Published:Updated:

சென்னை: `மீன் வியாபாரம்; போலி ஆவணம்!'- ரூ.3.25 கோடி வங்கி மோசடியில் சிக்கிய தம்பதியர்

வங்கி மோசடி வழக்கில் கைதான ஜெயசீலி
வங்கி மோசடி வழக்கில் கைதான ஜெயசீலி

சென்னை, சிந்தாரிப்பேட்டையைச் சேர்ந்த தம்பதியர், போலி ஆவணங்களை வங்கியில் கொடுத்து ரூ.3.25 கோடி ரூபாயைக் கடனாக வாங்கியிருக்கின்றனர். பின்னர் பணத்தைச் செலுத்தாமல் வங்கியை ஏமாற்றிய வழக்கில் தம்பதியரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை, சௌத் இந்தியன் வங்கியின் அண்ணா சாலை கிளையின் முதன்மை மேலாளர் ஜலாலூதீன், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், சிந்தாரிப்பேட்டையைச் சேர்ந்த கிளாட்சன், அவரின் மனைவி ஜெயசீலி ஆகியோர் போலி ஆவணங்களை வங்கியில் சமர்பித்து 3.25 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும், அந்தத் தொகையை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

மோசடி
மோசடி
Representational Image

இதையடுத்து மத்திய குற்றப் பிரிவின் வங்கி மோசடி பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மத்திய குற்றப் பிரிவின் கூடுதல் கமிஷனர் தேன்மொழி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் நாகஜோதி, கூடுதல் துணை கமிஷனர் முனைவர் மு.சரவணக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் குற்றவாளிகளைத் தேடிவந்தார். இந்தநிலையில் சிந்தாரிப்பேட்டை வேட்டம்மன் கோயில் தெருவிலுள்ள வீட்டில் கிளாட்சன் (52), அவரின் மனைவி ஜெயசீலி (49) ஆகிய இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். பின்னர் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து மத்திய குற்றப் பிரிவின் வங்கி மோசடிப் பிரிவு போலீஸார் கூறுகையில், `` கிளாட்சனும் ஜெயசீலியும் மீன் வியாபாரம் செய்துவருகின்றனர். தொழிலை விரிவுபடுத்த ஏற்கெனவே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அடையாறு கிளையில், திருவொற்றியூர் சடையங்குப்பம் கிராம், குன்றத்தூர், சேக்காடு கிராமம் ஆகிய இடங்களில் சொத்து இருப்பதுபோல போலி ஆவணங்களைத் தயாரித்து 2 கோடி ரூபாய் கடன் வாங்கியது தெரியவந்தது.

சென்னை: `ரூ.2,000தான் டார்கெட்; ஏ.டி.எம் கார்டுகள் மோசடி!' - முன்னாள் வங்கி ஊழியர் சிக்கிய பின்னணி
கிளாட்சன்
கிளாட்சன்

அதே ஆவணங்களைப் பயன்படுத்தி, சௌத் இந்தியன் வங்கி அண்ணாசாலை கிளையில் கடன் வாங்கியிருக்கின்றனர். போலி ஆவணங்களைக் கொடுத்து கடன் வாங்கி, பணத்தைத் திருப்பிச் செலுத்தாத கணவன், மனைவியைக் கைதுசெய்து மத்திய குற்றப்பிரிவின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு