Election bannerElection banner
Published:Updated:

சென்னை: கடைக்குச் சென்ற வடமாநில இளைஞர்! - அதிர்ச்சி கொடுத்த டாக்ஸி டிரைவர்கள்

செல்போனைப் பறித்த டிரைவர்கள்
செல்போனைப் பறித்த டிரைவர்கள் ( Representational Image )

சென்னையில் கூலி வேலை செய்துவரும் வடமாநில இளைஞரின் செல்போனைப் பறித்த கால் டாக்ஸி டிரைவர்களை கோடம்பாக்கம் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

வடமாநிலத்தைச் சேர்ந்தவர் மகேந்திரகுமார் (23). இவர், சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் 2-வது தெருவிலுள்ள கட்டடத்தில் தங்கி சென்டிரிங் வேலை செய்துவருகிறார். கடந்த 9-ம் தேதி இரவு ரங்கராஜபுரம் மெயின் ரோட்டிலுள்ள கடைக்கு மகேந்திரகுமார் சென்றார். அப்போது அந்தப் பகுதியில் நின்றுகொண்டிருந்த இளைஞர்கள் திடீரென மகேந்திரகுமார் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடினர். அவர்களை மகேந்திரகுமார் விரட்டினார். அப்போது செல்போனை பறித்துக்கொண்டு ஓடிய இளைஞர்கள், ஒரு காருக்குள் ஏறினர். அவர்களை விரட்டிச் சென்ற மகேந்திரகுமாரைப் பிடித்து காருக்குள் இருந்தவர்கள் வலுகட்டாயமாக ஏற்றினர்.

செல்போன்
செல்போன்

பின்னர் கார் அங்கிருந்து வேகமாகச் சென்றது. பின்னர் அருகிலிள்ள மைதானத்தில் கார் நிறுத்தப்பட்டது. அப்போது மகேந்திரகுமாரின் கழுத்தில் பிளேடை வைத்த இளைஞர்கள், அவரின் பையிலிருந்த 800 ரூபாயை பறித்தனர். பின்னர் மகேந்திரகுமாரை காரிலிருந்து இறக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. செல்போன், பணம் ஆகியவற்றைப் பறிகொடுத்த மகேந்திரகுமார், கோடம்பாக்கம் காவல் நிலைத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.

Vikatan

அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது மகேந்திரகுமாரைக் காரில் கடத்திய காரின் பதிவு நம்பரை போலீஸார் கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் மகேந்திரகுமாரை காரில் கடத்திய தி.நகரைச் சேர்ந்த மகேஷ் (32), தி.நகர் திலக் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் (29), மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சௌந்தராஜன் (42) ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து மகேந்திரகுமாரிடமிருந்து செல்போன், பணத்தைப் பறித்தது தெரியவந்தது.

டாக்ஸி
டாக்ஸி

இதையடுத்து அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் 400 ரூபாய், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் மகேந்திரகுமார் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``எனக்குத் தமிழ் கொஞ்சம் புரியும். எனது சொந்த ஊர் சத்தீஸ்கர். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 9-ம் தேதி இரவு 8 மணியளவில் வேலைகளை முடித்துவிட்டு ரங்கராஜபுரம் மெயின் ரோட்டிலுள்ள பெட்டிக் கடைக்கு பொருள்களை வாங்கச் சென்றேன். 50 ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்து பொருள்களை வாங்கிக்கொண்டிருந்தேன்.

அப்போது அந்தக்கடைக்கு வந்த இரண்டு பேர் கடைக்காரரிடம் பொருள்களைக் கேட்டு தகராறு செய்தனர். அதனால் நான் சிறிது தூரம் தள்ளி நின்றேன். அப்போது என் செல்போனுக்கு அழைப்பு வந்ததால் நான் எடுத்து பேசிக்கொண்டிருந்தேன். திடீரென கடைக்காரரிடம் தகராறு செய்தவர்கள் என் கையிலிருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அதனால் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் செல்போனைப் பறித்தவர்கள் அருகில் நின்றுகொண்டிருந்த காரில் ஏறிக்கொண்டனர்.

திருட்டு
திருட்டு
representational image

நான் அவர்கள் பின்னால் சென்று செல்போனைக் கேட்டேன். ஆனால் அவர்கள் என்னைப் பிடித்து இழுத்து காரில் ஏற்றிக்கொண்டு கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் பகுதிக்குச் கொண்டு சென்றனர். காரில் வைத்தே என்னிடமிருந்த பணத்தைப் பறித்துக்கொண்டனர். அதன் பிறகு அங்கு என்னை இறக்கிவிட்டு செல்போன், பணம் பறித்த தகவலை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிவிட்டுச் சென்றனர். எனவே என்னுடைய செல்போன், பணத்தை பறித்துச் சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கால் டாக்ஸி டிரைவர்கள் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு