Published:Updated:

சென்னை: `கிணற்றுத் தண்ணீரை அசுத்தம் பண்ணினான்’ - மகனைக் கத்தியால் குத்திய தந்தை

கத்தியால் குத்தப்பட்ட முருகன், அவரின் மனைவி மாரிச்செல்வி
கத்தியால் குத்தப்பட்ட முருகன், அவரின் மனைவி மாரிச்செல்வி

குளித்துக் கொண்டிருந்த மகனை தந்தையே கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் விநாயக நகர் கலைஞர் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (77) இவருக்கு 5 மகன்கள், 5 மகள்கள் என 10 குழந்தைகள். அதில் ஒரு மகள் இறந்துவிட்டார். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. சொத்துக்களை மகன்கள், மகள்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு சுப்பிரமணியன் தனியாக வசித்து வந்தார்.

சுப்பிரமணியன்
சுப்பிரமணியன்

சுப்பிரமணியனின் 5-வது மகன் முருகன் (48). மது அருந்தும் பழக்கம் உடைய முருகன், அடிக்கடி போதையில் தந்தையிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். இந்தச் சூழலில் முருகன், வீட்டின் பின்பகுதியில் உள்ள கிணற்றில் இன்று குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பிரமணியன், முருகனை சரமாரியாகக் குத்தினார். அதனால் அவர் சத்தம் போட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த முருகனின் மனைவி மாரிச்செல்வி அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் கணவரைக் காப்பாற்ற முயற்சி செய்தார். அதில் மாரிச்செல்விக்கும் காயம் ஏற்பட்டது.

முருகன், மாரிச்செல்வி ஆகியோரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டனர். அதைப் பார்த்ததும் சுப்பிரமணியன் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து முருகனையும் மாரிச்செல்வியையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த சங்கர் நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

சென்னை: அதிமுக பிரமுகரைக் கொலை செய்து நாடகமாடிய மனைவி - காட்டிக்கொடுத்த சாக்கு மூட்டை!
கத்திக்குத்து
கத்திக்குத்து

முருகன், மாரிச்செல்வி அளித்த தகவலின்படி தலைமறைவாக இருந்த சுப்பிரமணியனைப் பிடித்து போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். போலீஸார், சுப்பிரமணியனிடம் எதற்காக முருகனைக் கொலை செய்ய முயற்சி செய்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர், குடிநீருக்கு பயன்படுத்தப்படும் கிணற்றுத் தண்ணீரை முருகன் குளித்து அசுத்தம் பண்ணினான். அதை பல தடவைக் கண்டித்தும் அவன் கேட்கவில்லை. அதனால்தான் முருகனைக் கத்தியால் குத்திவிட்டேன். இந்தக் கிணற்றை தோண்ட நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும் என போலீஸாரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து மகனைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் சுப்பிரமணியனை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு