Election bannerElection banner
Published:Updated:

சென்னை: `ரூ.19 லட்சம் இன்சூரன்ஸுக்காக ரூ.2 கோடியை இழந்த ஆசிரியை! -டெல்லி கும்பல் சிக்கியது எப்படி?

இன்சூரன்ஸ் மோசடியில் கைது செய்யப்பட்டவர்கள்
இன்சூரன்ஸ் மோசடியில் கைது செய்யப்பட்டவர்கள்

சென்னையைச் சேர்ந்த ஆசிரியையிடம் உங்கள் கணவரின் லைஃப் இன்சூரன்ஸ் முதிர்ச்சி பெற்றுவிட்டதாகக் கூறி 2 கோடி ரூபாயை ஏமாற்றிய டெல்லியைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

சென்னை மந்தைவெளி, திருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுதா ஸ்ரீதரன் (67). இவர் 2019-ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் ``நான் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றுவிட்டேன். என்னுடைய கணவர் ஸ்ரீதரன், ஐஆர்.எஸ் அதிகாரியாக பணியாற்றினார். அவர் இறந்தப்பிறகு அவரின் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி தொகை எனக்கு கிடைத்தது. 2019-ம் ஆண்டு லைஃப் இன்சூரன்ஸ் தலைமை அலுவலகத்திலிருந்து அதிகாரி ஒருவர் என்னிடம் இந்தியில் பேசினார். அப்போது அவர், ஸ்ரீதரனின் இன்சூரன்ஸ் பாலிசியில் இன்னும் 19 லட்சம் ரூபாய் உள்ளது. அந்தப் பணத்தை உங்கள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று கூறினார். அதற்கு ஜிஎஸ்டியாக குறிப்பிட்ட தொகையை நான் சொல்லும் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அதனால் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினேன். அதன்பிறகும் என்னை தொடர்பு கொண்ட அந்த நபர், ஸ்ரீதரனின் இன்சூரன்ஸ் தொகை கணக்கீட்டில் தவறு நடந்திருக்கிறது. அதை சரிசெய்ய முன்பணமாக குறிப்பிட்ட தொகயை கேட்டார். அதை நம்பி நானும் வங்கி மூலம் பணம் அனுப்பினேன். இந்த வகையில் என்னை நம்ப வைத்து நூதன முறையில் 2 கோடியே 13 லட்சம் ரூபாயை அந்த நபர் மோசடி செய்து விட்டார். எனவே சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மகேஷ்குமார் அகர்வாலிடம் பாராட்டு சான்றிதழைப் பெறும் துணை கமிஷனர் நாகஜோதி,   அருகில் கூடுதல் கமிஷனர் வித்யா குல்கர்னி
மகேஷ்குமார் அகர்வாலிடம் பாராட்டு சான்றிதழைப் பெறும் துணை கமிஷனர் நாகஜோதி, அருகில் கூடுதல் கமிஷனர் வித்யா குல்கர்னி

புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சென்னை மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி பிரிவுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் வித்யா குல்கர்னி துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுதா ஸ்ரீதரனை ஏமாற்றியது ஒருவர் அல்ல, ஒரு கும்பல் எனத் தெரியவந்தது. அந்தக் கும்பல் போலி முகவரி மற்றும் பெயர்களைக் கொடுத்து வங்கிகளில் கணக்கு தொடங்கியதும் தெரிந்தது. தற்போது அந்தக் கும்பல் டெல்லியில் பதுங்கியிருக்கும் தகவலைக் கண்டுபிடித்த போலீஸார், உடனடியாக 17.3.2021-ல் டெல்லிச் சென்றனர்.

அங்கு தலைமறைவாக இருந்த மோசடி கும்பலைச் சேர்ந்த டெல்லியைச் சேர்ந்த அமன்பிரசாத் (29), பிரதீப்குமார் (29), மனோஜ்குமார் (44), குபீர்சர்மா என்கிற பிரின்ஸ் (27), ஹீமன்சு தாஹி (25), ராம்பால் (30) ஆகிய 6 பேரை போலீஸார் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது டெல்லியில் லைன் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருவதாக இவர்கள் கூறி சுதா ஸ்ரீதரனை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீஸ் டீம்
போலீஸ் டீம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தவர்களின் விவரங்களைச் சேகரிக்கும் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் போனில் பேசுவார்கள். அப்போது உங்களின் இன்சூரன்ஸ் பாலிசி முதிர்ச்சியடைந்து விட்டது. அதனால் அந்தப் பணத்தை உங்கள் வங்கி கணக்கில் செலுத்த வங்கி தொடர்பான விவரங்கள் வேண்டும் என்று கூறுவார்கள். பின்னர், பாலிசியின் முதிர்ச்சி தொகையை வங்கி கணக்கில் செலுத்த முன்பணமாக நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று ஆசை வார்த்தைகளைக் கூறுவர். அதை நம்பி பணம் செலுத்தியபிறகு மோசடி கும்பல் தங்களின் செல்போன் நம்பரை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அடுத்த நபருக்கு வலைவரிக்க தொடங்கிவிடுவார்கள். இன்சூரன்ஸ் பாலிசி முதிர்ச்சியடைந்து விட்டதாகக் கூறி மோசடி செய்த இவர்கள் போலி முகவரி, பெயர்களை கூறியிருக்கின்றனர். இருப்பினும் வங்கி கணக்கு விவரத்தை வைத்து இந்தக் கும்பலை கைது செய்திருக்கிறோம். கைது செய்யப்பட்ட இவர்கள் எத்தனை பேரிடம் மோசடி செய்திருக்கிறார்கள் என்று விசாரித்து வருகிறோம்" என்றனர்.

இந்த வழக்கை சிறப்பாக விசாரித்த துணை கமிஷனர் நாகஜோதி, உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம், எஸ்.ஐ பிரேம்குமார், சுரேஷ்குமார், தலைமை காவலர்கள் ஸ்டாலின் ஜோஸ், நிஷா, முதன்மை காவலர்கள் சுபஜாராணி, காவலர்கள் மோகன், இளங்கோவன், ஏழுமலை மற்றும் காவலர்களை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். அப்போது, பொதுமக்கள் இதுபோன்ற தொலைபேசி அழைப்புகளை நம்பி எந்தவித பணப்பரிவர்த்தணைகளை செய்ய வேண்டாம் என்று தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு