Published:Updated:

மறுமணம் செய்வதாகக் கூறி பெண்ணிடம் ரூ.86 லட்சம் மோசடி! - போலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி?

போலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகணேஷ்
News
போலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகணேஷ்

சென்னையில் மறுமணம் செய்துகொள்வதாக நடித்து 86 லட்சம் ரூபாயை ஏமாற்றிய போலி காவல்துறை அதிகாரியை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை ராஜகீழ்ப்பாக்கம், கனகராஜா தெருவைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் (63). இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த 12.10.2021-ம் தேதி கொடுத்த புகாரில், ``நான் வெளிநாட்டில் பணி செய்துவிட்டு மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். என்னுடைய ஒரே மகளுக்குத் திருமணமாகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக எங்களுடன் அவர் வசித்துவருகிறார். இதையறிந்த சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த லட்சுமிபதி, நிர்மலா ஆகியோர் சிவகணேஷ் என்பவரை கடந்த 2021, ஜனவரி 10-ம் தேதி வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

பின்னர் அவர்கள் என் மகளின் மறுமணம் சம்பந்தமாகச் பேசி எங்களுக்கு நம்பிக்கை அளித்தனர். என் மகளை சிவகணேஷ் என்கிற சந்திரசேகரன் மறுமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறினார். மேலும் அவர் போலீஸ் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுவதாகவும் தெரிவித்தனர். ஏற்கெனவே ஏற்பட்ட பிரச்னையில் நீதிமன்றத்தில் விவாகாரத்து செய்ய உதவுவதாகக் கூறினர். இந்த நிலையில், கடந்த 2021, ஜனவரி 20-ம் தேதி ஒரு லட்சம் ரூபாய்க்கான செக்கை எங்களிடம் பெற்றுச் சென்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பின்னர் 25.1.2021-ம் தேதி 3 லட்சம் ரூபாயை ரொக்கமாகவும் 27.1.2021-ம் 5 லட்சம் ரூபாய், 30.1.2021-ம் தேதி 3 லட்சம் ரூபாய், 1.2.2021-ம் தேதி 2 லட்சம் ரூபாய், 2.2.2021-ம் தேதி ஒரு லட்சம் ரூபாய், 4.2.2021-ம் தேதி 2 லட்சம் ரூபாய், 6.2.2021-ம் தேதி 8 லட்சம் ரூபாய், 10.2.2021-ம் தேதி எனப் பல தடவையாக மொத்தம் 84.6 லட்சம் ரூபாய் வாங்கினர். விவாகாரத்து வழக்குக்காக எங்களை எழும்பூர் நீதிமன்றத்துக்கு காரில் அழைத்துச் சென்று பணம் வாங்குவார்கள். பின்னர் வேலை முடிந்தது என சிவகணேஷ் உறுதியளிப்பார்.

மோசடி
மோசடி

திடீரென ஒருநாள் அவர் தொலைபேசியில் நீதிபதி பேசுவதாக என்னிடம் பேசச் சொன்னபோது பெண் ஒருவர் பேசினார். தொலைபேசியில் பேசிய அந்தப் பெண் தன்னை நீதிபதி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு வழக்கை முடிக்க 20 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும், அதை சிவகணேஷிடம் கொடுக்கும்படியும் கூறினார். மீண்டும் ஒருநாள் எதிர்க்கட்சி வழக்கறிஞர் எனக் கூறி வாசுகி என்ற பெண் வழக்கு முடிவுற்றதாகவும், படிவம் ஒன்றில் கையொப்பமிட வேண்டும் என்றும் போனில் பேசினார். அதன் பிறகு கடந்த பிப்ரவரி 4-ம் தேதி எங்கள் காரை அவசரமாக ஊருக்கு எடுத்துச் செல்வதாகக் கூறிவிட்டுக் கொண்டு சென்ற சிவகணேஷ், பின்னர் அதைத் திருப்பித் தரவில்லை. அது குறித்து கேட்டால் விவரம் சொல்லாமல் ஏமாற்றிவந்தார். அதனால் அவர்மீது சந்தேகம் வந்தது. அதையடுத்து, `உங்கள்மீது நம்பிக்கை இல்லை, பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்’ என்று கேட்டோம். அதற்கு சிவகணேஷ், `பணத்தைத் தர முடியாது. உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினார். அதன் பிறகு அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரின் செல்போன் நம்பரும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் என் மகளின் ஏடிஎம் கார்டை அவசரத் தேவை என வாங்கிச் சென்ற சிவகணேஷ், அதிலிருந்து 1.2 லட்ச ரூபாயை எடுத்திருக்கிறார். பணத்தைத் திருப்பிக் கேட்டபோது என்னுடைய மகளைக் கட்டாயம் திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி எங்களை ஏமாற்றிவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் நாங்கள் அனைவரும் கோயிலில் எடுத்த புகைப்படத்தைப் பயன்படுத்தி அவமானப்படுத்துவேன் என்றும் சிவகணேஷ் மிரட்டுகிறார். எங்களது தொலைபேசி பதிவுகள் இருப்பதால் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும், தனக்கு ஆள் பலமும் செல்வாக்கும் அதிகம் உள்ளதாகவும் மிரட்டுவார். எங்களை ஏமாற்றும் எண்ணத்துடன் பழகி நம்பிக்கை மோசடி செய்திருக்கிறார். போலி காவல்துறை அதிகாரியாகவும் நடித்து, சிலரை பெண் நீதிபதியாகவும், பெண் வழக்கறிஞராகவும் நடிக்கவைத்து எங்களை ஏமாற்றி பணத்தையும் காரையும் சிவகணேஷ் பெற்றுக்கொண்டார். எனவே தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் காரையும் பணத்தையும் பெற்றுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்

இந்தப் புகாரின் பேரில் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் கமிஷனர் மீனா ஆகியோர் மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் அசோகன், உதவி கமிஷனர் ஜான்விக்டர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிவகணேஷை போலீஸார் கைதுசெய்தனர். அவரிடமிருந்து காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் சிவகணேஷுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகனும் மகளும் கோயம்புத்தூரில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.