Published:Updated:

`என்னைக் கொன்றுவிட்டு சந்தோஷமாக வாழு என்றாள்!' - மனைவியைக் கொலை செய்த கணவன்

கொலை செய்யப்பட்ட திலகம்
கொலை செய்யப்பட்ட திலகம்

மனைவியைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸாரிடம், `அவள்தான் என்னைக் கொன்றுவிட்டு சந்தோஷமாக வாழு என்றாள்' என்று கணவர் கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த மதுரவாயல், கன்னியப்ப முதலி தெருவைச் சேர்ந்தவர் டிரைவர் ஜெயவேல் (38). இவர் சொந்தமாக சரக்கு வாகனத்தை வைத்துள்ளார். இவரின் மனைவி திலகம் (37). இவர், நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்துவந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்துவருகின்றனர்.

கொலை நடந்த வீடு
கொலை நடந்த வீடு

இந்தநிலையில் கடந்த 25-ம் தேதி திலகம், தற்கொலை செய்துகொண்டதாக மதுரவாயல் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லத்துரை, வேல்ராஜ் மற்றும் போலீஸார் சென்றனர். திலகத்தின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திலகம் மரணம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், டிரைவர் ஜெயவேலிடம் விசாரித்தார்.

அப்போது, அவர் வீட்டுக்குப் புதியதாக வாஷிங் மெஷின் வாங்கி வந்தேன். அது, திலகத்துக்குப் பிடிக்கவில்லை. அதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதன்காரணமாக மனமுடைந்த திலகம், புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று போலீஸாரிடம் கூறினார். திலகம் தற்கொலை செய்துகொண்ட புடவையையும் ஆதாரமாக ஜெயவேல் காட்டினார். இந்தநிலையில் திலகத்தின் கழுத்திலும் முகத்திலும் ரத்தக் காயங்கள் இருந்தன. இவை, போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.

கொலை நடந்த வீடு
கொலை நடந்த வீடு

மேலும், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டவர்களின் உடலில் நிகழும் மாற்றங்கள் திலகத்தின் சடலத்தில் ஏற்படவில்லை. அதனால், சந்தேகம் அடைந்த போலீஸார் ஜெயவேலிடம் விசாரித்தனர். அதற்குத் திலகத்தின் கால் தரையில் தொட்டப்படி இருந்தது. தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த அவளை நான்தான் கீழே இறக்கினேன் என்று ஜெயவேல் கூறினார்.

இருப்பினும் போலீஸாரின் சந்தேகம் குறையவில்லை. இதையடுத்து ஜெயவேலிடம், திலகத்தின் சடலத்தை ஒரே ஆளாக எப்படி கீழே இறக்கினாய் என்று கேள்வி கேட்டனர். அதற்கு ஜெயவேல், முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். இதனால், ஜெயவேல் மீதான சந்தேகம் போலீஸாருக்கு வலுத்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது திலகத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதனால் போலீஸார், ஜெயவேலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரித்தபோது மனைவியை எதற்காகக் கொலை செய்தேன் என்ற தகவலை தெரிவித்துள்ளார்.

ஜெயவேல்
ஜெயவேல்

இதுகுறித்து போலீஸார் நம்மிடம்,``தூக்குப்போட்டு திலகம் தற்கொலை செய்துகொண்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் விசாரணை நடத்தினோம். அப்போதுதான் திலகத்தின் கழுத்து, முகம் ஆகியவற்றில் காயங்கள் இருந்தன. தூக்குப்போட்டு தற்கொலை செய்திருந்தால் முகத்திலும் கழுத்திலும் இந்தளவுக்கு காயங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. அதனால், திலகத்தின் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதுதொடர்பாக சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்த டாக்டரிடமும் கலந்து ஆலோசித்தோம்.

திலகத்தின் சடலத்தில் குறிப்பாக, கழுத்தில் சேலையால் இறுக்கிய தடயங்கள் இருந்தன. மேலும், முகத்தில் தலையனையால் அமுக்கியிருப்பதையும் டாக்டர் உறுதிப்படுத்தினார். அதுதொடர்பாகத் திலகத்தின் கணவர் ஜெயவேலிடம் விசாரித்தபோது, அவரின் பதில்கள் முன்னுக்குப் பின் முரணாகவே இருந்தன. அதனால் ஜெயவேலிடமும் திலகத்தின் குழந்தைகள், உறவினர்கள் ஆகியோரிடமும் விசாரித்தோம். அப்போதுதான் ஜெயவேலின் இன்னொரு முகம் எங்களுக்குத் தெரிந்தது.

தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவோர்களுக்கு நிகழும் உடல் மாற்றங்கள் திலகத்தின் சடலத்தில் ஏற்படவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் ஜெயவேலிடம் விசாரித்தனர்.
கொலை நடந்த வீடு
கொலை நடந்த வீடு

திலகத்துக்கும் ஜெயவேலுக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தத் தம்பதியினர் இன்னொரு இடத்தில் குடியிருந்துள்ளனர். அப்போது திலகத்தின் தோழி ஒருவர் அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார். அதனால் அந்தத் தோழிக்கும் ஜெயவேலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்விளைவு ஜெயவேல் ஓட்டிவரும் மினி லாரியின் கண்ணாடியில் திலகத்தின் பெயரோடு அந்தப் பெண்ணின் பெயரையும் எழுதி வைத்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 25-ம் தேதி காலை முதல் திலகத்துக்கும் ஜெயவேலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திலகம், `என்னைக் கொன்றுவிட்டு அவளோடு சந்தோஷமாக வாழு' என்று ஆத்திரத்தில் கூறியுள்ளார். பின்னர், வீட்டைவிட்டு வெளியில் சென்ற ஜெயவேல், மது அருந்தியுள்ளார். வீடு திரும்பிய பிறகும் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஜெயவேல், மனைவி திலகத்தின் கழுத்தை நெரித்துள்ளார். அப்போது, திலகம், `என்னைக் கொலை செய்துவிடு' என்று சத்தம் போட்டுள்ளார்.

`கொலை செய்ய பயன்படுத்திய பைக்; கட்டில்!'- ஆதாரத்துக்காக கேரளாவிலிருந்து நீலகிரி வந்த போலீஸ்

அதனால், தலையணையை எடுத்து திலகத்தின் முகத்தில் வைத்து அமுக்கியுள்ளார். இதில் மூச்சுத்திணறி திலகம் இறந்துள்ளார். அப்போது, திலகம் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை என்று ஜெயவேல் கூறினார். திலகம் இறந்த பிறகும் அவரின் சேலையால் கழுத்தை நெரித்துள்ளார் ஜெயவேல். பின்னர்தான், திலகம் தற்கொலை செய்துகொண்டதுபோல நாடகமாடியுள்ளார். திலகத்தின் தோழியிடமும் போலீஸார் விசாரித்தபோது அதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்" என்றார்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு திலகத்தின் சடலம், அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்பா சிறைக்குச் சென்றுவிட்டார். அம்மா உயிரோடு இல்லை. உறவினர்கள் வீட்டில் திலகத்தின் குழந்தைகள் உள்ளனர். திலகத்தின் தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மதுரவாயல் போலீஸார் மாற்றியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு