Published:Updated:

`கொரோனா சமயத்தில் திருடினால் அரஸ்ட் பண்ணமாட்டாங்க!' -தப்புக்கணக்கு போட்ட திருடனுக்கு நேர்ந்த சோகம்

உதயசேகர்
உதயசேகர்

`கொரோனா சமயத்தில் செல்போனைப் பறித்தால் கைது செய்யமாட்டங்க என்ற தைரியத்தில் திருடினேன்' என்று கூறிய கொள்ளையனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர் சென்னை போலீஸார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் வ.உ.சி தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் பள்ளிக்கொண்ட பெருமாள் (33). இவர் கடந்த 19-ம் தேதி கௌரியம்மன் கோயில் தெருவில் உள்ள மளிகைக் கடைக்கு வந்தார். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லை.

`ரேடியேஷன் அதிகமாக இருக்கிறது, உள்ளேயே இருங்கள்!' -லேடீஸ் ஹாஸ்டல்களைப் பதறவைத்த செல்போன் திருட்டு
மீட்கப்பட்ட செல்போன்
மீட்கப்பட்ட செல்போன்

தெருவில் தனியாக நடந்து வந்த பள்ளிக்கொண்ட பெருமாளின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியபடி அவர் நடந்துசென்றார். அப்போது பின்னால் பைக்கில் வந்த இருவர், பள்ளிக்கொண்ட பெருமாளின் செல்போனைப் பறித்துவிட்டு எஸ்கேப் ஆனார்கள். செல்போனைப் பறிகொடுத்த பள்ளிக்கொண்ட பெருமாள், அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் பைக்கில் வந்தவர்கள் மின்னல்வேகத்தில் சென்றுவிட்டனர்.

இதையடுத்து பள்ளிக்கொண்டபெருமாள், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெர்ரி, வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்ற எஸ்.ஐ. தமிழன்பன், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது, பைக்கின் நம்பர் மற்றும் கேமராவில் பதிவான உருவம் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கைதான உதயசேகர்
கைதான உதயசேகர்
`செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே..!’ - ஊரடங்கில் சென்னை மெக்கானிக்குக்கு நேர்ந்த சோகம்

விசாரணையில் செல்போன் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த உதயசேகர் (27) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இவர், சிறு வயது முதல் செயின்பறிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். அவரிடமிருந்து பள்ளிக்கொண்டபெருமாளின் விலை உயர்ந்த செல்போனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் வாகனத்தின் பதிவு நம்பர் அடிப்படையில் உதயசேகரைக் கைது செய்துள்ளோம். இவர் மீது கண்ணகி நகர், செம்மஞ்சேரி காவல் நிலையங்களில் 20 வழக்குகள் உள்ளன. தமிழகத்தைத் தவிர பெங்களூரில் வீட்டில் கொள்ளையடித்த வழக்கும் நிலுவையில் உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த உதயசேகர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக சிறையிலிருந்து கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதில் உதயசேகரும் வெளியில் வந்தார். வீட்டில் இருந்த உதயசேகர், மீண்டும் செல்போன் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் வந்த கூட்டாளியைத் தேடிவருகிறோம்" என்றனர்.

கொரோனா காரணமாக கைதிகள் விடுவிக்கப்பட்டதால் தற்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சிறையில் அடைக்கமாட்டார்கள் என நினைத்தேன்.
உதயசேகர்

உதயசேகரிடம் போலீஸார் விசாரித்தபோது `கொரோனா காரணமாக கைதிகள் விடுவிக்கப்பட்டதால் தற்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சிறையில் அடைக்கமாட்டார்கள் எனத் தப்புக்கணக்கு போட்டுவிட்டேன். ஆனால், போலீஸார் என்னைக் கைது செய்துவிட்டனர்' என்று கூறியுள்ளார்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் உதயசேகரை தங்கள் பாணியில் கவனித்துள்ளனர். தற்போது, உதயசேகரின் கையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. வழக்கம் போல பிடிக்கச் சென்ற இடத்தில் உதயசேகர் தவறி விழுந்துவிட்டதாக போலீஸார் கூறியுள்ளனர். சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் திருடனைப் பிடித்ததால் எஸ்.ஐ- தமிழன்பன் தலைமையிலான காவலர்கள் பிரதீப்குமார், இன்பராஜ், செல்வகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினரை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு