சென்னை: சினிமா, சீரியலில் நடிக்க வாய்ப்பு! - நம்பிய இளம்பெண்களைப் பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்

சென்னைக்கு வேலை தேடிவரும் இளம்பெண்களிடம் சினிமா, சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி ஏமாற்றி அவர்களைப் பாலியல் தொழிலில் தள்ளியிருக்கிறது ஒரு கும்பல்.
சென்னைக்கு வேலை தேடிவரும் இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, அவர்களைப் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை முழுவதும் போலீஸார் அதிரடிச் சோதனை நடத்தினர். விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் சர்மு தலைமையிலான தனிப்படை போலீஸார் அடையாறு எஸ்.பி.ஐ காலனியிலுள்ள மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இந்தச் சோதனையில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வேல்முருகன் (32) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அவரிடமிருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நான்கு பெண்கள் மீட்கப்பட்டனர். மசாஜ் சென்டரின் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

இதையடுத்து விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவேலன் தலைமையிலான போலீஸார் அடையாறு காந்திநகர் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சோதனை நடத்தினர். அங்கும் பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இந்தச் சோதனையில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த வெங்கடேசன் (27) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அவரிமிருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டின் உரிமையாளரை போலீஸார் தேடிவருகின்றனர். அங்கிருந்து இரண்டு பெண்கள் மீட்கப்பட்டனர். கைதான வேல்முருகன், வெங்கடேசனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட ஆறு பெண்கள், மயிலாப்பூர் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தி.நகர் துணை கமிஷனர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் சாலிகிராமம் பகுதியில் விருகம்பாக்கம் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது சாலிகிராமம் தேவராஜ்நகரிலுள்ள வீட்டில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து வடபழனியைச் சேர்ந்த சீனிவாசன் (49), சாலிகிராமம் தேவராஜ் நகரைச் சேர்ந்த வசீரா பானு (53) ஆகிய இருவரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து நான்கு செல்போன்கள், 21,500 ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்து நான்கு பெண்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்கள் மயிலாப்பூர் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இது குறித்து விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் கூறுகையில், ``சென்னைக்கு வேலை தேடிவரும் அப்பாவி இளம்பெண்களை குறிவைத்து இந்தக் கும்பல் செயல்பட்டுவருகிறது. சென்னையில் தங்க இடமில்லாமல் தவிக்கும் இளம்பெண்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதைப்போல நடித்து, இவர்கள் அறிமுகமாவார்கள். பின்னர், அடுக்குமாடிக் குடியிருப்பு, தனி வீடுகளுக்கு அழைத்துச் சென்று தங்கவைப்பார்கள். பின்னர் இளம்பெண்களின் கல்வித்தகுதி அடிப்படையில் சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி நம்பவைப்பார்கள். அதன் பிறகே இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களின் சுயரூபத்தை வெளிக்காட்டுவார்கள். இந்தக் கும்பலை நம்பிய சில இளம்பெண்கள், பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இது குறித்து கிடைத்த தகவலின்பேரில் ஒரே நாளில் நடந்த சோதனையில் 10 பெண்களை மீட்டிருக்கிறோம். தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தப்படும்" என்றனர்.