Published:Updated:

`3 பெண்களுடன் நட்பு; காதல் பரிசாகத் திருட்டு பைக்குகள்!' - சென்னையில் சிக்கிய இன்ஜினீயர்

இன்ஜினீயர் ரமேஷ்
இன்ஜினீயர் ரமேஷ்

3 பெண்களுடன் நட்பாக இருந்த சென்னை இன்ஜினீயர், ஆடம்பர வாழ்க்கைக்காக பைக்குகளைத் திருடி போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.

சென்னை கொளத்தூர் என்.வி.எம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (33). இவர் ஏப்ரல் 30-ம் தேதி வில்லிவாக்கம் மார்க்கெட் அருகே ரெட்டி தெருவில் தன்னுடைய பைக்கை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றார். திரும்பி வந்தபோது, பைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதனால் வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் கணேஷ் புகார் அளித்தார்.

இந்தச் சூழலில் வில்லிவாக்கம் மார்க்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்துவரும் ரமேஷ் என்பவரின் பைக் திருட்டுப்போனது. இதுகுறித்து ரமேஷ், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

ரமேஷ்
ரமேஷ்
`செல்ஃபியால் துப்பு துலங்கிய பைக் திருட்டு' - கொலைவழக்கில் சிக்கிய சென்னைக் கல்லூரி மாணவர்

வில்லிவாக்கம் மார்க்கெட் பகுதியில் அடுத்தடுத்து பைக்குகள் திருட்டுப் போனதால் வில்லிவாக்கம் உதவி கமிஷனர் அகஸ்டின் ஜான்பால் மேற்பார்வையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்திதேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாசிங், தலைமைக் காவலர்கள் பாலகிருஷ்ணன், விஜய்ஆனந்த், குமரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்தபோது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர், பைக்குகளைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர் ஹெல்மெட் அணிந்திருந்தால் அவரின் முகம் சரியாகத் தெரியவில்லை.

இருப்பினும் பைக்குகளைத் திருடும் இளைஞர் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர். அப்போது வில்லிவாக்கம் மார்க்கெட், ரயில் நிலையப் பகுதிகளில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் பைக்குகளைத் திருடும் இளைஞர் சிக்கவில்லை. இந்தநிலையில், வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகே உள்ள துணிக்கடைக்கு ஹெல்மெட் அணிந்த இளைஞர் ஒருவர் வந்தார். சந்தேகத்தின்பேரில் போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீஸார் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அந்த இளைஞர்தான் பைக்குகளைத் திருடியது தெரியவந்தது. விசாரணையில் அவரின் பெயர் ரமேஷ் (33), கொரட்டூர் பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பைக் திருட்டு வழக்கில் கைதான ரமேஷ், பி.பி.ஏ, டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்த இவருக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. அதனால், ஆடம்பரமாக வாழ என்ன செய்யலாம் என்று சமூகவலைதளத்தில் ரமேஷ், விவரங்களைத் தேடியுள்ளார். அப்போது யூடியூப்பில் பைக் திருடுவது எப்படி என்ற வீடியோவைப் பார்த்துள்ளார். அதனால் பைக்குகளைத் திருடலாம் என்று முடிவெடுத்த ரமேஷ், போலீஸாரிடம் சிக்காமலிருக்க படித்த படிப்பை பயன்படுத்தியுள்ளார்.

பைக்குளைத் திருடுவதற்கு முன் வாகனத்தில் இருக்கும் ஒரிஜினல் ஆர்.சி புக், இன்ஷூரன்ஸ் ஆவணங்களைத் திருடுவார். பின்னர் ஆர்.சி புக்குக்கு ஏற்ப அந்த மாடல் உடைய பைக்குகளைத் திருடுவார். அதை ஓ.எல்.எக்ஸ் மூலம் விற்பனை செய்துவந்துள்ளார். ரமேஷிடமிருந்து 12 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளோம். ரமேஷுக்கு இதுவரை திருமணமாகவில்லை. ஆனால், 3 பெண்களுடன் நட்பில் இருந்துள்ளார். அவர்களுக்குத் திருடிய பைக்குகளைக் காதல் பரிசாகக் கொடுத்துள்ளார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு