Published:Updated:

`இந்தச் சோம்பேறியைப் பிடித்து ஜெயிலில் போடுங்க!' - யூடியூப் பார்த்து திருடியவரின் மனைவி ஆவேசம்

திருட்டு வழக்கில் சிக்கிய சக்திவேல்
திருட்டு வழக்கில் சிக்கிய சக்திவேல்

சென்னை கொளத்தூரில் யூடியூப் பார்த்து திருடிய கணவர் போலீஸில் சிக்கியதும் ஆத்திரமடைந்த அவரின் மனைவி, இந்தச் சோம்பேறியைப் பிடித்து ஜெயலில் போடுங்க எனக் கூறியுள்ளளார்.

சென்னை கொளத்தூர், அஞ்சுகம் நகர், மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (53). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். கடந்த 14.3.2020-ல் கோபாலகிருஷ்ணன் வேலைக்குச் சென்றுவிட்டார். அவரின் மனைவி பிற்பகலில் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 45 சவரன் தங்க நகைகள், 48,000 ரூபாய் கொள்ளைபோனது தெரியவந்தது.

சக்திவேலைப் பிடித்த போலீஸ் டீம்
சக்திவேலைப் பிடித்த போலீஸ் டீம்
`கொள்ளையனுக்கு தெரிந்த ஏடிஎம் இயந்திரத்தின் பாஸ்வேர்டு' -கிருமிநாசினி தெளிக்க வந்தவரால் அதிர்ச்சி #Chennai

இதுகுறித்து கோபாலகிருஷ்ணன், கொளத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். உதவி கமிஷனர் அகஸ்டின் பால்சுதாகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சண்முகவேலன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன், தலைமைக் காவலர் எம்ரோஸ் ஆகியோர் விசாரித்தனர். கொள்ளை நடந்த வீட்டின் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது நீலநிறச் சட்டை அணிந்த நபர் அவ்வழியாக நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த நபர், பூட்டிய வீடுகளை நோட்டமிட்டபடியே சென்றார். அதனால் அந்த நபர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து சிசிடிவியின் உதவியோடு அந்த நபர், எங்கு செல்கிறார் என்பதை போலீஸார் கண்காணித்தனர். கொளத்தூரிலிருந்து நடந்தே சென்ற அந்த நபர் ரெட்டைஏரிக்குச் செல்லும் பகுதியிலிருந்து எங்கு சென்றார் என்பதை போலீஸாரால் கண்டறிய முடியவில்லை. இருப்பினும் போலீஸார் அடுத்தடுத்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் நீல நிறச் சட்டை அணிந்த நபரின் இருப்பிடத்தைக் கண்டறிந்தனர். அந்த நபரின் வீட்டுக்குள் சென்ற போலீஸார், வீட்டிலிருந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது அந்த வீட்டிலிருந்தவர்கள் நகைக் கொள்ளை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது எனக் கூறினர்.

சிசிடிவி
சிசிடிவி

இதையடுத்து போலீஸார், அந்தக் குடும்பத்தின் தலைவன் சக்திவேலைப் பிடித்து விசாரணைக்காகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் தான் கூரியர் கம்பெனியில் வேலைபார்க்கிறேன் என்று கூறியதோடு நான் நகை திருடவில்லை என்று அப்பாவிபோல கூறியிருக்கிறார். அதை உண்மை என போலீஸார் முதலில் நம்பினர். ஆனால், சக்திவேலின் நடவடிக்கைகள் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. அதனால், `எல்லா உண்மைகளையும் உன் மனைவி எங்களிடம் கூறிவிட்டார்’ என்று போலீஸார் தெரிவித்ததோடு சிசிடிவி காட்சிகளையும் சக்திவேலிடம் காண்பித்தனர். அதைக் கேட்ட சக்திவேலின் முகம் மாறியது. பின்னர், நகைகளையும் பணத்தையும் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு சக்திவேல் வீட்டில் ஒரு மரப்பெட்டியில் வைத்திருந்த நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தன்னுடைய கணவர் சக்திவேல் திருடன் என்று கேள்விப்பட்டதும் அவரின் மனைவி மற்றும் சக்திவேலின் அம்மா அதிர்ச்சியில் உறைந்ததோடு `இந்தச் சோம்பேறியைப் பிடித்து ஜெயிலில் போடுங்க' என்று ஆவேசமாகக் கூறினர். இதையடுத்து சக்திவேலிடமிருந்து 35 சவரன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். சக்திவேல் முதல் தடவையாக கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால் கோபாலகிருஷ்ணன் வீட்டில் கொள்ளையடிக்கும்போது பதற்றத்தில் சில நகைகளை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்

கொள்ளையடித்த பிறகு சக்திவேல் நடந்தே வீட்டுக்கு வந்துள்ளார். ஊரடங்கால் வேலைக்குச் செல்லாத சக்திவேல், திருடிய பணத்தை குடும்பச் செலவுக்காக செலவழித்துள்ளார். ஆனால், நகைகளை அடகு, விற்க முடியாததால் அதை மனைவி, அம்மாவுக்கு தெரியாமல் வீட்டிலேயே வைத்திருந்துள்ளார். சக்திவேலிடம் போலீஸார் விசாரித்தபோது யூடியூப் மூலம் திருட கற்றுக் கொண்டதாகக் கூறியுள்ளார். ஊரடங்கு நேரத்திலும் சிசிடிவி கேமரா மூலம் சக்திவேலைக் கண்டறிந்த இன்ஸ்பெக்டர் சண்முகவேலன் தலைமையிலான போலீஸாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.

அடுத்த கட்டுரைக்கு