Published:Updated:

`முதலில் ஏமாந்தேன்; அதனால் ஏமாற்றினேன்' - இளம்பெண்களுடன் நெருக்கம்; வீடியோ எடுத்த இன்ஜினீயர் கைது

திருமண தகவல் மையம் மூலம் 10-க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் பழகி, நகை, பணத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் இன்ஜினீயர் சூர்யா. இவரின் அப்பா மத்திய உளவுத்துறையில் உயரதிகாரியாகவும், அம்மா ஆசிரியராகவும் இருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர், திருமண தகவல் மையத்தில் தங்கள் மகளுடைய விவரங்களைப் பதிவு செய்து வைத்திருந்தனர். அந்தப் பெண்ணின் அம்மாவிடம் மதுரையைச் சேர்ந்த சூர்யா (28) என்பவர் போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர், `காஞ்சிபுரத்தில் மனித உரிமை ஆணையத்தில் வேலை பார்ப்பதாகத் தெரிவித்தார். `என்னுடைய அப்பாவும் அம்மாவும் வெளிநாட்டில் வேலை பார்க்கின்றனர். உங்கள் பெண்ணின் போட்டோவைப் பார்த்தேன். எனக்குப் பிடித்திருக்கிறது. நேரில் வந்து மற்ற விஷயங்களைப் பேசுகிறேன்' என்று கூறினார். அதனால் பெண் வீட்டினர் மாப்பிள்ளை சூர்யாவின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்
பறிமுதல் செய்யப்பட்ட கார்

அப்போது 28.6.2021-ம் தேதி சூர்யா மட்டும் இளம்பெண்ணின் வீட்டுக்கு வந்தார். இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கும் சூர்யாவைப் பிடித்துவிட்டது. செப்டம்பர் 18-ம் தேதி தன்னுடைய அப்பா, அம்மாவை வீட்டுக்கு அழைத்துவருவதாக சூர்யா, பெண் வீட்டினரிடம் தெரிவித்தார். அதற்குப் பெண் வீட்டினரும் ஓகே என்று கூறினர். இதையடுத்து பெண்ணின் செல்போன் நம்பரில் அவரிடம் மணிக்கணக்கில் சூர்யா பேசத் தொடங்கினார். இருவரும் பழகிவந்தனர். அதனால் சூர்யாவிடம், புதிய வீடு வாங்கும் திட்டத்தை அந்தப் பெண் கூறினார். அதற்கு சூர்யா, அண்ணாநகரில் தனக்குத் தெரிந்த பில்டர் ஒருவர் இருக்கிறார் என்று கூறினார்.

இதையடுத்து பெண்ணின் வீட்டினரை காரில் அழைத்துக்கொண்டு சூர்யா அண்ணாநகருக்கு ஜூலை 13-ம் தேதி சென்றார். அங்கு பில்டரைச் சந்தித்துப் பேசிய பெண் வீட்டாருக்கு பில்டர் காட்டிய 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாட் பிடித்திருந்தது. அதற்கு முன்பணமாக 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என பில்டர் கூறினார். அப்போது பெண் வீட்டினர் பணம் எடுத்துச் செல்லவில்லை. அதனால் சூர்யா, நான் செக்காக பணத்தைக் கொடுத்துவிடுகிறேன் என்று கூறி பெண் வீட்டார் மனதில் இடம்பிடித்தார். ஆகஸ்ட் 5-ம் தேதி பில்டருக்கு கொடுக்கவேண்டிய பணத்துடன் பெண் வீட்டார் அண்ணாநகருக்குச் செல்ல புறப்பட்டனர். அப்போது பெண் வீட்டாருக்கு போன் செய்த சூர்யா, காரில் அழைத்துச் செல்வதாகக் கூறினார். அதன்படி காரில் பெண்ணின் வீட்டுக்கு சூர்யா சென்றார். அப்போது பணம், ஆவணங்களுடன் மணப்பெண் மட்டும் வந்தார்.

