அதை அப்படியே நம்பிய மூர்த்தி, தான் பகுதி நேர வேலை பார்த்து சேமித்து வைத்திருந்த ரூ.1,30,000 பணத்தை அவர்களிடம் கொடுத்திருக்கிறார். ஆனால், சொன்னபடி கவித்ரன் சகோதரர்கள் பணத்தைக் கொடுக்காததால் அதிர்ச்சியடைந்த மூர்த்தி அவர்களை செல்போனில் தொடர்புகொண்டு, ``அந்தப் பணம் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு கட்டணத்துக்காக கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருந்தது. அது இல்லையென்றால் என்னால் படிப்பைத் தொடர முடியாது” எனக் கேட்டிருக்கிறார்.

கைதான தந்தை, மகன்
கைதான தந்தை, மகன்

ஆனால், இதோ அதோ என்று கவித்திரன் தரப்பு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதால் தனது படிப்பைத் தொடர முடியாமல், சொந்த ஊருக்குத் திரும்பிய மூர்த்தி கூலி வேலைக்குச் சென்றதோடு, பணத்துக்காக தினமும் கவித்திரனைத் தொடர்புகொண்டு வந்திருக்கிறார். அப்போது உடனே தந்துவிடுகிறேன் என்ற பதிலையே கவித்ரன் திரும்பத் திரும்பக் கூறியதால் அவரின் அப்பா எஸ்.எஸ்.கண்ணனைத் தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது மூர்த்தியை தகாத வார்த்தைகளால் வசைபாடியிருக்கிறார் எஸ்.எஸ்.கண்ணன்.

மூர்த்தியும் எஸ்.எஸ்.கண்ணனும் பேசியதாகக் கூறப்படும் அந்த ஆடியோவில், `என்ன எப்போது பார்த்தாலும் பணம் பணம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறாய். நான் ஒரு மாதியான ஆளு. ஊருவிட்டு ஊரு வந்து யாரிடம் வேலை காட்டுகிறாய்? நேரில் வந்தால் தொலைத்துவிடுவேன். என்னிடம் நீ பணமே கொடுக்கவில்லை என்று கூட சொல்வேன்' என்று மிரட்டும் கண்ணனிடம்,`என்ன டாடி, உங்கள் பணத்தைக் கேட்பதுபோல பேசுகிறீர்கள். என் பணத்தைத் தானே கேட்கிறேன் டாடி' என்று அப்பாவியாகக் கேட்கிறார் மூர்த்தி. ஒருகட்டத்தில் தான் ஏமாந்துவிட்டோம் என்பதை உணர்ந்துகொண்ட அவர், நேராக சென்னையில் இருக்கும் எஸ்.எஸ்.கண்ணன் வீட்டுக்குச் சென்று அவரிடம் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட மாணவர் மூர்த்தி
பாதிக்கப்பட்ட மாணவர் மூர்த்தி

அப்போது, பெல் சாலையில் இருக்கும் செஞ்சுரியன் ஹோட்டல் அருகே காத்திருக்குமாறும், தான் அங்கு பணத்துடன் வருவதாகவும் கூறியிருக்கிறார் எஸ்.எஸ்.கண்ணன். சிறிது நேரத்தில் தன் மகன் கவித்திரனுடன் அங்கு சென்ற கண்ணன், `நாங்கள் யார் தெரியுமா ? எங்களிடமே பணத்தைக் கேட்கிறாயா?' என்று கேட்டு மூர்த்தியைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். அதில் பலத்த காயமடைந்த மூர்த்தி அங்கேயே மயக்கமடைந்திருக்கிறார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த அவர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் எஸ்.எஸ்.கண்ணன், கவித்ரன் மற்றும் நிகவித்ரன் மீது மோசடி, தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன் எஸ்.எஸ்.கண்ணன், கவித்திரனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் நிகவித்திரனை வலை வீசித் தேடி வருகிறது காவல்துறை.