Published:Updated:

`ரேடியேஷன் அதிகமாக இருக்கிறது, உள்ளேயே இருங்கள்!' -லேடீஸ் ஹாஸ்டல்களைப் பதறவைத்த செல்போன் திருட்டு

லேடீஸ் ஹாஸ்டலுக்குச் செல்லும் பாலாஜி, `இந்தப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் சிக்னல் பிரச்னை. அதனால் உங்களின் செல்போன்களில் சிக்னல் வருகிறதா?' என்று கூறுவார்.

செல்போன் திருட்டு வழக்கில் சிக்கிய பாலாஜி
செல்போன் திருட்டு வழக்கில் சிக்கிய பாலாஜி

சென்னை அரும்பாக்கம், திருமங்கலம், நொளம்பூர், ஜெ.ஜெ.நகர், கோட்டூர்புரம், பொன்னேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல்களில் செல்போன்கள் நூதன முறையில் திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தியபோது லேடீஸ் ஹாஸ்டல்களில் செல்போன்கள் திருடுவது ஒரே நபர் எனத் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரைப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். அண்ணாநகரில் மட்டும் ஏராளமான செல்போன்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

ஹெல்மெட் அணிந்துவரும் பாலாஜி
ஹெல்மெட் அணிந்துவரும் பாலாஜி

இதையடுத்து, அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் சிவக்குமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், செல்போன் திருட்டு நடந்த லேடீஸ் ஹாஸ்டல் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நொளம்பூரிலிருந்து மாதவரம் வரையிலான 45 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் கண்காணித்தனர். அப்போதுதான் ஹெல்மெட் அணிந்தபடி டிப்டாப் ஆசாமி ஒருவர் லேடீஸ் ஹாஸ்டல்களுக்குக் காலை நேரத்தில் பைக்கில் வந்து செல்வது தெரியவந்தது.

Vikatan

இதையடுத்து அந்த நபரைப் பிடிக்க போலீஸார் வியூகம் அமைத்தனர். மூன்று டீம்களாகப் பிரிந்த போலீஸார், செல்போன்களைத் திருட வந்த நபரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி (31) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``பாலாஜி மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழும் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை செம்மஞ்சேரி பகுதிகளில் ஐ.டி.நிறுவனங்களில் பணியாற்றும் பலர் தங்கியுள்ளனர். அதிகாலை நேரத்தில் அவர்கள் பணிக்குச் செல்லும்போது கதவுகளை லாக் செய்யமாட்டார்கள்.

பாலாஜி
பாலாஜி

அதைத் தனக்குச் சாதகமாக்கிய பாலாஜி, திறந்துகிடக்கும் அறைகளுக்குள் சென்று லேப்டாப், செல்போன்களைத் திருடிவந்துள்ளார். அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட லேப் டாப்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செம்மஞ்சேரி பகுதியில் பாலாஜி பிரபலமானதால் அங்கிருந்து அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். எப்போதும் டிப்டாப்பாக உடையணியும் பாலாஜி, பந்தாவாகத் திருட்டு பைக்குகளில் வலம் வருவார்.

அண்ணாநகரில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல்கள் குறித்த விவரங்களை முதலில் நடைபாதை வியாபாரிகள் மூலம் சேகரிப்பார். பின்னர் காலை 7 மணி முதல் 8 மணிக்குள் லேடீஸ் ஹாஸ்டலுக்குச் செல்வார். அங்கு சென்றதும் குறிப்பிட்ட செல்போன் நெட்வொர்க் கம்பெனியிலிருந்து வருவதாக ஹாஸ்டல் நிர்வாகியிடம் கூறுவார். பின்னர், `உங்கள் பகுதியில் உள்ள வைஃபை மற்றும் செல்போன் டவரில் சிக்னல் பிரச்னை, அதனால்தான் செக் செய்ய வந்துள்ளேன்' என்று சொல்வார். அதை லேடீஸ் ஹாஸ்டலில் உள்ளவர்கள் நம்பும் வகையில் பாலாஜி பேசுவார்.

பாலாஜி, சாகுல்
பாலாஜி, சாகுல்

இதையடுத்து, ஹாஸ்டலில் உள்ளவர்களின் செல்போன்களில் வைஃபையை ஆன் செய்யச் சொல்வார். பின்னர், `ரேடியேஷன் அதிகமாக உள்ளதால் நீங்கள் அனைவரும் அறைக்குள் செல்லுங்கள். நான் செக்அப் செய்த பிறகு வாருங்கள்' என்று கூறுவார். அனைவரும் சென்றபிறகு செல்போன்களை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றுவிடுவார். செல்போனில் வைஃபை செக்அப் செய்ய வந்த நபர் மாயமான பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை லேடீஸ் ஹாஸ்டலில் உள்ளவர்கள் உணர்ந்து காவல் நிலையங்களில் புகார் கொடுப்பார்கள்.

செல்போன்கள் கையில் கிடைத்ததும் பல்லாவரத்தைச் சேர்ந்த சாகுலிடம் விற்றுவிட்டு அந்தப் பணத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்குச் செல்வார். அங்கு விருப்பம் போல வாழ்வார். கையில் பணம் காலியானதும் மீண்டும் அடுத்த லேடீஸ் ஹாஸ்டலுக்குச் சென்று செல்போன்களைத் திருட ஆரம்பிப்பார். பாலாஜியிடமிருந்து 34 ஸ்மார்ட் போன்களைப் பறிமுதல் செய்துள்ளோம். சாகுலையும் கைது செய்துள்ளோம்.

சாகுல்
சாகுல்

தனிப்படை போலீஸாரிடம் சிக்கிய பாலாஜியை நொளம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம். இன்ஸ்பெக்டர் தேவிகா விசாரித்து பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளார். அண்ணாநகரைத் தவிர வேறு பகுதிகளிலும் பாலாஜி கைவரிசை காட்டியுள்ளார். அதனால் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்" என்கின்றனர்.

பல மாதங்களாக லேடீஸ் ஹாஸ்டல்களிலிருந்து செல்போன்களை நூதன முறையில் திருடிய பாலாஜியைத் திறம்படப் பிடித்த தனிப்படை போலீஸாரை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்.

`ரேடியேஷன் அதிகமாக இருக்கிறது, உள்ளேயே இருங்கள்!' -லேடீஸ் ஹாஸ்டல்களைப் பதறவைத்த செல்போன் திருட்டு #MobilePhoneTheft #Crime மேலும் விவரங்களுக்கு : http://bit.ly/2FMb9zZ

Posted by Vikatan EMagazine on Monday, January 13, 2020