Published:Updated:

சென்னை: `நான்தான் ஹவுஸ் ஓனர்’ - வாடகைக்குக் குடியிருந்தவர்கள் அதிர்ச்சி... மூவரால் ஏமாந்த 100 பேர்

வீடு வாடகை மோசடியில் சிக்கிய காயத்ரி
News
வீடு வாடகை மோசடியில் சிக்கிய காயத்ரி

சென்னையில் வீடு வாடகை, குத்தகை என்ற பெயரில் நூதன முறையில் வீட்டின் உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் ஆகியோரை ஏமாற்றிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

சென்னையில் வாடகைக்கு வீடு, குத்தகைக்கு வீடு தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். புரோக்கர்கள் மூலம் வீடுகளை வாடகைக்கும் குத்தகைக்கும் எடுத்த காலம் மாறி இணையதளத்தின் மூலம் வீடுகளைப், பலர் தேடிவருகின்றனர். கொரோனாவால் வருமானத்தை இழந்த பலர் சென்னையில் வீடுகளை காலி செய்துவிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். அதனால் சென்னையில் ஏராளமான வீடுகள் காலியாக உள்ளன. வீட்டின் வாசலில் TOLET போர்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளதை அதிக அளவில் பார்க்க முடிகிறது.

விக்னேஷ்
விக்னேஷ்

சென்னையில் வீடுகளை வாடகைக்குப் பிடித்துக் கொடுக்கும் புரோக்கர்களுக்கு ஒரு மாத வாடகை அல்லது குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க வேண்டும். தற்போது இணையதளம் மூலமாகவும் வீடுகளை வாடகைக்கு மக்கள் பார்த்துவருகின்றனர். அதற்கான இணையதளங்களும் செயல்பட்டுவருகின்றன. இந்தச் சூழலில் சென்னை தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் வீடுகளை வாடகைக்கும் குத்தகைக்கும் பிடித்துக் கொடுக்கும் தொழிலை ஹைடெக்காக செய்து, அதில் நூதன முறையில் மோசடி செய்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``சென்னை கிழக்கு தாம்பரம், அந்தோணி தெருவில் சன் சைன் ப்ராப்ரிட்டி டெலவப்பர் என்ற பெயரில் ஓர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை ஈரோடு மாவட்டம், காட்டூர் மன்னதன்பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் (27), சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் விக்னேஷ், அவரின் மனைவி காயத்ரி (32) ஆகியோர் நடத்திவந்தனர். இவர்கள், கிழக்கு தாம்பரம், சேலையூர், மடிப்பாக்கம், நன்மங்கலம், பம்மல், புழுதிவாக்கம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வீடுகளை லீஸுக்கும் வாடகைக்கும் எடுத்து, அவற்றைக் கூடுதல் தொகைக்கு வாடகை, லீஸுக்கு மற்றவர்களுக்கு கொடுத்துள்ளனர்.

பிரகாஷ்
பிரகாஷ்

இந்தநிலையில் வீட்டின் உரிமையாளர்களுக்குச் சில மாதங்களாக வாடகைப்பணம் கொடுக்கப்படவில்லை. அதனால், வீட்டின் உரிமையாளர்கள் வாடகைக்கு இருந்தவர்களிடம் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளனர். அப்போது அவர்கள், `நாங்கள் மாதந்தோறும் வாடகைப் பணம் கொடுத்து வருகிறோம்’ என்று கூறியுள்ளனர். மேலும் சிலர், `இந்த வீட்டை நாங்கள் ஒரு ஆண்டுக்கு லீஸுக்கு எடுத்திருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர். உடனே, `நான்தான் இந்த வீட்டின் உரிமையாளர். நீங்கள் யாரிடம் வாடகை கொடுக்கிறீர்கள்... லீஸுக்கு யாரிடம் பணம் கொடுத்தீர்கள்...’ என்றெல்லாம் வீட்டின் உரிமையாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர். அப்போது வாடகைக்கு குடியிருப்பவர்கள், சன் சைன் ப்ராப்ரிட்டி டெலவப்பர்ஸ் குறித்த தகவல்களையும், அவர்கள் கொடுத்திருந்த ஆவணங்களையும் வீட்டின் உரிமையாளர்களிடம் காண்பித்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகே வீட்டின் உரிமையாளர்களுக்கும், வாடகைக்கு குடியிருந்தவர்களுக்கும் தங்களை சன் சைன் ப்ராப்ரிட்டி டெலவப்பர் என்ற அலுவலகத்தை நடத்திவரும் பிரகாஷ், விக்னேஷ், காயத்ரி ஆகியோர் நூதன முறையில் ஏமாற்றியது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் மூன்று பேரைக் கைது செய்திருக்கிறோம். இவர்கள், வெளிநாட்டிலிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள், வாடகைக்கு விடப்படும் வீட்டின் அருகில் குடியிருக்காத உரிமையாளர்கள் எனப் பார்த்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர்களிடம் வாடகைக்கு அல்லது லீஸுக்குக் குடியிருப்பதைப்போல அக்ரிமென்ட்டை போட்டுக்கொள்ளும் இந்தக் கும்பல், அதைவைத்து போலியாக ஓர் ஆவணம் தயாரித்து வீட்டில் குடியிருப்பவர்களை ஏமாற்றிவந்திருக்கிறது.

சன்சைன் ப்ராப்பரிட்டி டெவலப்பர் அலுவலகம்
சன்சைன் ப்ராப்பரிட்டி டெவலப்பர் அலுவலகம்

வாடகைக்குக் குடியிருப்பவர்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகை, லீஸ் தொகை என எல்லாவற்றையும் இவர்கள் மூன்று பேரும் வாங்கி ஏமாற்றிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளனர். வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வரவில்லை என்று விசாரித்தபோதுதான் உண்மை தெரியவந்திருக்கிறது. விக்னேஷ், காயத்ரி, பிரகாஷ் ஆகியோர் ரியல் எஸ்டேட் மற்றும் சினிமா தயாரிப்பு ஆகியவற்றில் இந்தப் பணத்தை முதலீடு செய்துள்ளனர். சமீபத்தில் சர்ச்சைக்குள் சிக்கிய நடிகை ஒருவரைவைத்து இவர்கள் படம் ஒன்றை எடுத்துள்ளனர். இவர்கள் எடுத்த படங்கள் திரைக்கு வரவில்லை" என்றனர்.