Published:Updated:

சென்னை: விட்டதைப் பிடிக்க வாடிக்கையாளரிடம் முறைகேடு! - வங்கி உதவி மேலாளரின் ரூ.82 லட்சம் மோசடி

மோசடி
மோசடி

பங்குச் சந்தையில் முதலீடு செய்து நஷ்டமடைந்த வங்கி உதவி மேலாளர், வாடிக்கையாளரின் 82 லட்சம் ரூபாய் முறைகேடு புகாரில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜிடகாம் என்பவர், ஒரு புகாரளித்தார். அதில் ``நான் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றிவருகிறேன். நான் பணியாற்றும் வங்கியின் கிளை ஒன்றில் உதவி மேலாளராக மாதவன் என்பவர் பணியாற்றினார். இவர், வாடிக்கையாளர் ராமகிருஷ்ணன் என்பவரின் வங்கிக் கணக்கிலிருந்து 82 லட்சம் ரூபாயைக் கையாடல் செய்துவிட்டார். எனவே, சம்பந்தப்பட்ட உதவி மேலாளர் மாதவன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

வங்கிக் கடன்
வங்கிக் கடன்

புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடிப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் கண்ணம்மாள் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரித்தார்.

சென்னை: `ரூ.2,000தான் டார்கெட்; ஏ.டி.எம் கார்டுகள் மோசடி!' - முன்னாள் வங்கி ஊழியர் சிக்கிய பின்னணி

இதையடுத்து போலீஸார், உதவி மேலாளர் மாதவனிடம் விசாரித்தனர். விசாரணையில் மாதவன், வாடிக்கையாளர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்த 82 லட்சம் ரூபாயை முறைகேடு செய்தது தெரியவந்தது. அதனால் அவரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மாதவனிடம் விசாரித்தபோது, அவர் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து நஷ்டமடைந்தது தெரியவந்தது.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``கரூர் மாவட்டம், மண்மங்கலம், புதூரைச் சேர்ந்தவர் மாதவன். இவர் சென்னையிலுள்ள வங்கி ஒன்றில் உதவி மேலாளராகப் பணியாற்றிவந்தார். கடந்த 2013-14-ம் ஆண்டு முதல் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை வழக்கமாகவைத்திருந்தார்.

வங்கி
வங்கி

பங்குச் சந்தையில் மாதவனுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. விட்டதைப் பிடிக்க கடன் வாங்கி முதலீடு செய்திருக்கிறார். இந்தச் சமயத்தில் சென்னை எழும்பூரிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கடன் வாங்கியிருந்த ராமகிருஷ்ணனின் கணக்கிலிருந்த 82 லட்சம் ரூபாயை இன்டர்நெட் வங்கி மூலம் மாதவன் கையாடல் செய்திருக்கிறார். அந்தப் பணத்தையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்து நஷ்டமடைந்திருக்கிறார். வங்கி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் மாதவனைக் கைதுசெய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்திருக்கிறோம். மாதவனின் பின்னணி குறித்து விசாரணை நடத்திவருகிறோம்"என்றனர்.

வாடிக்கையாளர் வங்கிக் கணக்கிலிருந்த 82 லட்சம் ரூபாயை உதவி வங்கி மேலாளரே முறைகேடு செய்ததாகக் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு