Election bannerElection banner
Published:Updated:

`திருமண நாள்; ஆசீர்வதியுங்கள்' - அன்பாகப் பேசி முதியவரிடம் வைர மூக்குத்தி, பணத்தைத் திருடிய தம்பதி

முதியவர் சாமிநாதனிடமிருந்து பறித்த பணம்
முதியவர் சாமிநாதனிடமிருந்து பறித்த பணம்

`இன்று எங்களுக்கு திருமணநாள் என்பதால் ஆசீர்வதியுங்கள்’ என்று கூறி முதியவர் சாமிநாதனை தம்பதியர் கடத்திச் சென்று பணம், வைர மூக்குத்தி, செல்போன் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றிருக்கின்றனர்.

சென்னை, புழுதிவாக்கம் பாலாஜி நகர் 36-வது தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன் (75). இவர், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் 6.3.2021-ல் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் கீழ்த்தளத்தில் தனியாக வாடகைக்குக் கடந்த 2020-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி முதல் குடியிருந்துவருகிறேன். நான் தமிழ்நாடு மின்வாரியத்தில் துணைப் பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுவிட்டேன். எனது மனைவி 40 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். என் மகன் 17 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டான்.

கைதுசெய்யப்பட்ட தினேஷ், நூர்சபா, ஐசக், பிரபு
கைதுசெய்யப்பட்ட தினேஷ், நூர்சபா, ஐசக், பிரபு

நான் குடியிருக்கும் வீட்டின் எதிரே கடந்த டிசம்பர் மாதம் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் புதிதாகக் குடிவந்தனர். அந்த ஆண்களின் பெயர்கள் தினேஷ், ஐசக், பிரபு என்கிற அப்புக்குட்டி, அந்தப் பெண்ணின் பெயர் நூர்சபா. அவர்கள் அங்கு குடிவந்ததிலிருந்தே என்னிடம் மிகவும் அன்பாகப் பழகிவந்தனர். அவர்கள் என்னிடம் உறவினர்போலப் பழகியதால் நானும் அவர்களிடம் எனது குடும்பச்சூழல் மற்றும் ஓய்வூதிய விவரங்கள், நான் சேமித்து வைத்திருக்கும் பணம் குறித்து ஒளிவுமறைவின்றி அனைத்தையும் கூறினேன்.

4.3.2021-ல் தினேஷ், நூர்சபா என்னிடம் வந்து `எங்களுக்குத் திருமணநாள். நீங்கள் எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்’ என்று கூறினர். பின்னர் இரவு அவர்கள் கொண்டுவந்த காரில் என்னை தாம்பரம் அருகேயுள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எனக்கு இரவு உணவு கொடுத்து உபசரித்தனர். அப்போது இரவு வெகுநேரமாகிவிட்டதால், இங்கு தங்கிக்கொள்ளலாம் என்று அவர்கள் கூறினர். பின்னர் 5.3.2021-ல் காலை உணவு கொடுத்து என்னிடம் அன்பாகப் பேசினர். அப்போது அவர்கள் தாங்கள் மரம் அறுக்கும் வேலை செய்துவருவதாகவும் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் பணம் கொடுத்து உதவ வேண்டும் என்றும் என்னிடம் கேட்டனர். அதற்கு நான் பணம் கொடுக்க முடியாது என்று மறுத்தேன். உடனே அவர்கள் என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி அந்த அறைக்குள் பூட்டிவைத்தனர். என்னிடமிருந்த செல்போனையும் பறித்தனர். நான் தங்கியிருந்த வீட்டின் சாவியையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

கன்னியாகுமரி: `வாழ்நாள் முழுவதும் உழைத்த பணம்!’ - பெண்களிடம் நூதன மோசடி; சர்ச்சையில் தம்பதி
கைதான தினேஷ், நூர்சபா, ஐசக், பிரபு
கைதான தினேஷ், நூர்சபா, ஐசக், பிரபு

அதனால் எனக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது . உடனடியாக அந்த அறையின் கதவைச் சிரமப்பட்டு திறந்தேன். அதன் பிறகு ஆட்டோ மூலம் புழுதிவாக்கத்திலுள்ள எனது தம்பி வீட்டுக்குச் சென்று விவரத்தைக் கூறினேன். பின்னர் தம்பியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றபோது நான் சேமித்துவைத்திருந்த 7,53,000 ரூபாய், நான் வைத்திருந்த வைர மூக்குத்தியையும் காணவில்லை. என்னிடம் மேற்படி நபர்கள் நம்பிக்கை மோசடி செய்து என்னை மிரட்டி, வீட்டிலிருந்த வைர நகை, பணம் மற்றும் செல்போனை எடுத்துச் சென்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் மடிப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்தத் கும்பலைச் சேர்ந்தவர்களின் செல்போன் சிக்னல் பெங்களூருவில் இருப்பதாகக் காட்டியது. அதனால் மடிப்பாக்கம் போலீஸார் பெங்களுருக்குச் சென்றனர். அங்கு பதுங்கியிருந்த தினேஷ் என்கிற குரு (29), அவரின் மனைவி நூர்சபா (23). ஐசக் (31), காஞ்சிபுரம் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரபு என்கிற அப்பு குட்டி (24) ஆகிய நான்கு பேரை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடமிருந்து 5,60,000 ரூபாய் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

எஃப்.ஐ ஆர்
எஃப்.ஐ ஆர்

இது குறித்து போலீஸார் கூறுகையில், `` கைதுசெய்யப்பட்ட தினேஷ், ஐசக் ஆகியோரின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் திருவிருட்டான்புலி, அந்தோணி நகர். ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் நட்பாகப் பழகிவந்தனர். பெங்களூரு மடிவாளா பகுதியைச் சேர்ந்த நூர்சபா என்பவரை தினேஷ் திருமணம் செய்திருக்கிறார். தினேஷ், நூர்சபா, ஐசக், பிரபு ஆகியோர் புழுதிவாக்கம், பாலாஜிநகரில் வாடகைக்குக் குடியிருந்தனர். அப்போதுதான் சாமிநாதனிடம் நூர்சபா, தினேஷ் ஆகியோர் அன்பாகப் பழகி அவர் குறித்த தகவல்களைச் சேகரித்திருக்கின்றனர். அதன் பிறகுதான் அவரை நூதன முறையில் ஏமாற்றி வைரமூக்குத்தி, பணம், செல்போன் ஆகியவற்றைத் திருடியிருக்கின்றனர். ஐசக் மீது விபசார தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்திலும் ஐசக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

அன்பாகப் பேசி ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை நூதன முறையில் ஏமாற்றிய கும்பல் சிக்கியிருப்பது புழுதிவாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு