Published:Updated:

சென்னை: ஆபாசப் படங்களை பரப்புவேன் என மனைவியை மிரட்டிய மதபோதகர் - அதிர்ச்சிப் பின்னணி

மதபோதகர் பால் சாமுவேல் தாமஸ்
மதபோதகர் பால் சாமுவேல் தாமஸ்

மதபோதகரான தனது கணவரின் செல்போனில் பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இருப்பதாக அவரின் மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

சென்னை, பெசன்ட்நகரைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரிப் பெண் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். அவர் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ‘‘1.12.2008-ம் ஆண்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் எனக்கு திருமணம் நடந்தது. எனது கணவர் பெயர் பால் சாமுவேல் தாமஸ் (40). எங்களுக்கு 12 வயதில் மகன் உள்ளான். திருமணத்தின்போது எனக்கு 120 சவரன் தங்க நகைகளும் எனது கணவருக்கு 15 சவரன் தங்கச் செயினும் 6 சவரனில் தங்க கை செயினும் ஒரு லட்சம் மதிப்புள்ள ரேடோ வாட்ச், 75,000 ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், 12 லட்சம் ரூபாயில் சொகுசு காரும் வரதட்சணையாக கொடுத்தனர். இதுதவிர 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருள்களும் கொடுத்தனர். மொத்தம் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.

பால் சாமுவேல் தாமஸ்
பால் சாமுவேல் தாமஸ்

எனது பெற்றோர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். அதனால் திருமணத்துக்குப்பிறகு அவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று விட்டனர். திருமணத்தின்போது எனது கணவர் மதபோதகராக இருப்பதாகவும் என்னை நல்ல முறையில் வைத்திருப்பேன் என பெற்றோரிடம் உறுதியளித்தார். ஆனால், நான் கர்ப்பமாக இருந்தபோது தனது தங்கையின் திருமணத்துக்காக என்னுடைய பெற்றோரிடம் 35 சவரன் நகைகளை வற்புறுத்தி வாங்கிக் கொண்டார். அதன்பிறகு மாதந்தோறும் என்னுடைய பெற்றோரிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கும்படியும் இல்லையென்றால் நான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று என் கணவர் கூறினார். அதனால் நான் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

Vikatan

குடும்பத்துடன் 2014-ம் ஆண்டு சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் குடியிருந்தோம். அப்போது சென்னையில் தனக்கு விவிஐபி-க்கள் அறிமுகமாகியிருப்பதால் அவர்களுக்கு கிரிக்கெட் கோச்சிங் கொடுக்கப்போவதாக என் கணவர் என்னிடம் கூறினார். அதனால் வீட்டு வேலைக்கும் குழந்தையை கவனிப்பதற்காகவும் அவருக்கு தங்கை உறவு முறை கொண்ட பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்தார். 2018-ம் ஆண்டு அந்தப் பெண்ணுடன் என் கண் முன்பே என் கணவர் தனிமையில் இருந்தார். அதை நான் தட்டிக்கேட்டபோது நீ கருப்பாக இருக்கிறாய் அவள்தான் அழகாக இருக்கிறாள் என்று கூறி எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தினார்.

பால் சாமுவேல் தாமஸ்
பால் சாமுவேல் தாமஸ்

மேலும் என்னுடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி அந்தப் பெண்ணுக்கு நகைகள் மற்றும் அவளுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்தார். மேலும் அந்தப் பெண்ணுடன் என் கணவர் பழகுவதை நான் கண்டித்தேன். அதனால் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அப்போது அந்தப் பெண் `நீ இருக்கும் வரை என்னால் நிம்மதியாக இருக்க முடியாது’ என்று சொல்லி என்னை அடித்தார். அதை என் கணவர் தடுக்காமல் இவளைக் கொன்றால்தான் சொத்துக்களை விற்க முடியும் என்று கூறியதோடு சில வெற்று தாள்களில் கையெழுத்து போடும்படி மிரட்டினார். அதோடு நீயும் நானும் தனிமையில் இருந்தபோது உனக்கு தெரியாமல் எனது செல்போனில் வீடியோ, படம் எடுத்து வைத்துள்ளேன். என்னைப்பற்றி வெளியில் சொன்னால் மனைவி என்று கூட பார்க்காமல் உன் ஆபாச படங்களை இணையத்தளத்தில் பரப்பி உன் மானத்தை வாங்கி விடுவேன் என்று மிரட்டத் தொடங்கினார். அதனால் நான் அதிர்ச்சியடைந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேலைக்கார பெண் உள்பட பல பெண்களுடன் என் கணவருக்கு பழக்கம் இருக்கிறது. நான் சைதாப்பேட்டை வீட்டிலிருந்து வெளியேறியபோது என்னிடம் மீதமிருந்த 45 சவரன் தங்க நகைகள், கார், இருசக்கர வாகனம் அனைத்தையும் பறித்துக் கொண்டார். தற்போது அந்தப் பெண்ணுடன் சைதாப்பேட்டையில் குடியிருந்து வருகிறார். அந்தப் பெண் கர்ப்பமடைந்திருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்த நான் எனது கணவரிடம் விவகாரத்து கேட்ட போது, என் அப்பா, அம்மா பெயரில் நெல்லையில் உள்ள நிலங்கள் மற்றும் தனியாக 50 ரூபாய் லட்சம் தந்தால் விவகாரத்து தருகிறேன் என தெரிவித்தார்.

கைது
கைது

மேலும் என் கணவர் எனது பெற்றோர் பெயரில் உள்ள நிலங்களை அபகரிக்க போலியான ஆவணங்களை தயாரித்து வைத்து கொண்டு என் அம்மாவின் பெயரில் உள்ள சொத்தான பாளையங்கோட்டை, டீச்சர்ஸ் காலனியில் உள்ள இடத்தை போலி கிரைய ஒப்பந்தம் தயார் செய்து ரூ. 12 லட்சம் அட்வான்ஸ் தொகை பெற்று, அதில் எனது அம்மாவின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி செய்துள்ளார். மேலும் என் அப்பா பெயரில், பாளையங்கோட்டை பொன்னாகுடி கிராமத்தில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் ஒரு போலியான கிரைய ஒப்பந்தம் செய்து அதில் என் அப்பாவின் கையெழுத்து மற்றும் எனது கையெழுத்தையும் போலியாக போட்டு, சுமார் 1 கோடி மதிப்பிலான இடத்தை விற்க முயற்சி செய்து அதற்கு அட்வான்ஸ் தொகையாக எனது அப்பா ரூ. 8 லட்சம் வாங்கியது போல் போலி ஆவணம் தயார் செய்து உள்ளார். எனவே என் கணவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார். அவரது மேற்பார்வையில் மயிலாப்பூர் துணைக்கமிஷனர் சஷாங்சாய், உதவி கமிஷனர் நெல்சன், இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி, எஸ்.ஐ சோபியா ஆகியோர் விசாரணை நடத்தினர். இதையடுத்து பால் சாமுவேல் தாமஸ், வேலைக்கார பெண் ஆகியோர் மீது 498 ஏ (வரதட்சணை கொடுமை), 406 (நம்பிக்கை மோசடி), 465, 471 (போலி ஆவணம் தயாரித்தல்), 468 (ஏமாற்றும் செய்யும் நோக்கத்துடன் செயல்படுதல்), 324 (ஆயுதம் கொண்டு காயம் ஏற்படுத்துதல்), 506 (2) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பால் சாமுவேல் தாமஸை போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து வேலைக்கார பெண்ணிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எப்ஃஐஆர்
எப்ஃஐஆர்

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ``கைதான பால் சாமுவேல் தாமஸ், திருமணத்துக்குப்பிறகு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். மேலும் அவர் மதபோதகராக இருப்பதாக கூறியது பொய் என அவரின் மனைவி குடும்பத்தினருக்கு தெரியவந்திருக்கிறது. வரதட்சணையாக கொடுத்த நகைகளை விற்று வந்திருக்கிறார். பால் சாமுவேல் தாமஸின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரின் மனைவி, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அப்போது பால் சாமுவேல் தாமஸ் தப்பிவிட்டார். அதன்பிறகும் அவரின் டார்ச்சர் தாங்க முடியாத அவரின் மனைவி, கமிஷனரைச் சந்தித்து புகாரளித்திருக்கிறார். பால் சாமுவேல் தாமஸின் செல்போனை ஆய்வு செய்து வருகிறோம். பால் சாமுவேல் தாமஸிடம் பேசுபவர்களை எளிதில் மூளைச் சலவை செய்துவிடுவார்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு