Published:Updated:

சென்னை: ராணுவ வீரருடன் காதல்; விரக்தி! - வீடியோ காலில் பட்டதாரிப் பெண் தற்கொலை

பட்டதாரிப் பெண் பாரதி
பட்டதாரிப் பெண் பாரதி

சென்னையைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணுக்கும் ராணுவ வீரருக்கும் சமூக வலைதளம் ஒன்றின் மூலம் காதல் மலர்ந்தது. ராணுவ வீரரின் சுயரூபம் தெரிந்ததும், வீடியோ காலில் பேசியபடி தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கிறார் பட்டதாரிப் பெண்.

சென்னை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு, எழில்நகர் 128-வது பிளாக்கைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் மகள் பாரதி (24). பி.காம் பட்டதாரி. இவர், கடந்த 2- ம் தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்துத் தகவலறிந்த பள்ளிகாரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு தலைமையிலான போலீஸார், பாரதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தநிலையில் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கிருஷ்ணன், காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

பட்டதாரிப் பெண் பாரதி
பட்டதாரிப் பெண் பாரதி

புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாரதியின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, பாரதி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவர் வீடியோ காலில் பேசியது தெரியவந்தது. யாருடன் பாரதி பேசினார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகுமரேசன் என்பவருடன் பாரதி பேசியது தெரியவந்தது. உடனடியாக முத்துகுமரேசனைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில் முத்துகுமரேசன், நாசிக்கில் ராணுவ வீரராகப் பணியாற்றிவருவது தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன்னர் பாரதியும் முத்துகுமரேசனும் சமூக வலைதளம் ஒன்றில் அறிமுகமாகியிருக்கின்றனர். அதன் பிறகு நேரில் சந்திக்காமல் போனிலேயே நட்பாகப் பழகியிருக்கிறார்கள். பின்னர் நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது. அதன் பிறகு இருவரும் நேரில் சந்திக்காமல் போனிலேயே காதலித்துவந்திருக்கின்றனர். வீடியோ காலில் அடிக்கடி பேசிவந்தனர். அப்போது, குளியல் வீடியோவை முத்துக்குமரேசனுக்கு பாரதி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

சென்னை: கொரோனாவால் வேலை இழந்த டிரைவர்! - ரூ.3 லட்சம் கடனால் தற்கொலை
ராணுவ வீரர் முத்துகுமரேசன்
ராணுவ வீரர் முத்துகுமரேசன்

இந்தநிலையில், கடந்த நவம்பர் 18-ம் தேதி சென்னை வந்திருக்கிறார் முத்துகுமரேசன். அப்போது தாம்பரத்தில் பாரதியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதன் பிறகு முத்துகுமரேசன், தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். முத்துகுமரேசனுக்கு ஏற்கெனவே திருமணமாகி, குழந்தைகள் இருக்கும் தகவல் பாரதிக்குத் தெரியவந்திருக்கிறது. அது தொடர்பாக கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. மன வேதனையடைந்த பாரதி, தற்கொலை செய்துகொள்ளப்போவதாக வீடியோ காலில் முத்துகுமரேசனிடம் கூறியிருக்கிறார். முதலில் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். அதை முத்துகுமரேசன் தடுத்திருக்கிறார். பிறகு வீடியோ கால் இணைப்பை முத்துகுமரேசன் துண்டித்துவிட்டார். இருப்பினும் முத்துகுமரேசன் தன்னை ஏமாற்றியதால் தூக்குப் போட்டு பாரதி தற்கொலை செய்திருக்கிறார். இந்தத் தகவல் தெரிந்ததும் பாரதியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக முத்துகுமரேசனை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு