Published:Updated:

அத்தை மகள் போட்டோவை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதித்த இன்ஜினீயர்! - போலீஸில் சிக்கியது எப்படி?

கைது
News
கைது

சென்னையில் அத்தை மகளின் போட்டோவை சமூக வலைதளத்தில் பதிவுசெய்து, ஆண்களிடம் ஆபாசமாகப் பேசி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த இன்ஜினீயரை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (22) (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் அவரின் உறவினர் ரமேஷ் என்பவர் பதிவிட்டிருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சாந்தி, பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவரின் புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``என்னுடைய அத்தை மகன் ரமேஷ் (22) என்பவருடன் நான் சிறு வயது முதல் பழகிவருகிறேன். நாங்கள் இயல்பாகப் பழகும்போது அவன் என்னை போட்டோ எடுப்பான். என் சகோதரி, ரமேஷின் சகோதரி, உறவினர்கள் ஆகியோருடன் நாங்கள் குரூப் போட்டோவையும் எடுத்திருக்கிறோம். இப்படி அவன் எடுத்த போட்டோக்களில் என்னுடைய புகைப்படத்தை பவித்ரா என்ற பெயரில் அக்கவுன்ட் தொடங்கி சமூக வலைதளங்களில் பல ஆண்களிடம் பேசியிருக்கிறான்.

ஆபாச மிரட்டல்கள்
ஆபாச மிரட்டல்கள்

மேலும் அவன், என் போட்டோவையும் வீடியோவையும் ஆண்களுக்கு ஷேர் செய்து ஆபாசமாகப் பேசியிருக்கிறான். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் என்னைப் பற்றிக் கீழ்த்தரமாகக் கூறியிருக்கின்றனர். இந்தத் தகவல் எனக்குத் தெரிந்து ரமேஷின் செல்போனை நான் பார்த்தபோது பல ஆண்களுக்கு என்னுடைய போட்டோவை அனுப்பியதோடு, பெண் குரலிலும் பேசிவந்திருக்கிறான். அதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். ரமேஷ், என் போட்டோவை அனுப்பி சில ஆண்களிடமிருந்து பணம் பெற்றதாகவும் சந்தேகம் உள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தச் செயலை கடந்த இரண்டு ஆண்டுகளாக அவன் செய்துவந்திருக்கிறான். என்னைத் தவறாகச் சித்திரித்ததால் நான் வெளியில் நடமாட முடியவில்லை. எந்த ஒரு வேலையையும் என்னால் செய்ய முடியவில்லை. எனவே, என்னுடைய முழு விவரங்களை சமூக வலைதளங்களிலிருந்து முழுமையாக நீக்குவதோடு, ரமேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்கு பதிவு செய்தார். ரமேஷை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். ரமேஷ் மீது 417, 419, 420 ஆகிய பிரிவுகளின் கீழும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

கைது
கைது

இது குறித்து பூந்தமல்லி போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட ரமேஷ், இன்ஜினீயரிங் படித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துவந்திருக்கிறார். கொரோனா காரணமாக ரமேஷுக்கு வேலை பறிபோனது. அதனால் அவரின் அத்தை மகளின் போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்து ஆண்களுடன் ஆபாசமாகப் பெண் குரலில் பேசிவந்திருக்கிறார். அதற்காகப் பலரிடமிருந்து பணத்தை வாங்கி லட்சக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார். ரமேஷின் அத்தை மகள் கொடுத்த புகாரின்பேரில் கைதுசெய்திருக்கிறோம். ரமேஷின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்துவருகிறோம்" என்றனர்.