Published:Updated:

சென்னை: நோயாளிகளுக்கு உதவுவதைப்போல நடித்து செல்போன்களைத் திருடிய அக்காள், தம்பி! -சிக்கியது எப்படி?

செல்போன்
செல்போன் ( Representational Image )

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு உதவி செய்வதைப்போல நடித்து செல்போன்களைத் திருடிய அக்காள், தம்பியை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை போரூர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ரிஷோத் (23). இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றிவருகிறார். கடந்த 13-ம் தேதி காலை 6:30 மணியளவில் தனது செல்போனை மேஜையின் மீது வைத்துவிட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றார். பின்னர் அவர், தன்னுடைய அறைக்கு வந்தபோது மேஜைமீது வைத்திருந்த அவருடைய செல்போனைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து டாக்டர் ரிஷோத், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

செல்போன்
செல்போன்
மாதிரிப் படம்

அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் துப்பரவுப் பணியாளர்கள் இருவர்மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் விசாரித்தபோது டாக்டரின் செல்போனைத் திருடியது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தேவி (28), அவரின் தம்பி மூர்த்தி (27) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைதுசெய்து செல்போனைப் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து ராயப்பேட்டை போலீஸார் கூறுகையில், ``மருத்துவமனையில் துப்பரவு பணியாளர்களாக தேவியும் அவரின் தம்பி மூர்த்தியும் பணியாற்றிவருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் அன்பாகப் பழகுவார்கள். பின்னர், உதவி செய்வதுபோல நடித்து அவர்களை முழுமையாக நம்பவைப்பார்கள். பின்னர், நோயாளிகள், அவர்களுடன் வந்திருப்பவர்களின் கவனத்தை திசை திருப்பி செல்போன்களைத் திருடிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை

திருடிய செல்போன்களை குறைந்த விலைக்கு விற்றுவிடுவார்கள். செல்போன்களைப் பறிக்கொடுத்த பலர், காவல் நிலையங்களில் புகாரளிப்பதில்லை. அதனால் தேவியும் மூர்த்தியும் தொடர்ந்து செல்போன் திருடிவந்திருக்கின்றனர். டாக்டரின் விலையுயர்ந்த செல்போனை அவரின் அறைக்கு துப்பரவு செய்வதைப்போலச் சென்று திருடியபோது சிசிடிவியில் அது பதிவாகிவிட்டது. அந்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் தேவி, மூர்த்தியைக் கைதுசெய்து செல்போனைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இவர்கள் இருவரும் எத்தனை செல்போன்கள் திருடினார்கள் என்று விசாரித்துவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு