சென்னை, திருமுல்லைவாயல், தேவி நகர் சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் லலிதா. வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே இருந்துவரும் லலிதா, கடந்த 10-ம் தேதி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது இளைஞர் ஒருவர் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவர், லலிதா அணிந்திருந்த மூன்று சவரன் தங்க செயினைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.

அதனால் அதிர்ச்சியடைந்த லலிதா, வீட்டில் உள்ளவர்களிடம் விவரத்தைத் தெரிவித்தார். இதையடுத்து செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக ஆவடி போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது, லலிதாவின் மருமகள் லதா என்கிற மோகனசுந்தரி மீது போலீஸாருக்குச் சந்தேகம் எழுந்தது. அவரிடம் போலீஸார் விசாரித்தபோது லதாவின் ஆண் நண்பர் கார்த்திகேயன் என்பவர்தான் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. லதா அளித்த தகவலின் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் செயின் பறித்ததை ஒப்புக்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து கார்த்திக்கேயன், லலிதாவின் மருமகள் லதா ஆகிய இருவரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``லதாவின் தங்கைக்கு மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. அப்போது லலிதா, தனது நகைகளை மருமகளின் தங்கைக்குக் கொடுத்து உதவினார். அந்த நகையை லதாவின் தங்கை அடகுவைத்து மருத்துவம் பார்த்துள்ளார். தற்போது நகையைத் திரும்ப லலிதா கேட்டுள்ளார். அதனால் கடன் வாங்கி தங்க நகையை மீட்டு, லலிதாவிடம் அவரின் மருமகளின் தங்கை கொடுத்துள்ளார்.

இதையடுத்து மாமியாரின் தங்க செயினைப் பறிக்க மருமகள் லதா திட்டமிட்டுள்ளார். பின்னர் தன்னுடன் பள்ளியில் படித்த கார்த்திகேயனிடம் மாமியாரின் தங்க செயினைப் பறிப்பது தொடர்பாக லதா ஆலோசனை செய்திருக்கிறார். இதையடுத்து வீட்டில் தனியாக மாமியார் லலிதா இருக்கும் தகவலை கார்த்திகேயனிடம் தெரிவித்துள்ளார் லதா. அதனால் வீட்டுக்குச் சென்ற கார்த்திக்கேயன் லலிதாவிடமிருந்து தங்க செயினைப் பறித்துள்ளார். அதனால் மருமகள் லதா, அவரின் நண்பர் கார்த்திகேயன் ஆகியோரைக் கைதுசெய்து செயினைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.