Published:Updated:

ஆந்திரா டு சென்னை; கூட்டம் அதிகமிருக்கும் கடைதான் டார்கெட்! - துணித் திருட்டில் சிக்கிய பெண்

ஜவுளிக்கடையில் டீ ஷர்ட்கள் திருட்டு
ஜவுளிக்கடையில் டீ ஷர்ட்கள் திருட்டு

டிப்டாப்பாக சேலை அணிந்துகொண்டு, கூட்டம் அதிகமுள்ள ஜவுளிக்கடைக்குள் நுழைந்த பெண், தன்னுடைய கால்களின் நடுவில் திருடிய ஆறு டீ ஷர்ட்கள், மூன்று ஷார்ட்ஸ்களை மறைத்து வைத்துக்கொண்டு வெளியில் வரும்போது சிக்கிக்கொண்டார்.

தீபாவளி நெருங்குவதையொட்டி ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதிவருகிறது. விடுமுறை தினமான நேற்று (ஞாயிற்றுகிழமை) வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னை வண்ணாரப்பேட்டையில் தீபாவளிக்காக உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. போலீஸார் தீவிர ரோந்துப் பணியிலும் ஈடுபட்டுவருகின்றனர். சிசிடிவி கேமரா மூலமாகவும் மக்களைக் கவனித்துக்கொண்டிருந்தனர்.

நிர்மலா
நிர்மலா

வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலையிலுள்ள பிரபல ஐவுளிக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் கடை ஊழியர்கள் வாடிக்கையாளர்களை சிசிடிவி மூலம் கண்காணித்துக்கொண்டிருந்தனர். அப்போது, 49 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சேலை அணிந்திருந்தார். அவர், மற்றவர்களைவிட மெதுவாக கடைக்குள் நடந்துசென்றார். அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள், அந்தப் பெண்ணை சிறிது நேரம் சிசிடிவி மூலம் கண்காணித்தனர்.

இதையடுத்து அந்தப் பெண் கடையிலிருந்த டீ ஷர்ட்களையும் ஷார்ட்ஸ்களையும் திருடி, காலின் நடுவில் வைப்பதை ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்தப் பெண் குறித்த தகவல் பெண் ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்தப் பெண் கடையின் வெளியில் வர மெதுவாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அதைப் பார்த்த பெண் ஊழியர்கள், `மேடம் ஏன் இப்படி மெதுவாக நடக்கிறீர்கள்?' என்று அந்தப் பெண்ணிடம் கேட்டனர். அதற்கு அந்தப் பெண், `கால்வலி, அதனால்தான் மெதுவாக நடக்கிறேன்' என்று கூலாகப் பதிலளித்திருக்கிறர். அதைக் கேட்ட பெண் ஊழியர்கள், `அப்படியா, இங்கே வந்து அமருங்கள். உங்களுக்கு என்ன தேவையோ, அதை நாங்களே எடுத்துக் கொண்டுவருகிறோம்’ என்று கூறி தனியாக ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அதற்கு அந்தப் பெண், `பரவாயில்லை’ என்று கூறியபடி அங்கிருந்து புறப்பட தயாராகியிருக்கிறார்.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா
representational image

உடனே பெண் ஊழியர்கள், `மேடம், நீங்கள் சேலைக்குள் டீ ஷர்ட், ஷார்ட்ஸ்களைத் திருடி வைத்திருப்பதை சிசிடிவி மூலம் பார்த்துவிட்டோம். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். இல்லையென்றால் இங்குவைத்து சோதனை செய்யதால் உங்களுக்குத்தான் அவமானம்’ என்று அதிரடியாகக் கூறியிருக்கிறார்கள். அதைக் கேட்டு அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார். பிறகு பெண் ஊழியர்களுடன் அவர் சென்றிருக்கிறார். அங்கு அவரைச் சோதித்தபோது ஆறு டீ ஷர்ட்கள், மூன்று ஷார்ட்ஸ்களை கால்களின் நடுவில் அவர் வைத்திருந்தார். அவற்றைப் பறிமுதல் செய்த பெண் ஊழியர்கள், உடனடியாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். எஸ்.ஐ அப்துல் மஜீத், தலைமைக் காவலர் பரிமளா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அந்தப் பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் அவர் பெயர் நிர்மலா (49) என்பதும், ஆந்திர மாநிலம், சத்தியவேடு, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நிர்மலாவை போலீஸார் கைதுசெய்தனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில்,``கடையின் சூப்பர்வைசர் ரவிக்குமார் அளித்த புகாரின்பேரில் நிர்மலாவைக் கைதுசெய்திருக்கிறோம். அவரிடமிருந்து 2,550 ரூபாய் மதிப்புள்ள டீ ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். கைதுசெய்யப்பட்ட நிர்மலாவுக்கு கணவர் இல்லை. மகளுடன் வசித்துவருகிறார். நிர்மலாவின் மகள், படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறார்.

சென்னை: `திருட்டு செல்போன்கள்... வேலை தேடுபவர்கள் டார்க்கெட்' - தடம் மாறிய இன்ஜினீயரின் வாழ்க்கை!
கைது
கைது
Representational Image

தீபாவளி என்பதால் டிரெஸ் எடுக்க வருவதைப்போல பந்தாவாக சேலை அணிந்துகொண்டு ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வருவார். பிறகு கூட்டம் அதிகமாக இருக்கும் ஜவுளிக்கடையைத் தேர்வு செய்வார். அந்தக் கடைக்குள் நுழையும் நிர்மலா, துணிகளைத் தேர்வு செய்வதுபோல நடிப்பார். பிறகு ஊழியர்கள் பார்க்காத நேரத்தில் துணிகளை எடுத்து கால்களின் நடுவில் சேலைக்குள் மறைத்து வைத்துக்கொள்வார். பிறகு, மெதுவாக நடந்து கடையிலிருந்து வெளியில் வந்துவிடுவார். இவ்வாறு திருடும் துணிகளை ஆந்திராவில் அவர் விற்றுவிடுவார். ஏற்கெனவே தி.நகரிலுள்ள பிரபல ஜவுளிக்கடையில் இதைப்போல துணிகளைத் திருடி நிர்மலா சிக்கியிருக்கிறார். அப்போது கடை ஊழியர்கள் காலில் விழுந்து நிர்மலா மன்னிப்புக் கேட்டதால் காவல்துறையினரிடம் அவரை ஒப்படைக்கவில்லை ஆனால், இந்த முறை எங்களிடம் சிக்கிக்கொண்டார்" என்றனர்.

தீபாவளி நெருங்குவதையொட்டி ஆந்திராவிலிருந்து சென்னைக்குத் துணிகளைத் திருட வந்து சிசிடிவி-யால் சிக்கியிருக்கிறார் நிர்மலா.

அடுத்த கட்டுரைக்கு