சென்னை: அதிகாலையில் தனியாகச் சென்ற சிறுமி! - இரு ஆட்டோ டிரைவர்களால் நேர்ந்த கொடுமை

சென்னையில் அதிகாலை நேரத்தில் தனியாக நடந்து சென்ற 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக ஆட்டோ டிரைவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
சென்னை, மாதவரம் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருக்கும் 14 வயது சிறுமியை 6-ம் தேதி அதிகாலை முதல் காணவில்லை. சிறுமியின் பெற்றோர் அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதனால் சிறுமியின் அம்மா, எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சிறுமியைத் தேடினர். இந்தநிலையில் அத்திப்பட்டு புதுநகர் பாலத்தின் அருகில் சிறுமி இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் சிறுமியை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். சிறுமியிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில் ``சம்பவத்தன்று சிறுமி வீட்டைவிட்டுத் தனியாக வெளியில் வந்திருக்கிறார். அப்போது ஆட்டோ டிரைவர் ஒருவர் சிறுமியிடம் பேச்சு கொடுத்திருக்கிறார். பின்னர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறிய ஆட்டோ டிரைவர் அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார். அப்போது இன்னொரு ஆட்டோ டிரைவர் ஏறியிருக்கிறார். புதுநகர் பாலத்தின் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு டிரைவர்கள் இருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றனர். அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டிருக்கிறார்.
அதனால் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். சிறுமி கூறிய தகவலின்படி ஆட்டோ டிரைவர்கள் குறித்து விசாரணை நடத்தினோம். அதோடு சிசிடிவி கேமரா பதிவு மூலம் ஆட்டோவின் பதிவு நம்பரை கண்டறிந்தோம். பின்னர் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது எண்ணூர் வ.உ.சி.நகரைச் சேர்ந்த அழகுராஜ் (33), எண்ணூர் தாழங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அஜித் (23) எனத் தெரிந்தது.

இவர்கள் இருவரும் ஆட்டோ டிரைவர்கள். இதையடுத்து இருவரையும் கைதுசெய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். சிறுமிக்கு கவுன்சலிங் அளித்திருக்கிறோம் " என்றனர்.
சென்னையில் 14 வயது சிறுமிக்கு ஆட்டோ டிரைவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.