`குறைபாட்டால் தாம்பத்தியத்தில் நாட்டமில்லை!’ - சென்னை பெண்ணின் புகாரால் அமெரிக்க மாப்பிள்ளை கைது

அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த இன்ஜினீயரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, ராயப்பேட்டையை சேர்ந்த முரளி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்றவர். இவரின் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘திருமண தகவல் மையம் மூலம் வரன் பார்த்து கடந்த 2016-ம் ஆண்டு ஜுன் மாதம் 8-ம் தேதியன்று எனக்கும் வசந்தன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. வசந்தனின் தந்தை விழுப்புரத்தில் கால்நடை மருத்துவராக இருந்தார். வசந்தன், அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

திருமணத்தின் போது 50 சவரன் தங்க நகை, 3 கிலோ வெள்ளி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை எனது பெற்றோர் வரதட்சணையாக கொடுத்தனர். மேலும் 4 லட்சம் ரூபாய்க்கு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்திருந்தோம். இதுதவிர 20 லட்சம் செலவில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்னர் கணவருடன் நான் அமெரிக்காவுக்கு சென்றேன். அமெரிக்காவில் எனது பட்டமேல்படிப்பை தொடரும்படி வற்புறுத்தி என்னை வசந்தன் படிக்க வைத்தார். அதற்காக என் தந்தையை 18 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினார். இந்நிலையில் வசந்தன் தாம்பத்ய உறவில் ஈடுபடாமல் தவிர்த்து வந்தார். அது குறித்து கேட்ட போது படிக்கும் சமயத்தில் தாம்பத்ய உறவு வேண்டாம் எனக் கூறினார். அதன்பிறகுதான் என் கணவருக்கு அந்தக் குறைபாடு இருப்பது தெரியவந்தது.
அதை மறைத்து என்னை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள் என கேட்ட போது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் என்னை அடித்து துன்புறுத்தினர். தீபாவளி, பொங்கல் சமயத்தில் தங்கத்தில் கைச்செயின் போடும்படி கணவர் குடும்பத்தினர் வற்புறுத்தினர். மேலும் வசந்தன் எனது பெயரில் ஏராளமான கிரெடிட் கார்டுகளை பெற்று அதில் லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருந்தார். என்னை ஏமாற்றி திருமணம் செய்த கணவர் வசந்தன் உள்பட அவரின் குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்’’ என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார்.

புகாரின் பேரில் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி விசாரணை நடத்தினார். இதில் வசந்தன் உடல் நலக்குறைபாட்டை மறைத்து திருமணம் செய்தது மற்றும் வரதட்சணைகேட்டு கொடுமைப்படுத்தியது உண்மை என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வசந்தன், அவரது தந்தை மோகன், தாய் மோகனகுமாரி உள்பட 4 பேர் மீது 498 (ஏ) வரதட்சணை கொடுமை, 406 (நம்பிக்கை மோசடி) உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். வசந்தன் அமெரிக்காவில் இருந்ததால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து திருவல்லிக்கேணி போலீஸார் விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்த வசந்தனை விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகள் பிடித்து திருவல்லிக்கேணி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
அமெரிக்க இன்ஜினீயர் மீது அவரின் மனைவி கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.