சென்னை: `பணம் கொடுத்தால் பதவிகள் கிடைக்கும்!’ - மோசடி வழக்கில் சிக்கிய தந்தை, மகன்

சென்னை சினிமா தயாரிப்பாளருக்கு தேர்தலில் எம்.பி சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.
பாரதிதாசன் பல்கலைகழகத்தில் பணியாற்றுபவர் செந்தில்குமார். இவரிடம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி பெங்களுரைச் சேர்ந்த மகாதேவய்யா என்பவர் ஏமாற்றியதாக சிபிசிஐடி போலீஸிடம் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார், 2018-ம் ஆண்டு மகாதேவய்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது மகாதேவய்யா, ஜாமீனில் வெளியில் வந்தார்.

இந்தநிலையில் வடபழனியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான ஜோன்ஸ் என்பவரை ஒரு கும்பல் எம்.பி சீட் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியது. அது தொடர்பாக அவர் சிபிசிஐடி போலீஸிடம் புகாரளித்தார். அந்தப் புகாரில், தனக்கு எம்.பி. சீட் வாங்கித் தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாயை வாங்கி ஏமாற்றியதாக குறிப்பிட்டிருந்தார். ஜோன்ஸ் அளித்த தகவலின்படி போலீஸார் விசாரித்தனர். அப்போதுதான் 2018-ம் ஆண்டு நடந்த துணை வேந்தர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் செய்த மகாதேவய்யா மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த மோசடிக்கு பின்னணியில் மகாதேவய்யா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மோசடி தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடியில் தனிப்படை அமைக்கப்பட்டது. மோசடி கும்பல் மைசூரில் பதுங்கியிருக்கும் ரகசிய தகவல் போலீஸாருக்க கிடைத்தது. உடனடியாக போலீஸார் மைசூருக்குச் சென்றனர். இந்த மோசடியில் மகாதேவய்யாவின் மகன் அங்கித், அவரின் நண்பரும் தரகருமான ஓம் என்பவருக்கும் தொடர்ப் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணயில் இவர்கள் பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மகாதேவய்யாவின் மகன் அங்கித். எம். இ படித்திருக்கிறார். இவர்தான் மோசடிக்கு மூளையாக செயல்பட்டிருக்கிறார். ஆளுநர், பிரதமர்., மாநில முதல்வர்கள் அலுவலக முத்திரைகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் கையெழுத்து ஆகியவற்றை போலியாக தயாரித்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இமெயில் மூலம் போலி நியமன ஆணைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி இந்தக் கும்பல் நம்ப வைக்கும். அதன்பிறகே பதவிக்கு ஏற்ப ஒரு கோடி ரூபாயில் தொடங்கி சில கோடிகள் வரை இந்தக் கும்பல் வசூலித்திருக்கிறது. இந்த மோசடிக்கு ஓம் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டிருக்கிறார். இவர் ஓசூரை சேர்ந்தவர்.

இந்த கும்பல் தமிழகத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் கைவரிசை காட்டியிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் பெங்களூர், மைசூர் ஆகிய இடங்களில் மகாதேவய்யா பங்களா வீடுகளை வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கோடி கணக்கில் மோசடி செய்த 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.