சென்னை: ஐடி-யில் வேலை; லிவிங் டுகெதர்! - திருமணத்துக்கு `நோ’ சொன்ன காதலனைச் சிறையில் தள்ளிய காதலி

சென்னையில் திருமணத்துக்கு முன்பே கணவன், மனைவியாக வாழ்ந்துவந்த ஐடி ஊழியர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அதனால் காதலனை, காதலி சிறையில் தள்ளியிருக்கிறார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 15-ம் தேதி பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், நானும் அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் (23) என்பவரும் காதலித்தோம். இருவரும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறோம். இந்தச் சமயத்தில் கடந்த மார்ச் மாதம் அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என ஸ்ரீராம் என்னிடம் கூறினார். அதனால் ஸ்ரீராமின் அம்மாவை கவனித்துக்கொள்ள கடந்த மார்ச் மாதம் முதல் ஸ்ரீராமின் வீட்டில் நான் தங்கினேன்.

திருமணத்துக்கு முன்பே நானும் ஸ்ரீராமும் கணவன், மனைவிபோல வாழ்ந்தோம். தற்போது என்னைத் திருமணம் செய்துகொள்ள ஸ்ரீராம் மறுக்கிறார். எனவே, ஸ்ரீராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். காதலி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீராமிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது இருவரும் ஒரே வீட்டில் திருமணத்துக்கு முன்பே கணவன், மனைவிபோல வாழ்ந்தது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீராம் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து அண்ணாநகர் மகளிர் போலீஸார் கூறுகையில், ``ஸ்ரீராமும் அவரின் காதலியும் திருமணத்துக்கு முன்பே லிவிங் டுகெதராக வாழ்ந்துவந்திருக்கின்றனர். அம்மாவை கவனித்துக்கொள்ள ஸ்ரீராம், தன்னுடைய காதலியை வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார். அப்போது திருமணம் செய்துகொள்வதாகக் கூறி காதலியை ஸ்ரீராம் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம் முதல் ஸ்ரீராம் வீட்டில் தங்கியிருந்தாக அந்தப் பெண் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது, ஸ்ரீராமிடம் திருமணம் செய்துகொள்ளும்படி காதலி வற்புறுத்தியிருக்கிறார். ஆனால், ஏனோ ஸ்ரீராம் அவரைத் திருமணம் செய்துகொள்ள மறுத்தத்தோடு, தகராறிலும் ஈடுபட்டிருக்கிறார். இருவர் வீட்டிலும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆனால் சுமுக தீர்வு எட்டப்படாததால், காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகாரளித்தார். விசாரணையிலும் ஸ்ரீராம், காதலியைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதிக்கவில்லை. அதனால்தான் ஸ்ரீராமைக் கைதுசெய்திருக்கிறோம்" என்றனர்.
திருமணத்துக்கு முன்பே ஒன்றாக வாழ்ந்த காதல் ஜோடிக்குள் ஏற்பட்ட தகராறு, காதலனைச் சிறையில் தள்ளியிருக்கிறது.