Published:Updated:

`கொள்ளையடித்த பணத்தில் வீடுகளை வாங்கினோம்!'- செல்போன் சிக்னலால் சிக்கிய சிவகங்கை தாய், மகன்

கொள்ளை நடந்த வீட்டுக்குள் சென்றுவிட்டு வாலிபர் ஒருவர் கையில் நகை, பணத்தோடு வரும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. இதையடுத்து அவர்கள் யார் என்ற விசாரணையில் போலீஸார் இறங்கினர்.


தாய் சாந்தியுடன் மகன் நாகராஜ்
தாய் சாந்தியுடன் மகன் நாகராஜ்

சென்னை வளசரவாக்கம், ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் கௌரி. இவரது வீட்டின் பூட்டை உடைத்து கடந்த 4.10.2019-ல் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதுகுறித்து கௌரி, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வளசரவாக்கம், வேலன்நகரைச் சேர்ந்த அபுபக்கரின் வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இவர், கடந்த 22.10.2019-ல் வீட்டைப் பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டார். மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

நாகராஜ்
நாகராஜ்

இதுகுறித்து அபுபக்கர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 23.10.2019 அன்று புகார் கொடுத்தார். இவ்வாறு வளசரவாக்கம் பகுதிகளில் பூட்டிக் கிடக்கும் வீடுகளில் பட்டப்பகலில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துவந்தததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமைவீரன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன், காவலர் ஹரிதாஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் கொள்ளை நடந்த வீடுகளின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, கொள்ளை நடந்த வீட்டின் அருகே நீண்ட நேரம் ஒரு பெண் நிற்கும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும், கொள்ளை நடந்த வீட்டுக்குள் சென்றுவிட்டு வாலிபர் ஒருவர் கையில் நகை, பணத்தோடு வரும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. இதையடுத்து அவர்கள் யார் என்ற விசாரணையில் போலீஸார் இறங்கினர்.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா

தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்குள் அவர்கள் இருவரும் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனால் அந்த தனியார் நிறுவனத்தில் போலீஸார் விசாரித்தனர். அப்போது அந்தப் பெண்ணும் வாலிபரும் வேலைகேட்டு வந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அவர்களின் முகவரியைக் கேட்டபோது, `முகவரி இல்லை. செல்போன் நம்பர் மட்டும் இருக்கிறது' என்று கூறியுள்ளனர்.

அந்த செல்போன் நம்பரின் சிக்னல், சிவகங்கை மாவட்டம், காளவாய்பொட்டல் பகுதியைக் காட்டியது. உடனடியாக தனிப்படை போலீஸார் அங்கு சென்றனர். விசாரணையில் காளவாய்பொட்டல், திருவள்ளூர் தெருவைச் சேர்ந்த சாந்தி, அவரின் மகன் நாகராஜ் ஆகிய இருவரும் சேர்ந்துதான் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸார் அங்கு வருவதை தெரிந்த நாகராஜும் சாந்தியும் தலைமறைவாகிவிட்டனர்.

நாகராஜ்
நாகராஜ்

இந்த நிலையில், வளசரவாக்கம் பகுதியில் இருவரும் தலைமறைவாக இருக்கும் தகவல் கிடைத்தது. அங்கு சென்று இருவரையும் போலீஸார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர்.

`பெண் வீட்டினரைச் சமாளிக்க வைர நெக்லஸ்!' - திருட்டு வழக்கில் சிக்கிய புதுமாப்பிள்ளை வாக்குமூலம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``சாந்தியும் அவரின் மகன் நாகராஜும் பூட்டிக் கிடக்கும் வீடுகளில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர். வளசரவாக்கம் பகுதியில் கௌரி, அபுபக்கர் ஆகியோரின் வீடுகளில் இவர்கள் இருவரும் கொள்ளையடித்துள்ளனர்.

சிசிடிவியில் சிக்கிய நாகராஜ்
சிசிடிவியில் சிக்கிய நாகராஜ்

சிவகங்கையிலிருந்து சென்னைக்கு வந்த இவர்கள், வேலை கேட்பதுபோல தனியார் நிறுவனங்களுக்குச் செல்வார்கள். அப்போது அந்தப்பகுதியில் பூட்டிக்கிடக்கும் வீடுகளை முதலில் நோட்டமிடுவார்கள். பிறகு சாந்தி, வெளியில் நின்று யாராவது வருகிறார்களா என்று கண்காணிப்பார். அந்தச் சமயத்தில் இடுப்பில் கம்பியை மறைத்துக்கொண்டு செல்லும் நாகராஜ், அந்தக் கம்பி மூலம் வீட்டின் பூட்டை சர்வசாதாரணமாக உடைத்து உள்ளே செல்வார். பிறகு நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு வெளியில் வருவார். அதன்பிறகு இருவரும் சென்னையிலிருந்து எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

இவர்கள், சொந்த ஊருக்கு எப்போதாவதுதான் செல்வார்கள். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டபிறகு வேறு மாவட்டங்களுக்கு சென்று விடுதியில் அறை எடுத்து தங்குவது வழக்கம். அங்கேயும் வேலை கேட்டுச் செல்வதுபோல நோட்டமிட்டு கைவரிசை காட்டுவார்கள். அதன்பிறகு அங்கிருந்து வேறு மாவட்டத்துக்குச் சென்றுவிடுவார்கள். இப்படி தொடர்ந்து கைவரிசை காட்டி வந்த தாயும் மகனும் நீண்ட காலமாக போலீஸாரிடம் சிக்கவில்லை.

சிசிடிவியில் சிக்கிய நாகராஜ்
சிசிடிவியில் சிக்கிய நாகராஜ்

இந்தச் சமயத்தில்தான் சில மாதங்களுக்கு முன்பு நாகராஜ் புதிய செல்போன் ஒன்றை ஆசைப்பட்டு வாங்கியுள்ளார். அந்தச் செல்போன்தான் இருவரையும் போலீஸாரிடம் சிக்க வைத்துவிட்டது. இல்லையெனில் இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்திருப்பார்கள். இவர்கள் மீது காரைக்குடி. மதுரை, சிவகங்கை எனப் பல பகுதிகளில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து 8 சவரன் நகைகள், 75,000 ரூபாய் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் இருவரும்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட தகவல் கிடைத்துள்ளது. நாகராஜ், சிறுவயது முதலே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். அப்போது அவரைக் கைது செய்த போலீஸார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர். அதன்பிறகும் திருந்தாமல் தாயுடன் சேர்ந்து நாகராஜ் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளார். வளசரவாக்கம் பகுதியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்கின்றனர்.

கோடிகளில் கொள்ளை... நடிகைகளுடன் கும்மாளம்!

சாந்தியிடமும் நாகராஜிடமும் போலீஸார் விசாரித்தபோது, கொள்ளையடித்த நகை, பணம் ஆகியவற்றைக் கொண்டு 4 வீடுகளை வாங்கியுள்ளோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். மேல்மருவத்தூர், மதுரை, சிவகங்கைப் பகுதிகளில் இவர்களுக்குச் சொந்தமாக வீடுகள் இருப்பதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

`இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல தகவல்கள் வெளியாகும்' என்று எதிர்பார்க்கப்படுகிறது.