Published:Updated:

`பெண்கள் கழிவறையை வீடியோ எடுத்தார்!' -மாணவியின் புகாரால் சிக்கிய சென்னை ஐஐடி பேராசிரியர்

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி கழிவறையில் செல்போன் மூலம் வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் உதவிப் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐஐடி-யில் தங்கி பி.ஹெச்டி படித்துவரும் 30 வயது மாணவி ஒருவர், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், `சம்பவம் நடந்த அன்று நான் ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் கழிவறைக்குச் சென்றபோது, யாரோ ஒருவர் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுப்பதைப் பார்த்தேன்.

உடனே அந்த நபர் யாரென்று நான் ரகசியமாகக் கண்காணித்தபோது, அது ஐஐடி-யில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் எனத் தெரிந்தது. எனவே, சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கோட்டூர்புரம் போலீஸார், ஐஐடி-க்குச் சென்று விசாரித்தனர்.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி
`ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..!' - மனைவியின் இறுதி அஞ்சலியில் கதறிய சென்னை ஐஐடி பேராசிரியர்

மேலும், மாணவி குறிப்பிட்ட பேராசிரியரிடம் போலீஸார் கழிவறையில் வீடியோ எடுத்தது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது அவர், `நான் யாரையும் வீடியோ எடுக்கவில்லை' என்று கூறினார். இதையடுத்து போலீஸார் அந்தப் பேராசிரியரின் செல்போனைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது கழிவறைக்குள் மாணவிகள் செல்லும்போது எடுக்கப்பட்ட சில படங்கள் இருந்தன. அதுதொடர்பாக அந்தப் பேராசிரியரிடம் போலீஸார் விசாரித்தனர். அதன்பிறகு அவரைக் கோட்டூர்புரம் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் கூறுகையில், ``ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபம் பானர்ஜி (26). இவர், சென்னை ஐஐடி தொழிற்நுட்பக் கல்லூரியில் வானூர்தி பொறியியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவர், ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சுபம் பானர்ஜி மீது மாணவி அளித்த புகாரின்பேரில் அவரிடம் விசாரித்தபோது அவரின் செல்போனில் கழிவறைக்குள் பெண்கள் செல்லும் முக்கியமான வீடியோக்கள், படங்கள் அழிக்கப்பட்டிருந்தன. ஒருசில படங்கள் மட்டுமே செல்போனில் இருந்தன.

சுபம் பானர்ஜி
சுபம் பானர்ஜி

அதன்அடிப்படையில் சுபம் பானர்ஜியைக் கைது செய்துள்ளோம். தொடர்ந்து அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். அதன்பிறகுதான் சுபம் பானர்ஜியின் சுயரூபம் தெரியவரும்" என விவரித்தவர்கள்,

`ரிங் மட்டும் போகிறது; போனை எடுக்கவில்லை'- குறைவான மதிப்பெண்ணால் சென்னை ஐஐடி மாணவி தற்கொலை?

``சம்பவம் நடந்த அன்று அந்த மாணவி, கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது சுவரின் துளை வழியாக ஒருவர், செல்போனில் வீடியோ எடுப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். சத்தம் போடாமல் அமைதியாக வெளியில் வந்த அந்த மாணவி, யார் வீடியோ எடுக்கிறார் என்பதை ரகசியமாகப் பார்த்துள்ளார். அப்போது ஆண்கள் கழிவறை வழியாக ஐஐடியில் உதவிப் பேராசிரியர் மற்றும் திட்ட அலுவலராகப் பணியாற்றும் சுபம் பானர்ஜி, செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.

சுபம் பானர்ஜி
சுபம் பானர்ஜி

இதையடுத்து அந்த மாணவி, ஊழியர்களிடமும் மாணவர்களிடமும் விவரத்தைக் கூறி அங்கு அழைத்துவந்துள்ளார். சுபம் பானர்ஜி, தப்பிச் செல்லாமல் இருக்க கழிவறையின் கதவையும் முன்னெச்சரிக்கையாகப் பூட்டி விட்டு சென்றிருந்தார் மாணவி. அதனால் சுபம் பானர்ஜியால் வெளியில் வர முடியவில்லை.

இதையடுத்து ஊழியர்கள், மாணவர்கள் கதவைத் திறந்து சுபம் பானர்ஜியை வெளியில் அழைத்துவந்து விசாரித்தனர். அதன்பிறகுதான் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். பெண்ணை உள்நோக்கத்துடன் மானபங்கப்படுத்துதல் என்ற பிரிவின்கீழ் சுபம் பானர்ஜி மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். கைதான அவர் எம்.டெக் முடித்துள்ளார்" என்கின்றனர்.

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிகளின் கழிவறையில் பேராசிரியர் ஒருவர் செல்போனில் வீடியோ, படங்களை ரகசியமாக எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியர் சுபம் பானர்ஜி மீது ஐஐடி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி பாத்திமா தூக்குப் போட்டு தற்கொலை செய்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் மாணவிகளின் கழிவறையில் வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் வடமாநில உதவிப் பேராசிரியர் சிக்கியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு