Published:Updated:

சென்னை: 'பிறந்தநாள் பார்ட்டி;சிறை வைக்கப்பட்ட ஃபைனான்ஸியர்?! விசாரணையில் சினிமாவை விஞ்சிய ட்விஸ்ட்!'

சினிமா ஃபைனான்ஸியர்  குமார்
சினிமா ஃபைனான்ஸியர் குமார்

பிறந்தநாள் பார்ட்டி என அழைத்து சினிமா ஃபைனான்ஸியரை அறைக்குள் கட்டிப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை தி.நகர், ஆஸ்பத்திரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (48). இவர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 29.6.2021-ஆம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் விருக்கம்பாக்கத்தில் ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறேன். எனக்கு ராமாபுரம் அருகே கணபதி காலனியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரைத் தொழில் அடிப்படையில் சில ஆண்டுகளாகத் தெரியும். ஸ்டீபன் என்பவர் மூலம் எனக்குக் கடந்த ஆண்டு ஹரிகிருஷ்ணன், நிம்மல் ஜெமினி கண்ணன், அவரின் மனைவி கிருத்திகா ஆகியோர் அறிமுகமானார்கள். ஸ்டீபன் கேட்டுக் கொண்டதன் பேரில் நிம்மல் ஜெமினி கண்ணனின் கார், பைக் ஆகியவற்றை அடமானமாக பெற்றுக் கொண்டு நான்கரை லட்சம் ரூபாயை நிம்மல் ஜெமினி கண்ணனுக்கு கடனாக கொடுத்தேன். இதற்காக நிம்மல் ஜெமினி கண்ணன், அவரின் மனைவி கிருத்திகா ஆகியோர் புரோ நோட்டில் கையொப்பமிட்டு பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர். அதில் எனக்கான வட்டிப் பணத்தை மாதந்தோறும் தவறாமல் தந்துவிடுவதாக உறுதியளித்திருந்தனர்.

நிம்மல் ஜெமினி கண்ணன்
நிம்மல் ஜெமினி கண்ணன்

ஆனால் பணம் பெற்று சென்றவுடன் எந்த ஒரு பணமும் தராமல் என்னை இழுத்தடிப்பு செய்து வந்தனர். இந் நிலையில் 27.6.2021-ம் என்னுடைய பிறந்தநாள். அன்று என்னுடைய பணம் குறித்து நிம்மல் ஜெமினி கண்ணனிடம் கேட்டபோது துரைப்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டுக்கு நேரில் வந்து வட்டி பணத்தை பெற்றுக் கொள்ளுமாறும் பிறந்தநாள் பரிசாக ஒரு சிறிய பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்திருப்பதாகவும் கண்டிப்பாக வரும்படி கேட்டுக் கொண்டதன்பேரில் நான் மட்டும் தனியாக துரைப்பாக்கம் சக்தி நகரில் உள்ள நிம்மல் ஜெமினி கண்ணனின் வீட்டுக்கு அன்றைய தினம் காலை 11.30 மணியளவில் சென்றேன். அப்போது வீட்டில் நிம்மல் ஜெமினி கண்ணன், அவரின் மனைவி கிருத்திகா ஆகியோர் இருந்தனர்.

எனக்கு அவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். கிருத்திகா எனக்கு காபி கொண்டு வந்து கொடுத்தார். நான் அதை குடித்து கொண்டிருந்த நேரத்தில் எனது பின்னால் இருந்து தலையில் நிம்மல் ஜெமினி கண்ணன் இரும்பு கம்பியால் ஓங்கி அடித்தார். நான் அங்கேயே மயங்கி படுத்துவிட்டேன். பின்னர் நான் கண்விழித்து பார்க்கும்போது என் உடல் முழுவதும் கயிறு, சென்ட்ரிங் கம்பி கொண்டு என்னால் ஒரு அங்குலம் கூட நகர முடியாதபடி கட்டப்பட்டிருந்தது. அதற்கு மேல் பார்சல் செய்யும் டேப் கொண்டு உடல் முழுவதும் சுற்றப்பட்டிருந்தது. என்னை சுற்றி நிம்மல் ஜெமினிகண்ணன், அவரது மனைவி கிருத்திகா, ஹரிகிருஷ்ணன், ஸ்டீபன் ஆகியோர் இருந்தனர். ஸ்டீபனிடம் கேட்டபோது அவர், "சத்தம் போட்டா, உன்னை அடிச்சு கொன்னுடுவேன் மரியாதையா நான் சொல்றத மட்டும் கேளுன்னு, கையில் வைத்திருந்த இரும்பு ராடால் என்னைத் தாக்கினார். பிறகு நான் அணிந்திருந்த 18 சவரன் தங்க செயின், 6 தங்க மோதிரங்கள் கைசெயின், பாக்கெட்டில் வைத்திருந்த 50,000 ரூபாய் ஆகியவற்றை மிரட்டி பறித்துக்கொண்டனர்.

ஹரிகிருஷ்ணன்
ஹரிகிருஷ்ணன்

அப்போது நிம்மல் ஜெமினி கண்ணன் என் அலுவலகத்தின் சாவியை வாங்கிக் கொண்டு அங்கு சென்று புரோ நோட்டு பத்திரங்களையும் நிம்மல் ஜெமினி கண்ணனின் கார், புல்லட் பைக் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். நிம்மல் ஜெமினி கண்ணன் எழுதிக் கொடுத்த புரோ நோட்டு பத்திரங்களை கிழித்துப் போட்டார். பின்னர் சில பேப்பர்களில் என்னிடம் கையெழுத்து போடுமாறு வற்புறுத்தினர். அதனால் நான் கையெழுத்து போட்டேன். பிறகு என்னுடைய செக்புக்கில் 10,00,000 ரூபாய் 4,30,000 ரூபாய், 1,00,000 என மூன்று செக் லீப்களில் எழுதி என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். பிறகு காரிலிருந்த 1,00,000 ரூபாயையும் எடுத்துக் கொண்டனர். என்னை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு நான்கு பேரும் வெளியில் சென்றுவிட்டனர். பிறகு நான் பல்லால் கடித்து என்னுடைய உடம்பில் சுற்றப்பட்டிருந்த கயிறு, கம்பியை அவிழ்த்து அந்த அறையிலிருந்த ஜன்னல் கதவை திறந்து 29.6.2021-ல் உதவி கேட்டு சத்தம் போட்டேன். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு துரைப்பாக்கம் போலீஸார் என்னை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 342, 363,387, 394 ஆகிய பிரிவுகளின் கீழ் நிம்மல் ஜெமினி கண்ணன், கிருத்திகா, ஹரிகிருஷ்ணன், ஸ்டீபன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இந்த நிலையில் 30.6.2021-ம் தேதி துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் நிம்மல் ஜெமினி கண்ணன் என்பவர் கொடுத்த புகாரில், நான் துரைப்பாக்கத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். கிருத்திகா என்கிற விஷ்ணுபிரியா என்பவருடன் சேர்ந்து கணவன் மனைவியாக வசித்து வருகிறேன். நான் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு டேட்டா பேஸ் சம்பந்தமான வேலைகளை செய்து வந்தேன். அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. அதனால் ஆன்லைனில் ஒரு தகவலைப் பதிவு செய்தேன். அந்தத் தகவலைப்பார்த்த ஹரிகிருஷ்ணன் என்னுடைய செல்போனில் பேசினார். அப்போது நான் எனக்கு அழகான மனைவி உள்ளார். அவருடன் நீங்கள் நேரம் செலவழிக்கலாம் என்று கூறினேன். அதற்கு அவரும் சம்மதித்து என்னுடைய வீட்டுக்கு வந்துச் செல்வார். எனக்கு அவர் 12 லட்சம் ரூபாய் வரை கொடுத்திருக்கிறார்.

கைது
கைது

ஊரடங்கு காரணமாக அவர் வீட்டுக்கு வரவில்லை. பிப்ரவரி 6, 2021-ம் தேதி என்னுடைய வீட்டுக்கு குமார் என்பவர் வந்தார். அவர் என் வீட்டிலிருந்து என் மனைவியின் கம்மல், என்னுடைய கேமரா, கார், புல்லட் ஆகியவற்றை எடுத்துச் சென்றுவிட்டார். மேலும் இதைப்பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அதுதொடர்பாக ஹரிகிருஷ்ணனிடம் நான் கேட்டபோது, "குமாரிடமிருந்து எதுவும் வாங்கவில்லை" என்று கூறினார். அதன்பிறகு என்னுடைய காரை குமார் பயன்படுத்தி வந்தார். காரை அவருடைய பெயருக்கு மாற்ற வலியுறுத்தி வந்தனர். எனவே குமார், அவருடைய ஆள்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 448, 384,387, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் குமார் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இரு தரப்பினரிடமும் புகார்களைப் பெற்ற துரைப்பாக்கம் போலீஸார், சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்க துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ரவி தலைமையில் இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோஸ், தலைமை காவலர்கள் புஷ்பராஜ், திருமுருகன், தாமோதரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்தனர். நிம்மல் ஜெமினி கண்ணன், ஹரிகிருஷ்ணன, சினிமா ஃபைனான்ஸியர் குமார் ஆகியோரைப் போலீஸார் பிடித்தனர். 'திருமங்கலம் பேருந்து நிலையம்' என்ற திரைப்படத்தை குமார் தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது. இவர் சினிமா துப்பாக்கியைக் காட்டி தம்பதியை மிரட்டியதும் விசாரணையில் தெரிந்தது. மூன்று பேரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கிருத்திகாவை போலீஸார் தேடிவருகின்றனர். சினிமாவை விஞ்சும் வகையில் நடந்த இந்தச் சம்பவம் துரைப்பாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு