சென்னை: மாணவிமீது ஒருதலைக் காதல்! - உதவிப் பேராசிரியரைச் சிக்கவைத்த போலி திருமணச் சான்றிதழ்

சென்னையிலுள்ள கல்லூரியில் பயிலும் மாணவி மற்றும் அவரின் உறவினர்களின் வாட்ஸ்அப் நம்பருக்கு போலி திருமணச் சான்றிதழை அனுப்பி, மிரட்டிய உதவிப் பேராசிரியரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
சென்னையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தி.நகர் துணை கமிஷனர் ஹரிகிரன்பிரசாத்திடம் 11.01.2020-ல் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, `நான் விருகம்பாக்கத்திலுள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறேன். நான் படிக்கும் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக சதீஷ் ரவிகுமார் (24) என்பவர் பணியாற்றுகிறார். இவர் எனக்கு நன்கு அறிமுகமானவர்.

என்னுடைய பள்ளிச் சான்றிதழ்களைவைத்து போலி திருமணச் சான்றிதழைத் தயாரித்த சதீஷ் ரவிகுமார், அதை என்னுடைய பாட்டி மற்றும் அத்தைக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி, அதை உடனே அழித்துவருகிறார். மேலும், என்னை அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், இல்லையென்றால் இந்த போலிச் சான்றிதழை சமூக வலைதளங்களில் பரப்பி என் வாழ்க்கையைச் சீரழித்துவிடுவேன் என்றும் என்னைத் தொடர்ந்து மிரட்டிவருகிறார்.
போலி திருமணச் சான்றிதழைவைத்து என்னை மிரட்டும் சதீஷ் ரவிகுமார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று வேறு எந்த ஒரு பெண்ணையும் ஏமாற்றாதவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எனக்கும் தகுந்த பாதுபாப்பு வழங்க வேண்டும். தொடர்ந்து என்னுடைய வாட்ஸ்அப்புக்கு தேவையில்லாத மெசேஜ்களை எனக்கு அனுப்பி, என்னை மிரட்டிவரும் சதீஷ் ரவிகுமார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி அசோக்நகர் அனைத்து மகளிர் போலீஸாருக்கு தி.நகர் துணை கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி, இந்திய தண்டனைச் சட்டம் 465, 469, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து உதவிப் பேராசிரியர் ரவி சதீஷ்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து அசோக்நகர் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்பேரில் சென்னை அய்யப்பன்தாங்கல், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த சதீஷ் ரவிகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. இருப்பினும், தான் வேலை பார்க்கும் கல்லூரியில் பயின்ற மாணவியை ஒருதலையாகக் காதலித்திருக்கிறார்.

அவரைக் கட்டாயப்படுத்தி, திருமணம் செய்துகொள்ள அவர் போலி திருமணச் சான்றிதழைத் தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது. மாணவி, தைரியமாக புகாரளித்ததால்தான் உதவிப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க முடிந்தது" என்றனர்.
கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்ததோடு, போலி திருமணச் சான்றிதழ் தயாரித்த குற்றச்சாட்டில் உதவிப் பேராசிரியர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.