Published:Updated:

சென்னை:`சொல்லிப் பார்த்தேன் கேட்கலை..!’ - மாநகராட்சி அலுவலகத்தில் திருடிய `அலர்ட்’ ஆறுமுகம்

அலர்ட் ஆறுமுகம்
அலர்ட் ஆறுமுகம்

சென்னை மாநகராட்சியின் வார்டு அலுவலகத்தைப் பூட்டாமல் சென்ற ஊழியர்களை அலர்ட் செய்ய, எதிர்வீட்டில் குடியிருக்கும் ஆறுமுகம் என்பவர் கம்ப்யூட்டர்களைத் திருடியிருக்கிறார். தற்போது ஆறுமுகம் சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.

சென்னை, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, கிருஷ்ணமூர்த்தி சாலையில் சென்னை மாநகராட்சியின் 4-வது மண்டலத்தின் கட்டுப்பாட்டில் 35-வது வார்டு அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இந்த அலுவலகத்தில் கடந்த 3.11.2020-ல் இரண்டு கம்ப்யூட்டர்கள், ஒன்பது பிளாஸ்டிக் சேர்கள் திருட்டுப்போனதாக உதவிப் பொறியாளர் பிரகாஷ் என்பவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்கு பதிந்து விசாரித்தார்.

சிசிடிவி
சிசிடிவி
Representational Image

அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது மாநகராட்சி வார்டு அலுவலகத்தின் எதிர் வீட்டில் குடியிருக்கும் ஆறுமுகம் (45) என்பவர் கம்ப்யூட்டர்களையும், பிளாஸ்டிக் நாற்காலிகளையும் திருடிக்கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. உடனடியாக அவரைப் பிடித்த போலீஸார், ஆறுமுகத்திடம் விசாரித்தனர். அப்போதுஅவர் கூலாக, `நான்தான் திருடினேன்' என்று பதிலளித்திருக்கிறார்.

சென்னை: `திருட்டு செல்போன்கள்... வேலை தேடுபவர்கள் டார்க்கெட்' - தடம் மாறிய இன்ஜினீயரின் வாழ்க்கை!

அதைக்கேட்ட போலீஸார், `எதற்காகத் திருடினீர்கள்? என்று கேட்டதற்கு, `இந்த ஆபீஸை யாரும் பூட்டுவதில்லை. நானும் பல தடவை சொல்லிப் பார்த்தேன். ஆனால் யாரும் கேட்கவில்லை. ஆபீஸிலிருக்கும் பொருள்களைத் திருடிய பிறகாவது பூட்டுவார்களா என்றுதான் கம்ப்யூட்டரையும் சேர்களையும் திருடினேன்' என்று ஆறுமுகம் கூறியிருக்கிறார்.

கைது
கைது
Representational Image

அரசு அலுவலகத்தில் ஒரு குண்டூசியைத் திருடினாலும் அது திருட்டுத்தான். அதனால் ஆறுமுகத்தை போலீஸார் கைதுசெய்து அவரிடமிருந்து கம்ப்யூட்டர்கள், சேர்களைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். மாநகராட்சி அதிகாரிகளையும், ஊழியர்களையும் அலர்ட் செய்வதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் திருடியதாகக் கூறிய ஆறுமுகம், தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு