சென்னை கொளத்தூர் ஜிகேஎம் காலனி, 37-வது தெருவைச் சேர்ந்தவர் பாபாஜ் . கடந்த 3.3.2022-ம் தேதி காலை 11.50 மணியளவில் இவரின் வீட்டுக்குள் 2 மர்ம நபர்கள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் பீரோவிலிருந்த தங்க செயின், மோதிரங்கள், 2 செல்போன்கள் ஆகியவற்றைப் பறித்துச் செய்தனர். இதுகுறித்து பாபாஜ், கொளத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், `` நான் பிஎஸ்சி விஷ்வல் கம்யூனிகேசன் படித்துள்ளேன். சம்பவத்தன்று வளசரவாக்கத்தில் வேலைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தேன். அதற்கு முன் வீட்டுக்குத் தேவையான மளிகை பொருள்களை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தேன்.

அப்போது வீட்டுக்குள் ஒருவிதமான சத்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்தபோது தாடி வைத்த நபரும் இன்னொருவரும் சேர்ந்து என்னைத் தாக்கினார். பின்னர் என்னை கத்தியால் குத்திவிட்டு அவர்கள் தங்க நகைகள், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர். கத்திக்குத்து காயத்துக்காக பெரியார் நகர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதன்அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜூகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்த இடத்திலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அதன்அடிப்படையில் கொடுங்கையூரைச் சேர்ந்த கார்த்திக் என்கிற கருக்கா கார்த்திக் (23), கொளத்தூரைச் சேர்ந்த பாலாஜி (23) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்க நகைகள், செல்போன்கள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் பாலாஜியின் மனைவி திவ்யா என்பவர் கொடுத்த தகவலின்படிதான் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து திவ்யா (19) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது ஒரு கொலை வழக்கு, கஞ்சா வழக்கு ஆகியவை உள்ளன. பாலாஜி மீது திருட்டு வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதகுறித்து போலீஸார் கூறுகையில், "பாலாஜியின் மனைவி திவ்யா, அந்தப்பகுதியில் பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு அந்தத் தகவலை கணவரிடம் கூறுவார். பின்னர் பாலாஜியும் அவரின் கூட்டாளி கார்த்திக் ஆகியோர் பைக்கில் சென்று கொள்ளையடித்து வந்துள்ளனர். பாபாஜ் வீடு பூட்டியிருந்தபோது கொள்ளையடிக்க இருவரும் சென்றுள்ளனர். அப்போது திடீரென பாபாஜ் உள்ளே வந்துவிட்டார். அவர் அளித்த தகவலின்படி மூன்று பேரையும் கைது செய்துள்ளோம்" என்றனர்.