Published:Updated:

சென்னை: `போலி கால் சென்டர் தம்பதி; போனில் மனைவி பேசுவார்!’ - போலீஸ் வளையத்தில் தி.மு.க பிரமுகர்

போலி கால் சென்டர் வழக்கில் கைதான பென்னிஷா
போலி கால் சென்டர் வழக்கில் கைதான பென்னிஷா

சென்னை வேளச்சேரியில் கணவனும் மனைவியும் சேர்ந்து போலி கால் சென்டர் நடத்தி வந்ததை போலீஸார் கண்டறிந்திருக்கின்றனர்.

சென்னை வேளச்சேரி, அன்னை இந்திரா நகர், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் சங்கர் (27). இவர் அடையாறு துணை கமிஷனர் விக்ரமனைச் சந்தித்து 8.12.2020-ல் புகார் ஒன்றை அளித்தார். அதில், ``நான் பெங்களூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறேன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், திருமணத் தேவைக்காக வங்கியில் லோன் பெற முயன்றுவந்தேன். அப்போது என்னிடம் பிரபல தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாக பெண் ஒருவர் கூறினார்.

போலி கால் சென்டர்
போலி கால் சென்டர்

அந்தப் பெண், என்னிடம் குறைந்த வட்டியில் லோன் வேண்டுமா என்று கேட்டார். அதற்கு நான், 4 லட்சம் ரூபாய் லோன் தேவை என்று கூறினேன். உடனே அவர், லோன் தொகையில் 10 சதவிகிதம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு சம்மதித்த நான், அந்தப் பெண் கேட்ட அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை செல்போன் மூலம் அனுப்பிவைத்தேன். மேலும் ஆன் லைன் மூலம் பாலிசி தொகையான 40,000 ரூபாயைச் செலுத்தினேன். பணம் செலுத்திய பிறகு அந்தப் பெண்ணின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆஃப்பாகிவிட்டது. மேலும், லோன் தொகை 4 லட்சம் ரூபாயும் கிடைக்கவில்லை. எனவே, என்னை ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பாலிசிக்காக நான் செலுத்திய பணத்தைப் பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்பேரில் அடையாறு காவல் மாவட்ட சைபர் க்ரைம் எஸ்.ஐ-க்கள் ஜெயபாலாஜி, மகாராஜன், முதல்நிலைக் காவலர்கள் சதீஷ், இந்திராணிஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பெண் கூறிய இன்ஷூரன்ஸ் நிறுவனம் போலி என்பது தெரியவந்தது. அதனால் திட்டமிட்டே மோசடி நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்த சைபர் க்ரைம் போலீஸார், பணம் அனுப்பிய வங்கிக் கணக்கு விவரங்கள், செல்போன் நம்பர் ஆகியவற்றைக்கொண்டு அந்தப் பெண் யாரென்று கண்டறிந்தனர்.

`பெண்ணின் காந்தக் குரல்; கால் சென்டர் ஹைடெக் மோசடி!' - வி.சி.க பிரமுகரால் சிக்கிய பென்ஸ் சரவணன்
விக்னேஷ்
விக்னேஷ்

போலீஸாரின் விசாரணையில் வேளச்சேரி சந்தோஷபுரம், மெயின்ரோடு என்ற முகவரியில் `பெரேக்கா சொல்யூஷன்ஸ்’ என்ற பெயரில் போலி கால் சென்டர் நடந்துவருவது தெரிந்தது. உடனடியாக துணை கமிஷனரின் ஸ்பெஷல் டீமிலுள்ள காவலர்கள் முகிலன், ஜானி விஜய், சதீஷ், சண்முகம், கிரி, சண்முகநாதன், லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். விசாரணையில் இன்ஷூரன்ஸ், சேவைக் கட்டணம், முன்பதிவுக் கட்டணம் என்ற பெயரில் மோசடி நடப்பது தெரியவந்தது.

இது குறித்து அடையாறு போலீஸார் கூறுகையில், ``போலி கால் சென்டரை நடத்திவந்தவர் பிரேம்குமார் (25). இவர் வங்கிக் கடன் பெற இணையதளத்தில் பதிவு செய்பவர்களின் விவரங்களை முதலில் சேகரிப்பார். பின்னர் அதைத் தன் மனைவி பென்னிஷா (23) மற்றும் கால் சென்டரில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் கொடுப்பார். அந்த விவரங்கள் அடிப்படையில் பிரபல இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாக ஊழியர்கள் கூறுவார்கள். அதை நம்புபவர்களிடம் பாலிசி எடுக்க வேண்டும், சேவைக் கட்டணம், முன்பதிவுக் கட்டணம் என ஏதாவது ஒன்றைக் கூறி லோன் தொகையில் 10 சதவிகிதத்தைத் தங்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பச் சொல்வார்கள். பணத்தை அனுப்பியதும் அவர்களின் செல்போன் நம்பரை பிளாக் செய்துவிடுவார்கள். இல்லையென்றால், அந்த சிம்கார்டை தூக்கி எறிந்துவிடுவார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட போன்கள்
பறிமுதல் செய்யப்பட்ட போன்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக போலி கால் சென்டரை நடத்திப் பலரை இந்தக் கும்பல் ஏமாற்றிவந்திருக்கிறது. கணவன், மனைவியான பிரேம்குமார், பென்னிஷாவுக்கு உடந்தையாக டிரைவர் விக்னேஷ் என்பவர் செயல்பட்டிருக்கிறார். பென்னிஷா, விக்னேஷ் ஆகிய இருவரையும் கைதுசெய்திருக்கிறோம். அவர்களிடமிருந்து சொகுசு கார், ஏழு வயர்லெஸ் போன்கள், செல்போன்கள் மற்றும் போலி ஆவணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். போலி கால் சென்டரை நடத்திவந்த பிரேம்குமாரைத் தேடிவருகிறோம். இவர் தி.மு.க பிரமுகர் என விசாரணையில் தெரியவந்திருக்கிறது. பென்னிஷா, விக்னேஷ் ஆகியோரை வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறோம். வேளச்சேரி போலீஸார் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கின்றனர்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு