Published:Updated:

சென்னை: `இந்த அளவுக்கு சம்பாதிக்க முடியாது!' - போலி கால்சென்டர் மன்னன் சிக்கிய பின்னணி

மாஸ்டர் மைண்ட் கோபிகிருஷ்ணன்
மாஸ்டர் மைண்ட் கோபிகிருஷ்ணன்

சென்னையில், `போலி கால் சென்டர்களின் மாஸ்டர் மைண்ட்’ என்று அழைக்கப்படும் கோபிகிருஷ்ணனை போலீஸார் போலி கால் சென்டர் வழக்கில் மீண்டும் கைது செய்திருக்கிறார்கள்.

கோவை, கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ` `குறைந்த வட்டியில் ஃபைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கித் தருகிறோம்’ என்று பெண் ஒருவர், என்னுடைய செல்போன் நம்பருக்குப் பேசினார். அவரைத் தொடர்ந்து இரண்டு ஆண்கள் செல்போனில் என்னிடம் பேசினர். எட்டு லட்சம் ரூபாய் கடனுக்கு 1,39,500 ரூபாய் சேவைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று கூறினர். பின்னர் அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்கில் ஐந்து தவணைகளாக அந்தப் பணத்தைச் செலுத்தினேன். ஆனால், கடன் பெற்றுத் தராமல் என்னை ஏமாற்றிவருகின்றனர். இது குறித்து அவர்களிடம் செல்போனில் தொடர்புகொண்டால் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகத் தகவல் வருகிறது. எனவே, என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

போலி கால் சென்டர் வழக்கில் கைதானவர்கள்
போலி கால் சென்டர் வழக்கில் கைதானவர்கள்

இந்தப் புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி மேற்பார்வையில், கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சரவணக்குமார் ஆலோசனையின் பேரில், உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் சென்னை அம்பத்தூர் அருகேயுள்ள திருமுல்லைவாயல் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் போலி கால் சென்டர் நடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் தலைமையிலான கூட்டாளிகள்தான், புகார் கொடுத்த செல்வராஜ் உட்பட சிலரை ஏமாற்றியது தெரியவந்தது.

`பெண்ணின் காந்தக் குரல்; கால் சென்டர் ஹைடெக் மோசடி!' - வி.சி.க பிரமுகரால் சிக்கிய பென்ஸ் சரவணன்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் போலி கால் சென்டர்களை கோபி கிருஷ்ணன் நடத்தி, பலரை ஏமாற்றிப் பணத்தைப் பறித்தார். பின்னர், அவரின் கூட்டாளிகளை போலீஸார் கைது செய்தவுடன் இலங்கைக்குத் தப்பி ஓடிவிட்டார். தீவிர தேடுதல் வேட்டையால் கோபிகிருஷ்ணனை போலீஸார் சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவர்மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டமும் பதிவு செய்யப்பட்டது. சிறையிலிருந்து வெளியில் வந்த கோபி என்கிற கோபி கிருஷ்ணனும் அவரின் கூட்டாளிகளான வளர்மதி ஆகிய இருவரும் சேர்ந்து மீண்டும் திருமுல்லைவாயல் பகுதியில் பலரை வேலைக்கு அமர்த்தி, கால் சென்டர் நடத்தி வந்திருக்கிறார்கள். இதையடுத்து கோபிகிருஷ்ணன், வளர்மதி அவரின் கணவர் அந்தோணி, விஜயகுமார், பௌத்தரசன், அரவிந்த், ரிஷித், கார்த்திக், விஜய், சாம்சுந்தர், ஜியோ வில்சன், லோகநாதன் ஆகிய 12 பேரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

வளர்மதி
வளர்மதி

இது குறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``சென்னையில் போலி கால்சென்டர்களை நடத்தி, பலரை ஏமாற்றிய வழக்கில் சென்னை ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த கோபிகிருஷ்ணனை சில ஆண்டுகளுக்கு முன்னர் கைதுசெய்தோம். சிறையிலிருந்து வெளியில் வந்த அவர், மீண்டும் தன்னுடைய கூட்டாளியான வளர்மதியுடன் சேர்ந்து திருமுல்லைவாயலில் போலி கால் சென்டரை நடத்தி, பலரிடம் பணத்தை ஏமாற்றியிருக்கிறார். அது குறித்த புகாரின் பேரில் கோபிகிருஷ்ணன் உட்பட அவரின் கூட்டாளிகள் 12 பேரைக் கைது செய்திருக்கிறோம்.

கோபிகிருஷ்ணனின் கூட்டாளிகளான அ.தி.மு.க-வைச் சேர்ந்த பென்ஸ் சரவணன், வி.சி.க பிரமுகர் செல்வா என்கிற செல்வக்குமார் ஆகியோரை ஏற்கெனவே கைதுசெய்திருக்கிறோம். கடந்தமுறை கோபிகிருஷ்ணனிடமிருந்து விலை உயர்ந்த சொகுசு கார்களையும் ஏடிஎம் கார்டுகள், டெபிட் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். ஆனால், இந்தத் தடவை கால் சென்டர் தொடங்கிய சில மாதங்களிலேயே அவர் சிக்கிக்கொண்டார். இருப்பினும், அவர் எத்தனை பேரை ஏமாற்றினார் என்று விசாரித்துவருகிறோம்'' என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``போலி கால் சென்டர்களின் மாஸ்டர் மைண்ட் கோபிகிருஷ்ணன். சிறையிலிருந்து வெளியில் வந்த கோபிகிருஷ்ணனுக்கு பணத்தேவை ஏற்பட்டிருக்கிறது. வேறு தொழில் செய்தால் இந்த அளவுக்குச் சம்பாதிக்க முடியாது என்பதால், மீண்டும் போலி கால் சென்டரைத் தொடங்கியிருக்கிறா. சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கோபிகிருஷ்ணனின் கூட்டாளிகள் போலி கால் சென்டர்கள் நடத்திவந்தனர். அவர்களையும் கைதுசெய்திருக்கிறோம்.

போலி கால் சென்டர் நடந்த பென்ஸ் கிளப்
போலி கால் சென்டர் நடந்த பென்ஸ் கிளப்

எனவே, பொதுமக்கள் லோன் தேவை என்றால் வங்கிகளுக்கு நேரில் செல்லுங்கள். கால் சென்டரிலிருந்தோ, குறிப்பிட்ட நிதி நிறுவனங்களின் பெயரைச் சொல்லி போன் மூலமாகவோ குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறுபவர்களை நம்பி, பணத்தை ஏமாற வேண்டாம். மேலும், ஓ.டி.பி எண்கள், வங்கி ஆவணங்கள், அடையாள அட்டைகளை அறிமுகம் இல்லாதவர்களுக்கு வாட்ஸ்அப்பிலோ, இ-மெயிலோ அனுப்ப வேண்டாம்" என்றார்.

``கொரோனா காலகட்டத்தில் எனக்குப் பணம் தேவைப்பட்டது. அதனால்தான் போலி கால் சென்டரைத் தொடங்கினேன்'' என்று கூறியிருக்கிறார் கோபிகிருஷ்ணண்.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் போல...!

அடுத்த கட்டுரைக்கு