Election bannerElection banner
Published:Updated:

சென்னை: ஒரே பைக், கூடவே பயணம்; நண்பனிடம் ஆள்வைத்து செயின் பறிப்பு! - கூட்டாளிகளுடன் சிக்கிய பின்னணி

செயின் பறிப்பு
செயின் பறிப்பு ( representational image )

சென்னையில் நண்பனின் தங்கச் செயினைப் பறிக்க ஆள்வைத்த இளைஞரையும், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவர்களையும் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பேசின் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் சித்திக் ஜிங்கர் (21). இவரின் நண்பர் அக்சய் ஜெயின். இவர்கள் இருவரும் கடந்த 5-ம் தேதி மதியம் 2:45 மணியளவில் பைக்கில் எழும்பூர் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை வழியாகச் சென்றனர். அப்போது பின்னால் பைக்கில் வந்த இரண்டு பேர் சித்திக் ஜிங்கரின் பைக்கை வழிமறித்தனர். கத்தியைக் காட்டி மிரட்டி சித்திக் ஜிங்கரிடமிருந்து ஐந்து சவரன் தங்க செயினைப் பறித்துக்கொண்டு தப்பினர். அப்போது அக்சய் ஜெயினும், செயின் பறித்த இளைஞர்களுடன் போராடி தோற்றுப்போனார்.

செயின் பறிப்பு
செயின் பறிப்பு

செயினைப் பறிக்கொடுத்த சித்திக் ஜிங்கர், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்போதும் அவருக்கு உதவியாக அக்சய் ஜெயின் சென்றார். புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்டது சௌகார்பேட்டையைச் சேர்ந்த ஈஸ்வர் (28), கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுனில் (31) எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைதுசெய்து அவர்களிடமிருந்து ஐந்து சவரன் தங்க செயினைப் பறிமுதல் செய்தனர். இருவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சென்னை: செயின் பறிப்பு... போராடிய ஐடி நிறுவனப் பெண் ஊழியர்! - வீட்டை மாற்றியும் சிக்கிய திருடன்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதான ஈஸ்வர், சுனில் ஆகியோரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தோம். அப்போது சித்திக் ஜிங்கரின் நண்பர் அக்சய் ஜெயினின் செல்போன் நம்பர் அதில் இருந்தது. அது தொடர்பாக ஈஸ்வர், சுனிலிடம் விசாரித்தபோது செயினை வழிப்பறி செய்யக் கூறியதே அக்சய் ஜெயின் என்று தெரிவித்தனர். இதையடுத்து சித்திக் ஜிங்கரிடம் தகவலைத் தெரிவித்தபோது முதலில் அவர் நம்பவில்லை. அதன் பிறகு ஆதாரங்களுடன் தகவலைத் தெரிவித்தோம். பின்னர் அக்சய் ஜெயினிடம் விசாரித்தபோது அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார். அதனால் இந்த வழிப்பறி சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டது அக்சய் ஜெயின் எனத் தெரிந்ததும் அவரையும் கைதுசெய்திருக்கிறோம். இதையடுத்து மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

கைது
கைது

அக்சய் ஜெயின் சிக்கியது எப்படி என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சம்பவத்தன்று அக்சய் ஜெயினும் சித்திக் ஜிங்கரும் பைக்கில் சென்றுகொண்டிருக்கும் தகவலை போன் மூலம் ஈஸ்வர், சுனிலுக்கு அக்சய் ஜெயின் கூறியிருக்கிறார். உடனே சித்திக் ஜிங்கரின் பைக்கை ஈஸ்வரும் சுனிலும் பின்தொடர்ந்திருக்கின்றனர். அதன் பிறகுதான் செயினைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். போன் அழைப்பால் சித்திக் ஜிங்கரின் நண்பர் அக்சய் ஜெயின் இந்த வழக்கில் சிக்கிக்கொண்டார்" என்றார்.

இளைஞரின் தங்க செயினைப் பறிக்க அவரின் நண்பரே திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு