Published:Updated:

`சினிமா பிரபலங்களுக்கு டோர் டெலிவரியில் மதுபானம்!' - துணை நடிகர் சிக்கிய பின்னணி #Lockdown

துணை நடிகர் ரிஸ்வான்
துணை நடிகர் ரிஸ்வான்

ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்க வாட்ஸ்அப் குழுவை ஏற்படுத்தி டோர் டெலிவரி செய்த துணை நடிகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் வீடுகளிலேயே மக்கள் முடங்கியுள்ளனர். வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுவுக்கு அடிமையானவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள்

மதுபானங்கள் கிடைக்காததால் தமிழகத்திலும் கேரளாவிலும் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்தன. அதனால் கேரளாவில் டாக்டர்கள் பரிந்துரைத்தால் மதுபானங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக டாஸ்மாக் கடைகள் உடைக்கப்பட்டு மதுபானங்கள் திருடப்படுகின்றன. இந்தத் திருட்டுச் சம்பவங்களில் சில டாஸ்மாக் ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

டாஸ்மாக் மதுபானம் கிடைக்காததால் மாற்று போதையைப் பயன்படுத்திய சிலர், உயிரிழந்த சம்பவங்களும் நடந்தன. இன்னும் சில இடங்களில் கள்ளச்சாராய விற்பனை படுஜோராக நடந்து வருகின்றன. கள்ளச்சந்தையில் மதுபானம், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தென்சென்னையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை நடப்பதாக போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இணை கமிஷனரின் தனிப்படை போலீஸ் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் தலைமையில் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்
பறிமுதல் செய்யப்பட்ட கார்

போலீஸாரின் அதிரடிச் சோதனையில் அசோக் நகர், எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் டாஸ்மாக் மதுபானங்களைக் கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 80-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள், இருசக்கரவாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து எம்.ஜி.ஆர் நகர், அண்ணா மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் மதுபானங்களைப் பதுக்கி ரகசியமாக விற்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

மதுபானங்கள் விற்பனை நடந்த வீட்டுக்குத் தனிப்படை போலீஸார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அங்கு ரிஸ்வான் (30) என்பவரை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். அவரிடமிருந்து 57 குவாட்டர் பாட்டில்கள், 12 பீர் பாட்டில்கள் மற்றும் 2,300 ரூபாய் ஆகியவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இவர், சமீபத்தில் வெளியான `திரௌபதி' படத்தில் துணை நடிகராக நடித்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

துணை நடிகர் ரிஸ்வான்
துணை நடிகர் ரிஸ்வான்

ரிஸ்வான் அளித்த தகவலின் பேரில் சென்னை, சாலிகிராமத்தில் வசித்து வரும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வரும் பிரதீப் (31) மற்றும் அவரின் கார் டிரைவர் சூளைமேட்டைச் சேர்ந்த தேவராஜ் (41) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தேவராஜின் காரில் பதுக்கி வைத்திருந்த 189 குவார்ட்டர் பாட்டில்கள், 20,000 ரூபாய் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``விருகம்பாக்கம் மீன் மார்க்கெட் அருகில் காரில் மதுபானங்களைக் கொண்டு சென்று இந்தக் கும்பல் ரகசியமாக விற்றுள்ளது. துணை நடிகர் ரிஸ்வான், பிரதீப் ஆகியோர் டாஸ்மாக் மதுபானங்களைத் திரைப்பட பிரபலங்களுக்கு கொள்ளை லாபத்துக்கு விற்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் தேவராஜ் மதுபானங்களை சப்ளை செய்துள்ளார். குவாட்டர் பாட்டில் ஒன்றை 1,000 ரூபாய்க்கு வாங்கிய ரிஸ்வான், பிரதீப் அதைத் தங்களின் வீடுகளில் பதுக்கி வைத்துள்ளனர். பின்னர் அதைத் தன்னுடைய நண்பர்கள், சினிமா பிரபலங்களுக்கு 1,200 ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

மதுபானம் விற்ற வழக்கில் கைதானவர்
மதுபானம் விற்ற வழக்கில் கைதானவர்

இதற்கென தனியாக வாட்ஸ்அப் குழு ஒன்றையும் ஆரம்பித்துள்ளனர். அந்தக் குழுவில் மதுபானங்களை கேட்பவர்களுக்கு டோர் டெலிவரியையும் செய்துள்ளனர். தேவராஜுக்கு எப்படி மதுபானங்கள் கிடைத்தது என்று விசாரித்து வருகிறோம். அவர் அளிக்கும் தகவலின்படி டாஸ்மாக் ஊழியர்களுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவரும்" என்றனர்.

கைதான துணை நடிகர் ரிஸ்வான், பிரதீப், தேவராஜ் ஆகிய மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு