சென்னை பூந்தமல்லி 3-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் மேரி லதா (41). இவர், பூந்தமல்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். கடந்த 2018-ம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் ஓ.எல்.எக்ஸ் என்ற வெப்சைட்டில் வந்த விளம்பரத்தைப் பார்த்து வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். வேலை விஷயமாக கார்த்திக், சந்தோஷ் என இருவர் என்னிடம் போனில் பேசினார்கள்.

அப்போது, `எதற்காக வேலை தேடுகிறீர்கள்?' என்று அவர்கள் என்னிடம் கேட்டனர். அதற்கு நான் `வீடு வாங்கியதில் எனக்கு கடன் இருக்கிறது. அதனால் வேலை தேடுகிறேன்’ என்று கூறினேன். உடனடியாக சந்தோஷ் என்பவர் `வேலை வாங்கித் தருகிறேன். அதோடு உங்களுக்கு லோனும் வாங்கித் தருகிறேன். இஎம்ஐ-யை உங்கள் சம்பளத்திலிருந்தே பிடித்துக்கொள்வோம்’ என்று கூறினார். அதனால் லோன் வாங்க நான் சம்மதித்தேன். அதன் பிறகு லோன் வாங்கி தருவதாகக் கூறி சந்தோஷ், என்னிடமிருந்து 78,000 ரூபாய் வரை பெற்றுக்கொண்டார். அதன் பிறகு சந்தோஷைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் கார்த்திக்கிடம் பேசி, சந்தோஷ் குறித்து விசாரித்தேன். அதற்கு சந்தோஷ் இதயநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதன் பிறகு அவன் இறந்து விட்டதாகவும் கார்த்திக் என்னிடம் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து கார்த்திக்கிடம் லோன் விஷயத்தைக் கூறினேன். உடனே கார்த்திக், சந்தோஷின் பி.எஃப் பணத்தை வாங்கி உங்களிடம் தருகிறேன் என்று கூறினார். அதற்கு சந்தோஷின் பி.எஃப் பணத்தைப் பெற உங்களை வாரிசு என போடுகிறேன் என்று கூறி 70,000 ரூபாய் வரை கார்த்திக் என்னிடம் வாங்கினார். ஆனால் பணம் எனக்கு வரவில்லை. அது குறித்து மீண்டும் கார்த்திக்கிடம் கேட்டதற்கு, சந்தோஷின் பி.எஃப் பணம் வேறு வங்கி கணக்குக்குச் சென்றுவிட்டது. அதனால் அந்தப் பணம் இனிமேல் உங்களுக்குக் கிடைக்காது. சந்தோஷின் அம்மாவிடம் விவரத்தைக் கூறி செக் வாங்கித் தருகிறேன் என்று கார்த்திக் கூறினார். அதற்காக 50,000 ரூபாயை என்னிடமிருந்து கார்த்திக் வாங்கினார். ஆனால், அந்தப் பணமும் எனக்கு வரவில்லை.

பணம் குறித்து மீண்டும் கார்த்திடம் விசாரித்தபோது சந்தோஷின் பெற்றோருக்கு விவரம் தெரிந்து அவர்கள் ஸ்டாப் பேமென்ட் கொடுத்துவிட்டார்கள். அதோடு என்மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டார்கள். அதைச் சரிசெய்ய போலீஸ் அதிகாரிகளுக்கும் வங்கி அதிகாரிகளுக்கும் கொடுக்க வேண்டும் எனக் கூறி கொஞ்சம் கொஞ்சமாக 1,50,000 ரூபாய் வரை கார்த்திக் வாங்கினார். அதன் பிறகு தன்னுடைய வீட்டின் பத்திரத்தைக் கொண்டு என்னிடம் வாங்கிய பணத்தைத் திரும்பத் தருவதாக கார்த்திக் கூறினார். வீட்டுப் பத்திரத்தை அடகு வைப்பதாகக் கூறி 12,00,000 ரூபாய் வரை கார்த்திக் என்னிடம் வாங்கினான். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஏமாற்றி 20 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிவிட்டனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
புகாரின்பேரில் பூந்தமல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர்தான் மேரிலதாவை ஏமாற்றினார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சந்தோஷ்குமார், இன்ஜினீயராகப் பணியாற்றிவருகிறார். கொரோனா காலம் என்பதால் வீட்டிலிருந்தே அவர் வேலை செய்துவந்திருக்கிறார். அப்போதுதான் இணையதளம் மூலம் மேரிலதாவின் வேலைக்கான விண்ணப்பத்தைப் பார்த்த சந்தோஷ்குமார் அவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியிருக்கிறார்.

சந்தோஷ்குமார் இணையதள சூதாட்டத்துக்கு அடிமையானவர். அதனால், அந்த விளையாட்டு மூலம் அவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருக்கிறார். இவர், பகுதி நேரமாக வீடுகளுக்கு பால் பாக்கெட்டுகளை விநியோகம் மற்றும் உணவு டெலிவரி ஆகிய வேலைகளைச் செய்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்த வருமானத்தையும் இணையதள சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். அதனால்தான் மேரி லதாவிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கார்த்திக், அரவிந்தன் என்ற பெயர்களில் போனில் பேசி பணத்தை ஏமாற்றியிருக்கிறார். தற்போது சந்தோஷ்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது"என்றனர்.