Published:Updated:

சென்னை: `திருட்டு செல்போன்கள்... வேலை தேடுபவர்கள் டார்க்கெட்' - தடம் மாறிய இன்ஜினீயரின் வாழ்க்கை!

இன்ஜினீயர் பிரபு
இன்ஜினீயர் பிரபு

கொரோனாவால் வேலையை இழந்த இன்ஜினீயர் அமர்நாத்திடம் போனில் பேசிய இன்ஜினீயர் பிரபு, `உங்களுக்கு பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது’ என்று கூறி, போலி நியமன ஆர்டரை அனுப்பி மோசடி செய்திருக்கிறார்.

சென்னை, கொட்டிவாக்கம் கிழக்குக் கடற்கரை சாலை வாசுதேவன் தெருவைச் சேர்ந்தவர் அமர்நாத் (31). இன்ஜினீயரான இவர், கொரோனா காரணமாக வேலையை இழந்தார். அதனால் புதிய வேலையை ஆன்லைன் மூலம் தேடிவந்தார். அப்போது 5.10.2020-ல் சென்னை தாம்பரத்திலுள்ள பிரபல ஐடி நிறுவனம் நடத்திய ஆன்லைன் நேர்காணலில் அமர்நாத் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு அந்த நிறுவனத்திலிருந்து இமெயில் அனுப்பப்பட்டது. அதில், `உங்களை வேலைக்குத் தேர்வு செய்திருக்கிறோம். அதனால் 20,000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நல்ல வேலை, கைநிறைய சம்பளம் என மகிழ்ச்சியடைந்த அமர்நாத், இ-மெயிலில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் 20,000 ரூபாயைச் செலுத்தினார். இந்தநிலையில் 14.10.2020-ல் `உங்களின் வேலைக்கான ஆஃபர் லெட்டரை சில காரணங்களுக்காக ரத்து செய்துவிட்டோம்' என இன்னொரு மெயில் வந்திருக்கிறது. அதைப் பார்த்து அமர்நாத் அதிர்ச்சியடைந்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட கார், செல்போன்கள், லேப்டாப்
பறிமுதல் செய்யப்பட்ட கார், செல்போன்கள், லேப்டாப்

பின்னர் அமர்நாத் விசாரித்தபோது, தாம்பரத்திலிருக்கும் பிரபலமான ஐடி நிறுவனம் இன்டர்வியூ நடத்தவில்லை என்பது தெரியவந்தது. அதன் பிறகுதான், தன்னை யாரோ ஏமாற்றிவிட்டதை உணர்ந்த அமர்நாத், அடையாறு துணை கமிஷனர் விக்ரமனைச் சந்தித்து புகாரளித்தார். அதன்பேரில் அடையாறு காவல் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸ் எஸ்.ஐ-க்கள் ஜெயபாலாஜி, மகராஜன், மஞ்சுளா முதல்நிலைக் காவலர்கள் சதீஸ், இந்திராணி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அப்போது கொளத்தூர், பேப்பர்மில்ஸ் ரோடு, வேலன் நகரில் ஃபைனான்ஸ் நிறுவனம் என்ற பெயரில் போலி கால் சென்டர் ஒன்று செயல்பட்டதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், வேலை வாங்கித் தருவதாகக் கூறி அமர்நாத்தை ஏமாற்றியது கொளத்தூரைச் சேர்ந்த பிரபு (31) என்பதைக் கண்டறிந்தனர். அவருக்கு உதவியாக அம்பத்தூரைச் சேர்ந்த சாலமன் ரிச்சர்ட் (29), அயனாவரம் நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த யுவராஜ் என்கிற மாறன் (29) செயல்பட்டதையும் தெரிந்துகொண்ட போலீஸார், மூன்று பேரையும் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து அடையாறு போலீஸார் கூறுகையில், ``இன்ஜினீயரிங் படித்த பிரபு, கடந்த 2015-ம் ஆண்டு தாம்பரத்திலுள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கிறார். அப்போது 25,000 ரூபாய் சம்பளம் வாங்கிவந்திருக்கிறார். அந்தச் சம்பளம் குறைவு எனக் கூறி அந்த வேலையிலிருந்து நின்றுவிட்டார். பிறகு அதிக அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்பட்ட பிரபு, வேலை தேடுபவர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட ஆரம்பித்தார். அப்போது தாம்பரம் போலீஸாரிடம் பிரபு சிக்கிக்கொண்டார். அந்த வழக்கில் சிறைக்குச் சென்றபோதுதான் செயின் பறிப்பு வழக்கில் கைதான அம்பத்தூரைச் சேர்ந்த சாலமனுடன் பிரபுவுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

`பெண்ணின் காந்தக் குரல்; கால் சென்டர் ஹைடெக் மோசடி!' - வி.சி.க பிரமுகரால் சிக்கிய பென்ஸ் சரவணன்
லேப்டாப், செல்போன்கள்
லேப்டாப், செல்போன்கள்

சிறையிலிருந்து வெளியில் வந்த பிரபு, கொளத்தூர் பகுதியில் ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தியிருக்கிறார். அதில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. அப்போது சிறை நண்பர் சாலமனை பிரபு சந்தித்துப் பேசியிருக்கிறார். குறுகியகாலத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என இருவரும் ஆலோசித்திருக்கிறார்கள். அப்போது, வேலை தேடுபவர்களைக் குறிவைத்து சீட்டிங் செய்யலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். இதையடுத்து ஃபைனான்ஸ் நிறுவனம், போலி கால் சென்டராக மாறியது. நுனி நாக்கு ஆங்கிலத்தில் மற்றவர்களைக் கவரும் வகையில் பேசும் திறமைகொண்டவர் பிரபு.

கன்னியாகுமரி: `வாழ்நாள் முழுவதும் உழைத்த பணம்!’ - பெண்களிடம் நூதன மோசடி; சர்ச்சையில் தம்பதி

வேலை தேடுபவர்களின் விவரங்களை பிரபு சேகரித்திருக்கிறார். அவர்களின் செல்போன் நம்பர்களுக்குத் தொடர்புகொண்டு வேலை தொடர்பாக பேசியிருக்கிறார். ஆன்லைனிலேயே இன்டர்வியூக்களை நடத்தி, போலி ஆஃபர் லெட்டரை வேலை தேடுபவர்களின் இமெயிலுக்கு அனுப்பியிருக்கிறார். வேலைக்குத் தேர்வு செய்யப்படுபவர்களின் சம்பளத்துக்கு ஏற்ப 20,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை பிரபு கமிஷனாக வசூலித்திருக்கிறார். பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்த மகிழ்ச்சியில் வேலை தேடும் இன்ஜினீயர்கள் பலர், பிரபு கேட்ட தொகையை அவர் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதனால் பிரபுவுக்கு லட்சக்கணக்கில் பணம் குவிந்திருக்கிறது.

சாலமன்
சாலமன்

கடந்தமுறை, பிரபு, தன்னுடைய செல்போன் நம்பர் மூலம் தாம்பரம் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டார். அதனால் இந்த முறை சிறையில் அறிமுகமான சாலமன் மூலம் திருட்டு செல்போன்களை வாங்கியிருக்கிறார். அவற்றிலுள்ள சிம் கார்டுகளைப் பயன்படுத்தி வேலை தேடுபவர்களிடம் பேசியிருக்கிறார். கமிஷன் தொகை கைக்கு வந்ததும் அந்த சிம்கார்டையும் செல்போனையும் உடைத்துவிடுவார். சாலமன் கொடுக்கும் செல்போன், சிம் கார்டுகளைப் பயன்படுத்தி ஏராளமானவர்களை பிரபு ஏமாற்றிவந்திருக்கிறார். சாலமனிடமிருந்து செல்போன்களையும் சிம் கார்டுகளையும் அதிக விலை கொடுத்து பிரபு வாங்கியிருக்கிறார். சாலமனின் சிறு வயது நண்பரான அயனாவரத்தைச் சேர்ந்த யுவராஜ் மூலமாகவும் சிம் கார்டுகளை பிரபு வாங்கியிருக்கிறார். அதனால்தான், மூன்று பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். மோசடிக்குப் பயன்படுத்திய செல்போன்கள், சிம் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள், லேப்டாப்கள், போலி ஆஃபர் லெட்டர்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு