Published:Updated:

முதல் கொலையைக் கண்டுபிடிக்கல; அந்தத் தைரியத்தில் அடுத்த கொலை! - சென்னை மநீம நிர்வாகியின் பின்னணி

கொலை வழக்கில் கைதான சேவியர்
கொலை வழக்கில் கைதான சேவியர்

முதல் கொலையை போலீஸார் கண்டுபிடிக்காத தைரியத்தில் தங்கச் செயினுக்காக அடுத்த கொலையைச் செய்துள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி சேவியர் அருள்.

சென்னை சித்தாலப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்துவருபவர் அந்தோணி ஜெயராஜ். இவர், கடந்த 7-ம் தேதி பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``என்னுடைய தம்பி ஹென்றி ஜெயசிங் (33). சித்தாலபாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த 5 மாதங்களாக வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். சிவில் இன்ஜினீயரிங் படித்துள்ளார். தனியார் லிப்ட் கம்பெனியில் பார்ட்னராக இருந்து தொழில் செய்துவந்தார்.

மூத்த மகளைக் கொலை செய்த தாய் - 2வது குழந்தையின் கருக்கலைந்ததும் விபரீத முடிவு
கொலை செய்யப்பட்ட ஹென்றி ஜெயசிங்
கொலை செய்யப்பட்ட ஹென்றி ஜெயசிங்

அவருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் செய்த ஒருமாத்துக்குப் பிறகு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதனால் ஹென்றி ஜெயசிங், விவாகரத்து கேட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தநிலையில் ஹென்றி ஜெயசிங், கடந்த 5.3.2020- ல் இரவு 10 மணியளவில் வீட்டை விட்டுச் சென்றவர். பின்னர் திரும்பி வரவில்லை. 7.3.2020-ம் தேதி காலை 7 மணியளவில் ஹென்றி ஜெயசிங் பெரும்பாக்கம் ஏரியில் கிழக்குப்பக்கம் உள்ள வரதாபுரம் அருகே தண்ணீரில் கவிழ்ந்த நிலையில் இறந்துகிடப்பதாகத் தகவல் தெரிந்து நானும் அங்கு சென்று பார்த்தேன். எனவே, தம்பியின் மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர். ஜெபசிங் வழக்குப்பதிந்து விசாரித்தார்.

பெரும்பாக்கம் ஏரியில் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ம் தேதி இளம்பெண்ணின் சடலம் மிதந்தது. அவரின் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பெரும்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ஹரிகரன், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ``பெரும்பாக்கம் ஏரி, வள்ளுவர்நகர் பின்புறத்தில் இளம்பெண்ணின் சடலம் மிதப்பதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அந்தப் பெண் பிங்க் நிற லெகின்ஸ், சிமென்ட் கலரில் பிங்க் மற்றும் ப்ளு நிற டிசைன் போட்ட முழுக்கை சட்டையும் (டாப்ஸ்) அணிந்துள்ளார். பச்சை நிற நைலான் கயிற்றால், அவரின் கழுத்து, தொடை, கால் பகுதி சுற்றப்பட்டிருந்தது. எனவே, சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அழகு வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவந்தார்.

பிங்க் நிற பேன்ட்; மூக்குத்தி! - பெரும்பாக்கம் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்
இளம்பெண் எப்ஐஆர்
இளம்பெண் எப்ஐஆர்

பெரும்பாக்கம் ஏரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மீட்கப்பட்ட இளம்பெண் குறித்து எந்தத் தகவலும் பள்ளிக்கரணை போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. இந்தச் சமயத்தில்தான் 2020 மார்ச் 7-ம் தேதி ஹென்றி ஜெயசிங் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த பரங்கிமலை துணை கமிஷனர் கே.பிரபாகர் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் அழகு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் ஏரி பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஹென்றி ஜெயசிங் மற்றும் சிலர் ஏரிக்கரை பகுதிக்கு ஆட்டோவில் வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. ஆட்டோவின் பதிவு நம்பர் மூலம் போலீஸார் விசாரித்தபோது அந்த ஆட்டோ மேடவாக்கம், ராமைய்யா நகர், நேரு தெருவைச் சேர்ந்த சேவியர் அருளுக்குச் (45) சொந்தமானது எனத் தெரியவந்தது.

இதையடுத்து சேவியர் அருளிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸார் கூறுகையில், ``சம்பவத்தன்று டாஸ்மாக் பாரில் சேவியர் அருள், அவரின் நண்பர் பெரும்பாக்கம் வனத்துறை குடியிருப்பு 10-வது தெருவைச் சேர்ந்த அமுல்ராஜ் (32) ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது அந்தப் பாருக்கு ஹென்றி ஜெயசிங் வந்துள்ளார். அவரின் கழுத்தில் தங்கச் செயின் அணிந்துள்ளார். அதைப்பார்த்ததும் ஹென்றி ஜெயசிங்கின் தங்கச் செயினைப் பறிக்க சேவியர் அருள், அமுல்ராஜ் ஆகியோர் திட்டமிட்டனர்.

அமுல்ராஜ்
அமுல்ராஜ்

இதையடுத்து இருவரும் ஹென்றி ஜெயசிங்கிடம் ஏரிக்கரைக்குச் சென்று மதுஅருந்தலாம் என்று கூறியுள்ளனர். அதற்கு ஹென்றியும் சம்மதித்துள்ளார். பின்னர் மூன்று பேரும் ஆட்டோவில் ஏரிக்கரைக்குச் சென்றுள்ளனர். அங்கு மது அருந்தியபோது ஹென்றியிடம் தங்கச் செயின் எத்தனை சவரன், எங்கு வாங்கியது போன்ற விவரங்களைக் கேட்டுள்ளனர். சேவியர் அருள், அமுல்ராஜின் பேச்சு, தங்கச் செயின் மீதே இருந்ததால் அங்கிருந்து செல்ல ஹென்றி முயற்சி செய்துள்ளார். அப்போது ஹென்றியின் தங்கச் செயினை சேவியர் அருள், அமுல்ராஜ் சேர்ந்து பறித்ததோடு ஹென்றியைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் ஆட்டோவில் தப்பிச் சென்றுவிட்டனர்.

சிசிடிவி உதவியால் சேவியர் அருள், அமுல்ராஜ் ஆகியோரை கைது செய்து ஆட்டோவைப் பறிமுதல் செய்துள்ளோம். சேவியர் அருளிடம், ஏதேச்சையாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி விசாரித்தோம். அப்போது அவரின் முகம் மாறியது. அதைக் கவனித்த போலீஸ் உயரதிகாரி ஒருவர், தொடர்ந்து சேவியர் அருளிடம் அந்தப் பெண் குறித்து விசாரித்தார். அப்போது அந்தப் பெண்ணையும் கொலை செய்ததைப் போதையில் உளறினார் ஆட்டோ டிரைவரான சேவியர் அருள்" என்றனர்.

ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்
ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்

நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``ஹென்றி ஜெயசிங் கொலை தொடர்பாக சேவியர் அருளிடம் விசாரித்தபோது மூன்று மாதங்களுக்கு முன் இதே ஏரியில் எனது மகன் மைக்கேல் விஜய்யுடன் சேர்ந்து நான் ஒரு பெண்ணைக் கொலை செய்தேன் என்ற தகவலைக் கூறினார். அதுகுறித்து விசாரித்தபோது அந்தப் பெண்ணின் பெயர் சபானா (23). திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்த சபானா, சிலரின் உதவியால் மேடவாக்கத்தில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. சேவியர் அருளின் மகன் மைக்கேல் விஜய், ஓட்டிவரும் ஆட்டோவில் சபானா பயணித்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மலர்ந்துள்ளது.

இருவரும் நெருங்கிப் பழகியதில் சபானா, கர்ப்பமடைந்துள்ளார். அதனால் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி மைக்கேல் விஜய்யிடம் வற்புறுத்தியுள்ளார். இந்தத் தகவல் சேவியருக்குத் தெரிந்ததும் கருவைக் கலைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், கருவைக் கலைக்க முடியவில்லை. இதையடுத்து சபானாவின் குடும்பப் பின்னணியைத் தெரிந்து கொண்டபிறகு அவளைக் கொலை செய்ய சேவியர், மைக்கேல் விஜய் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். அதனால், கடந்த 20.11.2019-ல் மைக்கேல் மூலம் சபானாவை ஏரிக்கரைக்கு அழைத்து வரக்கூறியுள்ளார் சேவியர். ஏரிக்கரைக்கு சபானா வந்ததும் அவளிடம் என் மகனை விட்டுவிட்டு எங்காவது செல்லும்படி சேவியர் கூறியுள்ளார்.

மைக்கேல் விஜய்
மைக்கேல் விஜய்

ஆனால், அதை சபானா கேட்கவில்லை. அதனால் ஆத்திரமடைந்த சேவியரும் மைக்கேலும் சேர்ந்து ஆட்டோவிலிருந்த நைலான் கயிற்றால் சபானாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், சபானாவின் சடலத்தை ஏரியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ஹென்றி கொலை வழக்கில் சிக்கிய சேவியர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சபானா வழக்கில் துப்பு துலங்கியது. இதையடுத்து சபானா கொலை வழக்கில் சேவியர், அவரின் மகனான ஆட்டோ டிரைவர் மைக்கேல் விஜய் ஆகியோரை கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட சேவியர், சோளிங்கநல்லூர் பகுதியின் மக்கள் நீதி மய்யத்தில் நிர்வாகியாக உள்ளார்" என்றார்.

சபானாவைக் கொலை செய்தபிறகு சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த சேவியர் அருள், தங்கச் செயினுக்காக அடுத்த கொலையைச் செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு