Election bannerElection banner
Published:Updated:

சென்னை: பெண்களுடன் டேட்டிங்; நடிகை வீட்டில் வேலை! -மோசடி தம்பதியிடம் ரூ.16 லட்சத்தை இழந்த தொழிலதிபர்

டேட்டிங் மோசடியில் கைதுசெய்யப்பட்ட யாசிம் கான் ரசூல் பெக்
டேட்டிங் மோசடியில் கைதுசெய்யப்பட்ட யாசிம் கான் ரசூல் பெக்

நடிகை வீட்டில் வேலை, கைநிறைய சம்பளம் என விளம்பரப்படுத்தி, கொஞ்சும் குரலில் பேசி, தொழிலதிபர்களிடமும், சபல புத்தியுள்ளவர்களிடமும் பணம் பறித்த கணவன், மனைவியை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மனிஷ்குப்தா. இவர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் menx her என்ற இணையதளம் மூலமாக அடையாளம் தெரியாத நபரால் தான் 16,50,993 ரூபாய் ஏமாற்றப்பட்டதாகப் புகாரளித்தார். அதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். விசாரணையில் மும்பையைச் சேர்ந்த திபான்கர் காஸ் நாவிஸ் என்பவரும், அவரின் மனைவி யாசிம் கான் ரசூல் பெக்-கும் ஆண்களைக் குறிவைத்து டேட்டிங் நடத்துவதாக விளம்பரம் செய்து ஏமாற்றிவருவது தெரியவந்தது.

டேட்டிங் ஆப் மூலம் 31 வயதில் பில்லியனர் ஆன பெண்... யார் இந்த விட்னி ஹெர்ட்? #Bumble
திபான்கர் காஸ் நாவிஸ்
திபான்கர் காஸ் நாவிஸ்

இதையடுத்து அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், மோசடிக் கும்பல் தலைமறைவாகிவிட்டது. இந்தநிலையில், மும்பை நகர குற்றப்பிரிவினர் திபான்கர் காஸ் நாவிஸ், யாசிம் கான் ரசூல் பெக் இருவரையும் ஆபாசப் படங்களைத் தயாரித்து, இணையதளத்தில் வெளியிட்ட குற்றத்துக்காக கைதுசெய்து மும்பைச் சிறையில் அடைத்தனர் போலீஸார். இந்தத் தகவல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தெரிந்ததும் சைபர் குற்றங்களை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் எஸ்.ஐ தியாகராஜன், தலைமைக் காவலர் ஸ்டாலின், நிஷா, முதல்நிலைக் காவலர் மோகன் ஆகியோர்கொண்ட தனிப்படை போலீஸார் மும்பைக்குச் சென்றனர். அப்போது வேறு ஒரு வழக்கில் மும்பை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு திபான்கர் காஸ் நாவிஸ், யாசிம் கான் ரசூல் பெக் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நீதிமன்ற அனுமதியுடன் மனிஷ்குப்தா புகாரின் பேரில் இருவரையும் கைதுசெய்த போலீஸார் மும்பையிலிருந்து சென்னைக்கு அழைத்துவந்தனர். பின்னர் மனிஷ் குப்தா புகாரின் பேரில் இருவரிடம் விசாரித்தனர். அதன் பிறகு சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``கைதான திபான்கர் காஸ் நாவிஸ், யாசிம் கான் ரசூல் பெக் இருவரும் கணவன், மனைவி. அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கியிருக்கிறோம். menx her என்ற இணையதளத்தில் பெண்களுடன் சந்தோஷமாக இருக்கலாம் என செல்போன் நம்பர்களை முதலில் பதிவு செய்வார்கள்.

அந்த நம்பரைத் தொடர்புகொள்ளும் சபல புத்தியுள்ளவர்களிடம் எதிர்முனையில் பேசும் பெண் ஒருவர் கவர்ச்சிகரமாகவும் கொஞ்சும் குரலிலும் பேசுவார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தை திபான்கர் காஸ் நாவிஸ், யாசிம் கான் ரசூல் பெக் இருவரும் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பச் சொல்வார்கள். இப்படிப் பலரிடம் இவர்கள் பணத்தை ஏமாற்றி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மனிஷ்குப்தாவிடமும் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய இவர்கள், அதன் பிறகு தலைமறைவாகிவிட்டனர். இவர்கள்மீது மனிஷ்குப்தா, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகாரளித்த பிறகுதான் இப்படியொரு மோசடித் தகவல் எங்களுக்குத் தெரியவந்தது.

டேட்டிங்
டேட்டிங்
representational image

இந்தக் கும்பல் குறித்து மும்பை போலீஸாரிடம் விவரங்களைச் சேகரித்தோம். அப்போதுதான் திபான்கர் காஸ் நாவிஸ், யாசிம் கான் ரசூல் பெக் குறித்து அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தன. அதாவது, பிரபலமான நடிகைகள், பெண் தொழிலதிபர்களிடம் பி.ஏ வேலை என்று திபான்கர் காஸ் நாவிஸ், யாசிம் கான் ரசூல் பெக் விளம்பரம் செய்வார்கள். அதில் கைநிறைய சம்பளம் என்று குறிப்பிடுவார்கள். அதை நம்பி விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் செல்போன் நம்பரைத் தொடர்புகொண்டால், இன்டர்வியூவை போனிலேயே நடத்துவார்கள்.

அதன் பிறகு `உங்களை வேலைக்கு செலக்ட் செய்துவிட்டோம். இந்த வேலைக்கு முன்பணம் செலுத்த வேண்டும்’ என்று கூறி குறிப்பிட்ட தொகையை வசூலிப்பார்கள். அதன் பிறகு வேலை கொடுக்காமல் பணத்துடன் திபான்கர் காஸ் நாவிஸ், யாசிம் கான் ரசூல் பெக் தலைமறைவாகிவிடுவார்கள். திபான்கர் காஸ் நாவிஸ், மும்பை சினிமாவில் புகைப்பட கலைஞராகப் பணியாற்றிவந்திருக்கிறார். அந்த நட்பு வட்டாரத்தில் சினிமாவில் நடிக்கவரும் பெண்களை ஆபாசமாகப் படம், வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டிருக்கின்றனர். அந்த வழக்கில்தான் மும்பை போலீஸார் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். திபான்கர் காஸ் நாவிஸ், யாசிம் கான் ரசூல் பெக் இருவராலும் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகாரளிக்கலாம்" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு