Published:Updated:

`3 ஆண்டுகளாக மாற்றப்படாத பாஸ்வேர்டு; இஎம்ஐ நெருக்கடி!’- ஏடிஎம் கொள்ளை வழக்கில் சிக்கிய வங்கி ஊழியர்

வங்கி ஊழியர் சிவானந்தன்
வங்கி ஊழியர் சிவானந்தன்

சென்னை மதுரவாயலில் ஏ.டி.எம் இயந்திரத்தின் பாஸ்வேர்டை வங்கி அதிகாரிகள் மாற்றாததால் கடன் சுமையால் தவித்த வங்கி ஊழியர், பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்.

சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனியில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி,எம் உள்ளது. இங்கு நேற்று மதியம் வந்த மர்மநபர் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் எனக் காவலாளியிடம் கூறிவிட்டு உள்ளே சென்றார். பின்னர், ஏடிஎம் இயந்திரத்தை சாவியைப் போட்டு பாஸ்வேர்டைப் பயன்படுத்தி 8,61,900 ரூபாயைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றார். இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரித்தார். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார். இந்தச் சம்பவத்தில் ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்படாததால் வங்கி ஊழியர்கள் மேல் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வங்கி மேலாளர் ராஜ்குமார் அளித்த தகவலின்படி 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

வங்கி ஊழியர் சிவானந்தன்
வங்கி ஊழியர் சிவானந்தன்

விசாரணையில் ஏ.டி.எம் இயந்திரத்தின் பாஸ்வேர்டு, இந்தக் கிளையில் பணியாற்றிவிட்டு அம்பத்தூர் கிளையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும் தெரியும் என ஊழியர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ஊழியர் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர். அவரின் புகைப்படமும் சிசிடிவியில் பதிவான உருவமும் ஒத்துப்போனது. அதனால் அந்த ஊழியரைப் பிடித்த போலீஸார் விசாரித்தபோது கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தன் (39). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவரின் மனைவி தலைமைச் செயலகத்தில் பணியாற்றிவருகிறார். சென்னை மாம்பலத்தில் குடியிருந்துவருகிறார். ஆடம்பரமாக வாழ விரும்பிய சிவானந்தன், வீட்டுக் கடன், வாகனக் கடன் என வருமானத்துக்கு அதிகமாக கடன் வாங்கியதாக தெரிகிறது. அதனால் வாங்கிய கடனுக்கு மாதந்தோறும் இஎம்ஐ செலுத்த சிரமப்பட்டுவந்துள்ளார். அதனால்தான் ஏ.டி.எம்மில் கொள்ளையடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

`கொள்ளையனுக்கு தெரிந்த ஏடிஎம் இயந்திரத்தின் பாஸ்வேர்டு' -கிருமிநாசினி தெளிக்க வந்தவரால் அதிர்ச்சி #Chennai
சிவானந்தன்
சிவானந்தன்

மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள கிளை ஏ.டி.எம் இயந்திரத்தின் பாஸ்வேர்டு தனக்கு தெரியும் என்பதால் பணம் நிரப்பியதும் அங்கு கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளார். விடுமுறை தினமான நேற்று சிவானந்தன், வங்கியின் ஏ.டி.எம் மையத்துக்கு முகத்தை மாஸ்க்கால் மூடியபடி சென்றார். சிசிடிவியால் கண்டுபிடிக்காமலிருக்க தலையிலும் தொப்பியை அணிந்துள்ளார் சிவானந்தன்.

பின்னர், தன்னிடமிருந்த சாவி மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தின் லாக்கரைத் திறந்து, பின்னர் பாஸ்வேர்டைப் பயன்படுத்திப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளார். அப்போது வாடிக்கையாளர் ஒருவர் வந்ததும் அவசர அவசரமாகக் கிடைத்தவரை லாபம் என்று பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். கொள்ளை நடந்த 24 மணி நேரத்தில் வங்கி ஊழியர் சிவானந்தனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

`முதல் கொள்ளை சக்ஸஸ்; காட்டிக்கொடுத்த நீல நிறச் சட்டை!’ - குதிரை ரேஸுக்காகத் திருடிய சென்னை இளைஞர்
சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்
சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தின் பாஸ்வேர்டை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை வங்கி அதிகாரிகள் மாற்றுவது வழக்கம். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக ஏ.டி.எம் இயந்திரத்தின் பாஸ்வேர்டை அந்த வங்கி கிளை மாற்றவில்லை. அதனால்தான் சிவானந்தன் தனக்குத் தெரிந்த, பாஸ்வேர்டைப் பயன்படுத்தி இந்தக் கொள்ளையில் அவர் ஈடுபட்டுள்ளார். சிவானந்தன், தன்னுடைய சொந்த ஊரில் புதிதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். அதனால் ஏற்பட்ட கடனால் மனைவிக்கும் சிவானந்தத்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் கடனை அடைக்க சிவானந்தன், ஏ.டி.எம் இயந்திரத்தில் கொள்ளையடித்துள்ளார். கொள்ளையடித்த பணத்தை வீட்டில் வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல இன்று அவர் வேலைக்கும் சென்றுள்ளார்" என்றனர்.

கொரோனா ஊரடங்கிலும் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸ் டீம் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்ததை உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு