Published:Updated:

`என்னைவிட அவளுக்கு ஒரு வயது அதிகம்!' -சினிமா துணை நடிகை விவகாரத்தில் சிக்கிய நடிகர்

தியாகராஜன்
தியாகராஜன்

திருமண ஆசை காட்டி, துணை நடிகையுடன் கணவன் மனைவியாக வாழ்ந்த சினிமா பட ஹீரோவை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த துணை நடிகை ஒருவர், தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 9.6.2020-ல் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தேன். அப்போது, சில படங்களில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. என்னுடன் படத்தில் நடித்த தியாகராஜன் என்பவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் 9 ஆண்டுகளாகக் காதலித்தோம்.

`சந்தோஷமாகத்தான் தாலி கட்டினான்... ஆனால்?' - மணமகளுக்கு நேர்ந்த கொடூரம்; விபரீத முடிவெடுத்த மணமகன்

பின்னர், தி.நகரில் வாடகைக்கு வீடு எடுத்த தியாகராஜனும் நானும் 5 ஆண்டுகள் கணவன் மனைவிபோல வாழ்ந்தோம். அதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். தியாகராஜனின் வற்புறுத்தலின்பேரில் பல தடவை கருவைக் கலைத்துள்ளேன். தற்போது அவர், என்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவருகிறார். அதுகுறித்து பேசினால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, நடிகர் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்பேரில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி உத்தரவின்பேரில், தி.நகர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், நடிகர் தியாகராஜனிடம் விசாரணை நடத்தி அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

முதலிரவில் கொல்லப்பட்ட மணமகள்! - திருவள்ளூர் மணமகனின் அதிர்ச்சிப் பின்னணி

இதுகுறித்து தி.நகர் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் (31). இவர், `தரிசு நிலம்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கும் 'நாடோடிகள்' படத்தில் துணை நடிகையாக நடித்தவருடன் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டது.

அந்தப் படத்தையடுத்து, மேலும் பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இதனால் நெருக்கம் அதிகம் ஏற்பட்டு இருவரும் காதலித்ததோடு, கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர். தற்போது, துணை நடிகையை ஏமாற்றிய புகாரில் தியாகராஜன் மீது 417 (நம்பிக்கை மோசடி), 420 (மோசடி), 376(2) (n), 313 (கருவை அழித்தல்), 506(1) (கொலை மிரட்டல்) பெண்கள் வன்கொடுமைச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம்.

வன்கொடுமை
வன்கொடுமை

தியாகராஜனிடம் விசாரித்தபோது, துணை நடிகை தன்னைவிட ஒரு வயது மூப்பு என்பதால் அவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறியது தெரியவந்தது. மேலும், தன்னிடமிருந்து தியாகராஜன் பணம், நகைகளை வாங்கியதாகவும் புகார் கொடுத்த துணை நடிகை குற்றம் சுமத்தியுள்ளார். கைதான தியாகராஜன், சென்னை மாநகராட்சியில் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வருகிறார். அதனால் துணை நடிகையை அவர் சந்திப்பதையும் தவிர்த்துவந்துள்ளார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு