Published:Updated:

சென்னை: நள்ளிரவில் வந்த ஸ்க்ரீன் ஷாட்! - பெண் தொழிலதிபர் புகாரால் சிக்கிய கணவரின் தம்பி

செல்போன்
செல்போன் ( மாதிரி படம் )

கிஷோரை மட்டும் போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால், மற்றவர்களை போலீஸார் கைது செய்யவில்லை. என்னைப்போல சீனிவாசரெட்டி இன்னும் சில பெண்களை ஏமாற்றியிருக்கிறார்.

தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர் மீனா(35). இவருக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு 9 வயதில் மகன் இருக்கிறார். தம்பதியர் இருவரும் ஃபைனான்ஸ் மற்றும் கட்டுமானத் தொழில் செய்துவந்தனர். இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் இருவரும் விவகாரத்து பெற்று தனித்தனியாக வசித்துவருகின்றனர். சென்னையில் பெற்றோருடன் மீனா, தன்னுடைய மகனுடன் வாழ்ந்துவந்திருக்கிறார்.

கிஷோர்
கிஷோர்

மாதவரம் காவல் நிலையத்தில் மீனா கொடுத்த புகார் மனுவில், ``எனக்கும் ஆந்திராவைச் சேர்ந்த சீனிவாசரெட்டி என்பவருக்கும் 2018-ம் ஆண்டு என் பெற்றோர் முன்னிலையில் இரண்டாவது திருமணம் நடந்தது. நான் முறைப்படி என் முதல் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று சீனிவாசரெட்டியுடன் வாழ்ந்துவருகிறேன். சீனிவாசரெட்டிக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து, அவரும் தன்னுடைய முதல் மனைவியை விவகாரத்து பெற்றுவிட்டதாக என் தந்தையிடம் கூறியிருக்கிறார். திருமணத்தின்போது எனக்கு 90 சவரன் நகை என் வீட்டில் போட்டனர். நானும் சீனிவாசரெட்டியும் திருவொற்றியூர், பெரம்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்துவந்தோம்.

இந்தநிலையில் நான் கருவுற்றிருந்தேன். அப்போது நான்கு மாதக் கரு கலைந்துவிட்டது. என் உடல்நலம் சரியில்லாத சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு சீனிவாசரெட்டி, என்னிடமிருந்து 45 சவரன் நகை, 3.25 லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார். இந்தச் சூழலில் நான் சீனிவாசரெட்டியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, நான் பாத்ரூமில் குளிப்பதை அவரின் தம்பி கிஷோர் ரகசியமாக வீடியோ எடுத்து, அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நள்ளிரவில் என்னுடைய செல்போனுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டினார். இந்தச் சம்பவத்துக்குப் பின்னணியில் சீனிவாசரெட்டியும், அவரின் அம்மாவும், சீனிவாசரெட்டியின் முதல் மனைவியும் கிஷோரும் இருக்கிறார்கள். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் மாதவரம் போலீஸார், கிஷோரைக் கைது செய்திருக்கிறார்கள். மற்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

சீனிவாசரெட்டி
சீனிவாசரெட்டி

என்ன நடந்தது என்று மீனாவிடம் பேசினோம். ``நான் ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறேன். கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறேன். ஆந்திரமாநிலம், நெல்லூர் பாளையம் சந்திரபாடியம் பகுதியில் 2017-ம் ஆண்டு நடந்த கட்டுமான பணிக்குச் சென்றபோதுதான் சீனிவாசரெட்டியும், அவரின் குடும்பத்தினரும் எனக்கு அறிமுகமானார்கள். என் முதல் கணவர் குறித்த சீக்ரெட் தகவல்களை சீனிவாசரெட்டி என்னிடம் தெரிவித்தார். அதனால் எனக்கும் என் கணவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து அவரிடமிருந்து விவகாரத்து பெற்றுவிட்டேன்.

பின்னர் சீனிவாசரெட்டியின் பேச்சை நம்பிய என் பெற்றோர் அவருடன் எனக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்தனர். திருமணத்தின்போது சீனிவாசரெட்டி, தன்னுடைய முதல் மனைவியிடமிருந்து விவகாரத்து பெற்றுவிட்டதாகக் கூறியிருந்தார். ஆனால், அவர் முதல் மனைவியிடமிருந்து விவகாரத்து பெறாமல், சென்னையிலேயே குடியிருந்துவந்திருக்கிறார். அந்தத் தகவலை என்னிடம் மறைத்துவிட்டார். திருமணமான சில மாதங்கள் வரை என்மீது அன்பாக இருப்பதைப்போல நடித்தார். அரிசி பிசினஸ், டிராவல்ஸ் பிசினஸ் என என்னிடமிருந்து நகை, பணமாக 14 லட்சம் ரூபாய் வரை சீனிவாசன் வாங்கினார். நானும் அவரை நம்பிப் பணம், நகைகளைக் கொடுத்தேன். என்னுடைய கிரெடிட் கார்டுகளையும் சீனிவாசரெட்டிதான் பயன்படுத்திவந்தார்.

கைது
கைது
சென்னை: `நான்தான் ஹவுஸ் ஓனர்’ - வாடகைக்குக் குடியிருந்தவர்கள் அதிர்ச்சி... மூவரால் ஏமாந்த 100 பேர்

இந்தச் சூழலில் சீனிவாசரெட்டியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. அதனால் அவரை ரகசியமாக நான் கண்காணித்தபோதுதான் சீனிவாசரெட்டியின் சுயரூபம் எனக்குத் தெரியவந்தது. அது குறித்து அவரிடம் கேட்டபோதுதான் எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. என்னை விட்டுவிட்டு சீனிவாசரெட்டி பிரிந்து சென்றுவிட்டார். அது தொடர்பாக பேசுவதற்காக கடந்த ஜூலை மாதம் மாதவரத்திலுள்ள சீனிவாசரெட்டியின் அம்மா வீட்டுக்குச் சென்றபோதுதான், நான் குளியலறையிலிருந்தபோது சீனிவாசரெட்டியின் தம்பி கிஷோர் பாத்ரூம் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்திருக்கிறார். அதைக் காட்டி சீனிவாசனின் குடும்பத்தினர் மிரட்டினர். தற்போது கிஷோரை மட்டும் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், மற்றவர்களை போலீஸார் கைது செய்யவில்லை. என்னைப்போல சீனிவாசரெட்டி இன்னும் சில பெண்களை ஏமாற்றியிருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன" என்றார் கண்ணீர்மல்க.

சீனிவாசரெட்டியுடனும், அவரின் குடும்பத்தினரிடமும் செல்போன் விளக்கம் கேட்க, செல்போனில் தொடர்புகொண்டோம். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை. அவர்களின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு