சென்னை: `பாலியல் தொல்லை; கூலிப்படை ஏவி மருமகனைக் கொன்ற மாமியார்!' - ஓராண்டுக்குப் பிறகு கைது

சென்னையில் பாலியல் தொல்லை கெடுத்த மருமகனைக் கூலிப்படை மூலம் கொலை செய்த வழக்கில் ஓராண்டுக்குப் பிறகு மாமியார் சகுந்தலாவை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.
சென்னை திருவல்லிக்கேணி, அனுமந்தபுரம் வி.ஆர்.பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (31). இவர் கடந்த 10.10.2019-ல் ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியிலுள்ள மைதானத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார். இது குறித்து ஆவடி டேங்க் ஃபேக்டரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கார்த்திக் (28), குமார் ( 30), அரவிந்த் (20) ஆகிய மூவரும் சேர்ந்து பிரகாஷைக் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் பிரகாஷின் மாமியார் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சகுந்தலா (42) என்பவர் கூறியதால்தான், பிரகாஷைக் கொலை செய்தோம் என்று கூறியிருக்கிறார்கள். அதனால் பிரகாஷின் மாமியாரை போலீஸார் தேடினர். திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த சகுந்தலா, கடந்த ஓராண்டாக பல்வேறு இடங்களில் பதுங்கி தலைமறைவாகவே இருந்தார். அதனால் ஆவடி டேங்க் ஃபேக்டரி போலீஸார் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சகுந்தாவைத் தேடிவந்தனர்.
இந்தச் சமயத்தில் சகுந்தலா குறித்த ரகசியத் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் அவரைப் பிடித்து ஆவடி டேங்க் ஃபேக்டரி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் சகுந்தலா அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சகுந்தலாவின் மகளை பிரகாஷுக்குத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். திருவல்லிக்கேணியில் ஒன்றாகக் குடியிருந்துவந்திருக்கிறார்கள். அப்போது சகுந்தலாவின் இளைய மகளிடம் பிரகாஷ் அநாகரிகமாக நடந்திருக்கிறார். அதை சகுந்தலா கண்டித்திருக்கிறார். அப்போது சகுந்தலாவுக்கும் பிரகாஷ் பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்திருக்கிறார்.

பிரகாஷின் இந்தச் செயலை சகுந்தலா கண்டித்தும், அவர் திருந்தவில்லை. அதனால்தான் சகுந்தலா, கூலிப்படையை ஏவி பிரகாஷைக் கொலை செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதனால் சகுந்தலாவைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.
மகளுக்கும் மாமியாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்த மருமகன் கூலிப்படை ஏவி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தில் ஓராண்டுக்குப் பிறகு மாமியார் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.