கார்
கார்

பெண்ணின் அம்மா வர காலதாமதமானதால் பணத்தை காரில் வைத்துவிட்டு அம்மாவை அழைக்க அந்தப் பெண் வீட்டுக்குச் சென்றார். இந்தச் சமயத்தில் பணத்துடன் காரில் சூர்யா எஸ்கேப் ஆகிவிட்டார். உடனடியாக சூர்யாவுக்கு பெண் வீட்டார் போன் செய்தபோது சுவிட்ச் ஆஃப் என பதில் வந்தது. இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் வீட்டார், கானத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். உதவி கமிஷனர் சுதர்சன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் வேலு, பாலகுமார், எஸ்.ஐ சதீஷ்குமார், தலைமைக் காவலர் விஜயகுமார், காசி முருகன், காவலர்கள் சௌந்தர்ராஜ், சதீஷ்குமார் ஆகியோர்கொண்ட தனிப்படை போலீஸார் மாப்பிள்ளை சூர்யாவைத் தேடிவந்தனர். அவரின் செல்போன் நம்பரின் சிக்னலை ஆய்வு செய்தபோது நெல்லூர், புதுச்சேரி எனக் காட்டியது. அதனால் ஒரு டீம் புதுச்சேரிக்கும் இன்னொரு டீம் நெல்லூருக்கும் சென்றது. ஆனால் போலீஸார் தேடுவதையறிந்த சூர்யா, செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு புதுச்சேரியிலிருந்து தப்பிவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து சூர்யாவின் சொந்த ஊரான ராஜபாளையத்துக்குச் சென்ற போலீஸார், அவரின் அம்மாவின் செல்போன் நம்பரை பெற்றனர். அந்த நம்பர் நெல்லூரில் சிக்னல் காட்டியது. அதனால் நெல்லூருக்குச் சென்ற தனிப்படை போலீஸாரிடம் சிக்காமல் அங்கிருந்து கோவைக்குச் சென்றார். அதனால் சூர்யாவின் செல்போன் சிக்னல் மூலம் அவரைப் பின்தொடர்ந்து சென்ற தனிப்படை போலீஸார் அங்குள்ள ஒரு ஹோட்டலில்வைத்து அவரைப் பிடித்தனர். சூர்யாவிடமிருந்து கார், ஆறு சவரன் தங்க நகைகள், 3 லட்சம் ரூபாய் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

திருமணம்
திருமணம்
Representational Image

இது குறித்து கானத்தூர் போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட சூர்யாவின் குடும்பத்தினர் சமூகத்தில் நல்ல பதவிகளில் உள்ளனர். அவரின் அப்பா மத்திய உளவுத்துறையில் எஸ்.பி-யாகவும், அம்மா ஆசிரியராகவும் பணியாற்றிவருகின்றனர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த சூர்யாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் பெண் பார்க்கும் படலம் நடந்திருக்கிறது. அப்போது, தென்மாவட்டத்தைச் சேர்ந்த திருமண தகவல் மைய இணையதள மூலம் அறிமுகமாகியிருக்கிறார். அவர், சூர்யாவிடம் அன்பாகப் பேசி ஒரு லட்சத்துக்கு மேல் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியிருக்கிறார். அதன் பிறகு அந்தப் பெண் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். அதனால் பாதிக்கப்பட்ட சூர்யாவும் அந்தப் பெண்ணின் ஸ்டைலில் திருமண இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பெண்களின் செல்போன் நம்பர்களை சேகரித்து பந்தாவாகப் பேசிவந்திருக்கிறார். இதுவரை 12 பெண்களிடமிருந்து நகை, பணத்தை சூர்யா ஏமாற்றி வாங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது.

ஆவடி: திருமண ஆசைகாட்டி சிறுமியிடம் அத்துமீறிய உறவினர்! -போக்சோ சட்டத்தில் கைதுசெய்த மகளிர் போலீஸ்

திருமண தகவல் மைய இணையதளங்களிலிருந்து சேகரிக்கப்படும் பெண்களின் குடும்பத்தினரிடம் இன்ஜினீயரிங் படித்திருப்பதாகவும், கைநிறைய சம்பாதிப்பதாகவும், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அரசு வேலை எனக் கூறி அறிமுகமாகும் சூர்யா, நைசாக பெண்ணின் செல்போனை வாங்கி அன்பாகவும் அக்கறையாகவும் பேசுவார். பிறகு அந்தப் பெண்ணைத் தனியாக வரவழைத்து கவரிங் நகைகளை வாங்கி கிஃப்ட் கொடுப்பார். அதனால் சம்பந்தப்பட்ட பெண்கள், சூர்யாவை முழுமையாக நம்புவார்கள். கவரிங் நகைகளை பெண்கள் அணியும்போது அவர்கள் அணிந்திருக்கும் ஒரிஜினல் தங்க நகைகளை நைசாக எடுத்துக்கொண்டு சூர்யா எஸ்கேப் ஆகிவிடுவார்.

கைது
கைது
representational image

இன்னும் சில பெண்களிடம் நெருக்கமாக இருந்திருக்கிறார். அதைத் தன்னுடைய செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து அந்தப் பெண்களை மிரட்டி பணமும் பறித்திருக்கிறார். கானத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூர்யாவைக் கைதுசெய்திருக்கிறோம். சூர்யா பயன்படுத்திவந்த சொகுசு காரில் மனித உரிமை ஆர்வலர் என்ற ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருக்கிறது" என்றனர்.

மத்திய உளவுத்துறை காவல் உயரதிகாரியின் மகன், மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு