Published:Updated:

சென்னை:`நீ இல்லையென்றால் எனக்கு 100 பெண்கள்' - சிக்கிய `நான் அவன் இல்லை' இன்ஜினீயர்

இன்ஜினீயர் ராகேஷ் சர்மா
இன்ஜினீயர் ராகேஷ் சர்மா

விவாகரத்து பெற்ற பெண்கள், தனியாக வாழும் பெண்கள் ஆகியோரைக் குறி வைத்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நான் அவன் இல்லை பட ஸ்டைலில் மோசடியில் ஈடுபட்ட இன்ஜினீயர் ராகேஷ் சர்மாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் சர்மா (36). இன்ஜினீயரிங் படித்த இவர், 2015-ம் ஆண்டு சீனியர் அளவிலான சர்வதேச கபடி போட்டியில் பங்கேற்றுள்ளார். இவரின் தந்தை முன்னாள் ராணுவ வீரர். கொடுங்கையூரில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரரின் மகளிடம் திருமண இணையதளம் மூலம் ராகேஷ், தன்னை ராணுவ வீரரின் மகன் என்று கூறி அறிமுகமாகியுள்ளார். பின்னர், தன்னை அவர் ஆராய்ச்சியாளர் எனக் கூறியுள்ளார்.

ராகேஷிடம் விசாரணை நடத்தும் உதவி கமிஷனர் ஹரிகுமார்
ராகேஷிடம் விசாரணை நடத்தும் உதவி கமிஷனர் ஹரிகுமார்

அதன் பிறகு அந்தப் பெண்ணுடன் ராகேஷ் பழகியுள்ளார். இதையடுத்து அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தை கூறி 5.5 லட்சம் ரூபாய், 22 சவரன் நகைகளை சிறிது சிறிதாகத் தனது ஆராய்ச்சிக்குத் தேவை எனக் கூறி வாங்கியுள்ளார். ராகேஷின் செயல், நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அந்தப் பெண், தன்னுடைய வீட்டில் விவரத்தைக் கூறியுள்ளார். இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா உத்தரவில், உதவி கமிஷனர் ஹரிகுமார் மேற்பார்வையில் கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் புகாரை விசாரித்தார். இந்தச் சமயத்தில் ராகேஷ், தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியவில்லை. அதனால் அவசரமாக 10,000 ரூபாய் தேவைப்படுகிறது என்று அந்தப் பெண்ணிடம் கேட்டுள்ளார். இந்தத் தகவல் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்தப் பெண் மூலம் ராகேஷைப் பிடிக்க போலீஸார் வியூகம் அமைத்தனர்.

ராகேஷ்சர்மா
ராகேஷ்சர்மா

மாதவரம் ரவுண்டானா அருகே வாருங்கள், பணம் தருகிறேன் என்று அந்தப் பெண், ராகேஷிடம் போனில் தெரிவித்தார். அதை உண்மையென நம்பிய அவர், மாதவரம் வந்தார். அப்போது அங்கு இளம்பெண்ணுடன் மஃப்டியில் காத்திருந்த போலீஸார் ராகேஷை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``இளம்பெண்ணிடம் திருமண ஆசை வார்த்தைகூறி பணம், நகைகளை ஏமாற்றிய குற்றச்சாட்டில் சிக்கிய இன்ஜினீயர் ராகேஷுக்கும் சங்கீதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணமாகியுள்ளது. இந்தத் தம்பதியினருக்கு 3 மாதத்தில் குழந்தை உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

ராகேஷ்சர்மா
ராகேஷ்சர்மா

திருமணத்துக்கு முன் 2015-ம் ஆண்டு கத்தார் நாட்டில் ரகேஷ் வேலை பார்த்து வந்துள்ளார். 2019-ம் ஆண்டுதான் அவர் சென்னை திரும்பியுள்ளார். அதன்பிறகே பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை ஆன் லைன் விளையாட்டுகளில் இழந்துள்ளார். பணமும் இல்லை, மனைவியும் பிரிந்து சென்றுவிட்டதால் என்ன செய்வதென்று ராகேஷ் யோசித்துள்ளார். அப்போதுதான் அவர் நான் அவன் இல்லை படத்தைப் போல பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளார். அதனால், மேட்ரிமோனியல் வழியாக விவாகரத்தான பெண்களைக் குறிவைத்து பணம் பறிக்க முடிவு செய்துள்ளார். அதற்காக அந்தப் படத்தை அவர், 30 தடவைக்கு மேல் பார்த்துள்ளார். மேலும், அந்தப் படத்தில் வரும் ஹீரோ போலவே தன்னுடைய சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார்.

தமிழ்ப் பெண்களைக் குறிவைத்து வலை வீசிய அவர் அபிதாபியைச் சேர்ந்த கணவரை பிரிந்த பெண்ணிடம் 3 சவரன் நகை, 8,000 பணத்தை வாங்கியுள்ளார். அந்த முயற்சி வெற்றி பெற்றதும் தொடர்ந்து திருமண இணையதளம் மூலம் பெண்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளார். எந்தப் பெண்களிடம் பழகினாலும் தன்னுடைய தந்தையை முன்னாள் ராணுவ வீரர் என்றும் தன்னை ஆராய்ச்சியாளர் என்றும் ராகேஷ் அறிமுகப்படுத்திக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்தப் பெண்களிடம் பழகுவதைத் தன்னைவிட்டு பிரிந்து சென்ற மனைவிக்கு தெரிவித்து அவரிடம், நீ இல்லையென்றால் எனக்கு 100 பெண்கள் எனப் பெருமையாகக் கூறி வந்துள்ளார்.

Marriage
Marriage

சிங்கப்பூர், மலேசியா, திருச்சி மற்றும் சென்னையில் வளசரவாக்கம், கோடம்பாக்கம், கொடுங்கையூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மற்றும் நகைகளை வாங்கி மோசடி செய்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. அதனால், ராகேஷால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாகப் புகார் அளிக்கலாம். அவர்களின் விவரங்கள் ரகசியமாக இருக்கும்.

பெண்களை ஏமாற்றி பறித்த பணத்தில் ஒரு காரும், உயர் ரக இருசக்கர வாகனத்தையும் வங்கியுள்ள அவர் மற்றவற்றை நிலமாகவும் வாங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. தற்போது ராகேஷிடம் இருந்து கார், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு