Published:Updated:

சென்னை: `உன் பெற்றோரிடம் சொல்லட்டுமா?'- மாணவியின் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்

மாணவி தற்கொலை வழக்கில் கைதான குணசீலன்
மாணவி தற்கொலை வழக்கில் கைதான குணசீலன்

சென்னையில் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் வழக்கில் இளைஞர் ஒருவர் சிக்கியிருக்கிறார். அவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ் இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை, தரமணியைச் சேர்ந்தவர் கண்ணன் (பெயர் மாற்றம்). இவரின் 14 வயது மகள், அந்தப் பகுதியிலுள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவந்தார். இவர், கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தரமணி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாணவியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

  தற்கொலை
தற்கொலை
Representational Image

மகள் இறந்த துக்கத்தில் கண்ணனின் குடும்பம் சோகத்தில் மூழ்கியது. போலீஸ் விசாரணையின்போது ``என்னுடைய மகள் எதற்காகத் தற்கொலை செய்துகொண்டாள் என்று தெரியவில்லை’’ என்று கண்ணன் கண்ணீர்மல்கக் கூறினார். மேலும், ``என் மகளின் மரணத்தில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. அதைக் கண்டுபிடியுங்கள்’’ என்று போலீஸாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து துணை கமிஷனர் விக்ரமனுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், மாணவியின் தற்கொலை வழக்கைத் தூசிதட்டி எடுக்க உத்தரவிட்டார். அதோடு மாணவியின் தோழிகள், அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை நடத்தும்படி தரமணி போலீஸாருக்கு துணை கமிஷனர் தெரிவித்தார். அதனால் உதவி கமிஷனர் ரவி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், மாணவியின் தற்கொலை வழக்கை விசாரிக்கத் தொடங்கினர்.

தற்கொலை
தற்கொலை
Representational image

மாணவியின் அம்மாவிடம் விசாரித்தபோது, ``என் மகள் இறப்பதற்கு முன்னர் என் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் `உன் பெற்றோரிடம் சொல்லட்டுமா' என்று குறிப்பிடப்பட்டிருந்தது’’ என்றார். அந்த எஸ்.எம்.எஸ் அனுப்பியது யாரென்று போலீஸார் விசாரித்தபோது, கண்ணனின் வீட்டில் குடியிருந்த 31 வயதான குணசீலன் என்பவர்தான் அது என்று தெரியவந்தது. மாணவி இறந்த பிறகு குணசீலன், அந்த வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டார் என்ற தகவலும் போலீஸாருக்குக் கிடைத்தது.

மாணவியின் தற்கொலைக்கும் குணசீலனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் தரமணி போலீஸாருக்கு ஏற்பட்டது. குணசீலனின் முகவரியைக் கண்டுபிடித்த போலீஸார், அவரிடம் விசாரித்தனர். அப்போது குணசீலன், ``இறந்துபோன மாணவி என்னை `அண்ணன்...’ என்று பாசமாக அழைப்பாள். அவள் என்னுடைய உடன்பிறவா சகோதரி...’’ என்று கூறியிருக்கிறார். அதை உண்மையென நம்புவதுபோல நடித்த போலீஸார், குணசீலனின் செல்போன் நம்பரிலிருந்து அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் விவரங்களை ரகசியமாகச் சேகரித்தனர். அப்போது மாணவியின் அம்மா காட்டிய எஸ்.எம்.எஸ்-ஐ அனுப்பியது குணசீலன்தான் என்பது உறுதியானது.

மாணவி தற்கொலை
மாணவி தற்கொலை
Representational Image

அதன் பிறகு மீண்டும் குணசீலனிடம் போலீஸார் விசாரித்தபோது, ``நான் அப்படிப்பட்டவன் இல்லை’’ என்றும், ``வேண்டுமென்றால் நீங்களே என்னுடைய செல்போனை ஆய்வு செய்து பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்றும் கூறியிருக்கிறார். அந்த சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த போலீஸார், குணசீலனின் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் பழைய தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தன. அது போலீஸாருக்கு சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

இதையடுத்து, குணசீலனின் செல்போன், சைபர் க்ரைம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சைபர் க்ரைம் போலீஸார், செல்போனில் அழிக்கப்பட்ட படங்கள், வீடியோக்கள், எஸ்.எம்.எஸ்கள் என அனைத்தையும் சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி திரும்ப எடுத்தனர். அப்போது தற்கொலை செய்துகொண்ட மாணவியுடன் குணசீலன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்கள், வீடியோக்கள் இருந்தன. மேலும், மாணவியின் ஆபாச போட்டோக்களும் வீடியோக்களும் இருந்ததைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

ஆபாசப் படம்
ஆபாசப் படம்
representational image

இந்தத் தகவல் போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர்களின் உத்தரவின்பேரில் குணசீலனைப் பிடிக்க போலீஸார் சென்னையிலுள்ள அவரின் வீட்டுக்குச் சென்றனர். ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார். குணசீலன், கோவைப் பகுதியில் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற போலீஸார் அவரைப் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போதும் மாணவி, தன்னுடைய தங்கை என்ற ரேஞ்சில் குணசீலன் பேசியிருக்கிறார். உடனே, போலீஸார் தங்களிடமிருந்த ஆதாரங்களை குணசீலனிடம் காண்பித்தார்கள். அவர் அதிர்ச்சிக்குள்ளானார்.

அதன் பிறகே உண்மையைச் சொல்லத் தொடங்கினார். மாணவியின் அம்மாவும் அப்பாவும் வேலைக்குச் சென்றுவிடுவார்கள். அதனால், பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் மாணவி, மாலை நேரத்தில் டியூஷனுக்கு சென்று வந்திருக்கிறார். அப்போது குணசீலன், மாணவியை டியூஷனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். தனியாக மாணவி வீட்டில் இருக்கும்போது குணசீலன், அவரிடம் அன்பாகப் பழகியிருக்கிறார். இந்தப் பழக்கம் நாளடைவில் மாணவிமீது குணசீலனுக்கு ஒருதலைக் காதலாக மாறியிருக்கிறது. மாணவியிடம் ஆசைவார்த்தை கூறிய குணசீலன், அவருடன் நெருக்கமாகப் பழகியிருக்கிறார். அதைத் தன்னுடைய செல்போனில் ரகசியமாக வீடியோவாகவும் போட்டோஸ்களாகவும் எடுத்துவைத்திருக்கிறார்.

ஆபாசப் படம்
ஆபாசப் படம்
representational image
சென்னை: `நான் தற்கொலை செய்யப்போகிறேன்' - மனைவிக்கு போன் செய்துவிட்டு உயிரை மாய்த்த போலீஸ் எஸ்.ஐ

குணசீலனின் நடவடிக்கைகள் வேறு திசையில் செல்வதையறிந்த மாணவி, அவருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்திருக்கிறார். உடனே குணசீலன், தன்னிடமுள்ள மாணவியின் வீடியோக்களைக் காண்பிடித்து மிரட்டியிருக்கிறார். அதில் ஒரு கட்டமாகத்தான் மாணவியின் அம்மாவுக்கு வந்த `உன் பெற்றோரிடம் சொல்லட்டுமா?’ என்ற எஸ்.எம்.எஸ்ஸையும் அனுப்பிவைத்திருக்கிறார். இந்த மிரட்டலுக்கு பயந்து மாணவி, தன்னுடைய விருப்பத்தின்படி நடந்துகொள்வாள் என்று குணசீலன் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், மாணவி தற்கொலை செய்துகொண்டதும் பயந்துபோன குணசீலன், செல்போனில் இருந்த மாணவி தொடர்பான தடயங்களை அழித்துவிட்டு, வேறு வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஆனால், அடையாறு சைபர் க்ரைம் போலீஸார் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஆதாரங்களைத் திரட்டி, குணசீலனைக் கைதுசெய்து சிறையிலடைத்திருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு