சென்னை, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் அம்மா புகாரளித்தார். அதில், `என்னுடைய கணவர், தனியார் மருத்துவமனையில் டிரைவராக வேலை பார்க்கிறார். எனக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள். மகள், மாநகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் என் மகளின் வயிறு பெரிதாக இருந்தது. அதனால், அவரை அண்ணாநகரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்து பார்த்தோம்.

அப்போது, அவர் நான்கு மாத கர்ப்பம் எனத் தெரியவந்தது. அது தொடர்பாக மகளிடம் விசாரித்தபோது, கொரோனா ஊரடங்கால் தோழிகளுடன் விளையாடச் சென்றபோது 5.6.2020-ல் எங்களின் உறவினரான மணி என்கிற மோகன்ராஜ் (28) பிரியாணி வாங்கிக் கொடுத்திருக்கிறார். பின்னர் அவர் என் மகளிடம் தவறாக நடந்தது தெரியவந்தது. அதனால் கர்ப்பத்தைக் கலைக்க அரசு மருத்துவமனையில் என் மகளை அனுமதித்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட மோகன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் மணி என்கிற மோகன்ராஜிடம் விசாரித்தனர். அப்போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டதன்பேரில் மோகன்ராஜை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். கைதான மோகன்ராஜ், கேன்டீன் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றிவருகிறார்.
ஊரடங்கு காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்கள் அதிக அளவில் வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு பெண் அதிகாரி ஒருவர், ``கொரோனா காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அதனால் அங்கு செல்லாமல் பெண் குழந்தைகள், மாணவிகள் வீட்டிலேயே முடங்கியிருக்கிறார்கள். அதனால், தோழிகள் வீட்டுக்குச் செல்லும்போதும் தனியாக இருக்கும்போதும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மிரட்டலுக்கு பயந்தும், குடும்ப கௌரவம் கருதியும் அதைப் பலர் வெளியில் சொல்வதில்லை. மேலும், காதலிப்பதாகக் கூறியும் மாணவிகளைச் சிலர் ஏமாற்றிவருகின்றனர். இது தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு கவுன்சலிங்கை `தோழி’ என்ற திட்டத்தின் மூலம் அளித்துவருகிறோம். இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுவருகின்றன. எனவே, பெண் குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் தயங்காமல் புகாரளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா ஊரடங்கில் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெண்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்" என்றார்.