சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வனஜா (36) என்பவர் தனது 17 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவரின் கணவர், பத்தாண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கணவரை இழந்து மகளுடன் வாழ்ந்து வந்த வனஜாவுக்கு தமீம்அன்சாரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு வனஜா, தமீம்அன்சாரி என்பவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த 5.4.2022-ம் தேதி இரவு வனஜாவின் 17 வயது மகளுக்கு தமீம்அன்சாரி பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வனஜா, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வனஜாவின் மகளிடமும் தமீம்அன்சாரியிடமும் தனித்தனியாக விசாரித்தனர். சிறுமி அளித்த தகவலின்படி தமீம்அன்சாரி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது இன்னொரு அதிர்ச்சி தகவலும் வெளியானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுகுறித்து செம்பியம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``சிறுமியின் அம்மா கொடுத்த புகாரில் தமீம்அன்சாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். கைதான தமீம்அன்சாரி மீது கொலை வழக்கும் திருட்டு வழக்கும் உள்ளன. சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கை விசாரித்தபோது ராஜேஸ் என்பவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதில் சிறுமி கர்ப்பமாகியிருக்கிறார். அதை யாருக்கும் தெரியாமல் கலைக்க சிறுமியின் அம்மா வனஜா உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து சிறுமியின் அம்மா வனஜாவைக் கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள ராஜேஸை தேடிவருகிறோம். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனையும் கவுன்சலிங்கும் அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.