Published:Updated:

சென்னை: `100 நாளில் ரூ.8 கோடி’ - மோசடிப் பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த இன்ஜினீயர்

மோசடி

100 நாளுக்குள் கோடிக்கணக்கான ரூபாயை குறுக்குவழியில் மோசடி செய்த இன்ஜினீயரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

சென்னை: `100 நாளில் ரூ.8 கோடி’ - மோசடிப் பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த இன்ஜினீயர்

100 நாளுக்குள் கோடிக்கணக்கான ரூபாயை குறுக்குவழியில் மோசடி செய்த இன்ஜினீயரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

Published:Updated:
மோசடி

Froniter Business Pvt.Ltd என்ற நிறுவனத்தில் மண்டல மேலாளராகப் பணியாற்றிவருபவர் தினேஷ். இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவின் ஆவணத் தடுப்புப் பிரிவில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், `தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் 8 கோடியே 29 லட்சத்து 35 ஆயிரத்து 825 ரூபாய் மதிப்புள்ள 1,074 ஆப்பிள் போன்களையும், மூன்று ஆப்பிள் லேப்டாப்களையும் தனக்குக் கீழ் வேலை பார்க்கும் அக்கவுன்ட்ஸ் மேலாளர் பிரதாப் என்பவர் விற்று மோசடி செய்துவிட்டார். எனவே, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீஸார் பிரதாப்பைத் தேடிவந்தனர்.

பிரதாப்
பிரதாப்

ஆனால் அவரின் செல்போன் சிக்னல் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் எனக் காட்டியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீஸார் விசாரித்தபோது, பிரதாப்பின் மோசடி வேலைக்கு அந்த கம்பெனியில் டெலிவரி பிரிவில் பணியாற்றிய குமாரவேல் என்பவர் உதவிசெய்தது தெரியவந்தது. இதையடுத்து குமாரவேலிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``பிரதாப்பின் சொந்த ஊர் நெல்லூர். இன்ஜினீயரிங், எம்.பி.ஏ-வைப் படித்துவிட்டு பிரதாப், இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். இந்த நிறுவனம் ஆப்பிள் போன்களை மொத்தமாக வாங்கி ஆர்டர்களின்பேரில் ஒவ்வொரு கடைக்கும் விற்று வந்திருக்கிறது.

இந்த நிறுவனத்தில் ஆர்டர் மூலம் போன்களை வாங்குபவர்கள், அதற்குரிய பணத்தை, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் (கிரெடிட்) திரும்பச் செலுத்தும் வசதி இருந்திருக்கிறது. அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பிரதாப் திட்டமிட்டிருக்கிறார். பின்னர், 1,074 ஆப்பிள் செல்போன்களை வாங்குவதைப்போல ஆர்டர்களை போலியாகத் தயாரித்து நிறுவனத்தின் மெயிலுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். பின்னர் அந்த ஆர்டர்களுக்குரிய போன்களை கிரெடிட் அடிப்படையில் குமாரவேல் மூலம் டெலிவரி செய்வதைப்போல நாடகமாடியிருக்கிறார். குடோனிலிருந்து செல்போன் பார்சல்களை எடுத்து டெலிவரி செய்வதைப்போல குமாரவேலும் பிரதாப்பின் மோசடித் திட்டத்துக்கு உதவி செய்திருக்கிறார்.

குமாரவேல்
குமாரவேல்

இதற்காக ஒரு பார்சலுக்கு 5,000 ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை கமிஷனாக பிரதாப் கொடுத்திருக்கிறார். பின்னர், ஆப்பிள் போன்கள் தன்னுடைய கைக்கு வந்ததும் அதைத் தனக்குத் தெரிந்த நெல்லூரைச் சேர்ந்த வெங்கடேஷ்வரலுவிடம் கொடுத்து பில் இல்லாமல் கடைகளுக்குக் குறைந்த விலைக்கு விற்றிருக்கிறார். அதன் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாயை வெங்கடேஷ்வரலுவும் பிரதாப்பும் பங்கு போட்டு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். குறுக்குவழியில் 100 நாள்களுக்குள் 8 கோடி ரூபாய்க்கு மேல் கிடைத்ததும், அதை வைத்து ஆன் லைன் சூதாட்டம் விளையாடியிருக்கிறார் பிரதாப். அதில் அவ்வளவு பணத்தையும் இழந்துவிட்டதாக பிரதாப் விசாரணையின்போது தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நிறுவனம், கிரெடிட் கால அவகாசம் முடிந்ததும் பிரதாப்பிடம் ஆப்பிள் போன் ஆர்டர்களுக்கான ரூபாயைக் கேட்டிருக்கிறது. அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். அதனால் சந்தேகமடைந்த நிறுவனம், ஆர்டர் எடுத்தவர்களிடம் விசாரித்தபோதுதான் பிரதாப்பின் மோசடித் திட்டம் தெரியவந்தது. தன்னுடைய மோசடித் திட்டம் நிறுவனத்துக்குத் தெரிந்ததும் பிரதாப், தலைமறைவாகிவிட்டார். சில தினங்களுக்கு முன்பு பிரதாப், சென்னைக்குத் திரும்பி வந்தபோது அவரைக் கைதுசெய்தோம். இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வெங்கடேஷ்வரலுவையும் கைதுசெய்திருக்கிறோம். விசாரணைக்குப்பிறகு பிரதாப், குமாரவேல், வெங்கடேஷ்வரலு ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.